எஸ்.ஏ.ராஜ்குமார்: பூந்தென்றலே நீ பாடிவா!

இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு

காளிதாசன் கம்பனோட
வாழ்ந்த தலைமுறை நாங்க
கண்ணதாசன் தொடங்கி வச்ச
பாட்டு பரம்பர
ஏகபோக அரசர்கள் எல்லாம் இருக்கும் உலகிலே
இந்த ஏகலைவன் பாட்டும் கூட
ஜெயிக்கும் நடுவிலே…

வாழ்க்கையில பாட்ட படிச்சோம்
வாழ்க்கையத்தான் பாட்டா படிச்சோம்…

ரோட்டுல படிக்கிற பாட்டு
நாளை ராஜ்ஜியம் புடிக்கிற பாட்டு பாட்டு…

உழைக்கும் மக்களின் பாடுகளையெல்லாம் பாட்டாய் படித்தவன், பாமரர்களின் பாட்டுடைத் தலைவன் பட்டுக்கோட்டை….

அவன் தடம் பற்றி, பின்னால் நிறைய கவிஞர்கள் வழி நடந்தார்கள்… பட்டுக்கோட்டையின் பாடல் வரிகளை வழிமொழிந்தார்கள்… அதன் மிச்சம் ஒரு பகுதிதான்,

”நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு”
– என்ற எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சூழலை விளக்கும் பாட்டு…

இந்தப் பாடல் வரிகளுக்கும், இசைக்கும் சொந்தக்காரர் எஸ்.ஏ.ராஜ்குமார்.

சென்னையில் செல்வராஜன் – கண்ணம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த ராஜ்குமாரின், பூர்வீகம் நெல்லை மாவட்டம், பேட்டையாகும். தந்தை செல்வராஜன் மேடைப்பாடகர்.

இளையராஜா, கங்கை அமரன், தேவா போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் நடத்திய மேடைக் கச்சேரிகளில் பாடியவர்.

சிறுவயதிலேயே ராஜ்குமாருக்கு சங்கீதத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டது. சுப்பையா பாகவதர் என்பவரிடம் முறைப்படி சாஸ்திரீய சங்கீதத்தைக் கற்றுக் கொண்டார் ராஜ்குமார்.

பல தேடல்களுக்குப் பிறகு இயக்குனர்கள் ராபர்ட் – ராஜசேகர், 1987-ஆம் ஆண்டு தாங்கள் இயக்கிய ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ படத்தில் ராஜ்குமார் இசையமைக்க வாய்ப்பு வழங்கினார்.

அனைத்துப் பாடல்கள் அருமையாக அமைந்தன. தொடர்ந்து சூர்யவம்சம், அவள் வருவாளா, மனசுக்குள் மத்தாப்பூ எனத் தொடங்கி, ராஜ்குமாரின் இசைப்பயணம் தொடர்கிறது.

இயக்குனர் விக்ரமன், ராஜ்குமாருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கினார்.

மனசுக்குள் மத்தாப்பூ படத்தில் ‘பூந்தென்றலே நீ பாடிவா’ என்ற பாடல் பூந்தென்றல் வருடுவது போலவே இருக்கும்.

தூங்காத கண்களால்
நீங்காமல் காண்கிறேன்
நீதானே என் காலைகளின்
சூர்யோதயம்..
தாங்காமல் பெண் உனை
தாலாட்டு கேட்கிறேன்
நீயில்லையேல் பாவை மனம்
பாலை வனம்…

– ராஜ்குமாரின் கற்பனையில் காதல் வழியும். வரிகள், காதலிக்காதவர்களையும் காதலிக்கத் தூண்டும்.

சூர்யவம்சத்தில் ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..’ பாடலில் இளம் வயது ஞாபகங்களை இசை தொட்டிலில் தாலாட்டி விட்டுப் போகும்…

இப்படி எத்தனையோ பாடல்கள், உடலையும், மனதையும் வருடும் மயிலிறகாய் மாறி, இன்பவானில் சிறகடிக்க வைக்கும்.

இசை என்றாலே அது மெல்லிசைதான் என்பார்கள், இசை அறிஞர்கள். ரசிகர்களும் அதை ஆமோதிப்பார்கள். எஸ்.ஏ.ராஜ்குமாரின் எல்லா மெல்லிசைப் பாடல்களிலும் தென்றல் கைபிடித்து நடக்கும். மனமோ கைதட்டி ரசிக்கும்.

(பிரபல இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் பிறந்த நாள் (ஆகஸ்ட் 23, 1964 இன்று)

✍️ லாரன்ஸ் விஜயன்

Comments (0)
Add Comment