– எம்.எஸ். விஸ்வநாதனின் நெகிழ்ச்சியான அனுபவம்
கோவையிலிருந்த என் ஆசான் எஸ்.எம். சுப்பையா நாயுடு மெட்ராசுக்கு செட்டிலாக வந்தார். வளர்ச்சி அடைந்திருந்த என்னைப் பார்த்து அவருக்கு ரொம்ப சந்தோஷம். இன்னும் மேலே மேலே வரணும்னு என்னை வாழ்த்தினார்.
‘மலைக்கள்ளன்’ படத்தில் “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…” ‘நாடோடி மன்னன்’ படத்தில் “தூங்காதே தம்பி தூங்காதே….” என அவர் இசையமைத்த எல்லா பாடல்களும் ஹிட்.
‘அன்னையின் ஆணை’ படத்தில் “அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை…” இப்படிப் பல படங்களில் பாப்புலர் பாட்டுக்களைத் தந்தார்.
இருந்தாலும், அவருடைய இறுதிக் காலத்தில் வறுமை நிலையில் வாடினார்.
சுப்பராமன் சாரிடம் என்னைச் சேர்த்துவிட்டு எனக்கு வாழ்வு தந்த நாயுடு சார் வறுமையில் வாடுவதா… என நான் துடித்துப் போனேன்.
என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கெல்லாம் நன்றிக்கடன் செலுத்த முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தணித்துக் கொள்ளும் வாய்ப்பாக அண்ணன் சுப்பையா நாயுடுவுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்தேன்.
கலையுலகப் பிரமுகர்களிடம் நிதி திரட்டி அவருக்குப் பெரிய பாராட்டு விழா நடத்திக் கௌரவிக்க உடனே செயலில் இறங்கினேன்.
திருவாளர்கள் எஸ்.எஸ்.வாசன், ஏவி. மெய்யப்பச் செட்டியார், வாசு மேனன், டி.ஆர். சுந்தரம் போன்றவர்கள் பெரிய மனதுடன் கணிசமான நிதி அளித்து உதவினார்கள்.
எம்.ஜி.ஆர். தலைமையில் பாராட்டு விழா… அந்த காலத்தில் ஜூபிடர் ஃபிலிம்ஸில் இருக்கும்போதிலிருந்தே எம்.ஜி.ஆர்., சுப்பையா நாயுடு, நான் எல்லோரும் மாசச் சம்பளத்தில் வேலை பார்த்தவர்கள். அதனால் நெருக்கமான பழக்கம் உண்டு. இந்த விழாவுக்கு சிவாஜி கணேசனையும் அழைத்திருந்ததேன்.
சிவாஜி படங்களுக்கு நாயுடு அதிகம் பணிபுரிந்திராவிட்டாலும், எனக்காக சிவாஜி வந்ததை நன்றியோடு இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.
“விஸ்வநாதன் நன்றி உள்ளவர் – அதனால்தான் அவர் நன்றிக் கடனாகத் தன் குருநாதருக்குச் சரியான நேரத்தில் செய்திருக்கிறார்” என எம்.ஜி.ஆர். பேசினார்.
அவர் சொன்னதுபோல, நாயுடு சாருக்கு விழா எடுத்து ஓரளவுக்கு வறுமையைப் போக்கியதில் என் மனதில் ஒரு நிறைவு.
இந்த விழாவுக்குப் பிறகு எங்க குடும்பத்தோட ரொம்ப நெருங்கிய உறவுக்காரர் மாதிரி ரொம்ப பாசத்தோடு இருந்தார் சுப்பையா நாயுடு. அடிக்கடி நாங்கள் சந்தித்து சந்தோஷமாகப் பேசிக்கொள்வதுண்டு.
எம்.எஸ்.விஸ்வநாதனின் ‘நான் ஒரு ரசிகன்’ நூலிலிருந்து ஒரு பகுதி.
– நன்றி: விகடன் பிரசுரம்