வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தியா
‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.
ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-3’ விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது. பிறகு நிலவுவட்டப் பாதைக்கு மாற்றப்பட்டு, படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து ‘விக்ரம் லேண்டர்’ கருவி பிரிக்கப்பட்டது. இந்த ‘லேண்டர்’, இன்று (புதன்கிழமை ஆகஸ்ட் – 23) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது.
இந்தச் செயல்பாடுகள் சவால் நிறைந்தவை என்பதால், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ‘சந்திரயான்-3’ குழுவினர், விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் ஆகியோர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
ஏற்கனவே ‘சந்திரயான்-2’ விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட ‘ஆர்பிட்டர்’ கருவி, தற்போதைய ‘லேண்டர்’ கருவியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது, சாதகமான சூழ்நிலையாக கருதப்படுகிறது.
இரண்டும் தங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் திட்டமிட்டபடி மாலை 6 : 4 மணிக்கு வெற்றிகரமான நிலவில் தரையிறங்கியது சந்திரயான் – 3 விண்கலத்தின் லேண்டர் கருவி.
இதையடுத்து இந்தத் திட்டம் வெற்றிபெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார்.
இதனிடையே இந்த திட்டத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் கிடைத்த வெற்றி என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.