தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் இடம்பெற்ற தேன்!

திருவண்ணாமலையின் வடமேற்குத் திசையில், கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஜவ்வாதுமலை. கடல் மட்டத்தில் இருந்து 2300 – 3000 அடி உயரத்தில் உள்ள இம்மலையில் அரியவகை மூலிகைகள் உள்ளன.

ஆசியாவின் மிகப்பெரும் வானிலை ஆய்வு மையம், பீமா நீர்வீழ்ச்சி, திப்பு சுல்தான் கோட்டை, குள்ளார் குகைகள், கண்ணாடி மாளிகை என இந்த மலைக்கு பல்வேறு அடையாளங்கள் உள்ளன.

அவை எல்லாவற்றிலும் மேலானதாக ஜவ்வாதுமலையின் தனித்துவம் மிக்க அடையாளங்களாகத் திகழ்வது சந்தனம், தேன், தினை, சாமை ஆகியவை.

தொடர் களவுகளால் காணாமல் போனது சந்தனம். ஆனாலும், எடுக்க எடுக்கக் குறையாக அமிழ்தமாக சுரக்கிறது ஜவ்வாதுமலைத் தேன். எனவே தான், ‘தேன் இளவரசி’ என ஜவ்வாது மலையை அழைக்கின்றனர்.

இந்த மலையின் அதிகபட்ச வெப்ப நிலை 36.6 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெப்பநிலை 20.7 டிகிரி செல்சியஸ் முதல் 26.0 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். ஆண்டு சராசரி மழையளவு 1,100 மி.மீ.

இந்த பருவநிலைக்கு உகந்ததான சாமை, தினை, கேழ்வரகு, கொள்ளு, புளி, மா, கொய்யா, பலா, சீதாப்பழம், விளாம்பழம், லிச்சி, மிளகு போன்றவற்றை இங்குள்ள மலைவாழ் மக்கள் சாகுபடி செய்கின்றனர்.

ஆனாலும், சாகுபடி செய்யாமலே கிடைக்கும் மகத்துவமான கொடையாக அமைந்திருக்கிறது தேன்.

ஜவ்வாது மலையின் 46,429 ஹெக்டர் அடர் வனப்பகுதியில், விண் நோக்கி செழித்திருக்கும் மரங்களில் அடை அடையாக தேன் கூடுகள் தொங்கும் காட்சிகளால் நம் விழிகள் வியப்பில் விரியும். நாவில் சுவைநீர் கசியும்.

மலைப்பாறைகளின் கூட்டில் கிடைப்பவை மலைத் தேன். மரக்கிளைகளின் கூட்டில் கிடைப்பவை கொம்புத் தேன். மலர்களில் இருந்து மதுவை உண்டபின், தேனீ வெளியிடும் எச்சில்தான் தேனாகிறது.

தேனீக்கள் எந்தெந்த மலர்களில் இருந்து மது குடிக்கிறதோ, அந்த மலர்களின் குணம் தேனில் இடம் பெறும். எனவே, பருவநிலை, மலர்கள் போன்றவற்றின் அடிப்படையில் தேன் சுவை மாறும்.

மலருக்கும் வலிக்காமல், மகரந்த சேர்க்கையை நிகழ்த்திவிட்டு, தேனீ நமக்களிக்கும் மகத்துவமான அரு மருந்துதான் நாம் சுவைக்கும் தேன். உழைப்பின் உருவகம் தேனீ. 

நாளொன்றுக்கு 20 ஆயிரம் முறை குறுக்கும், நெடுக்குமாக திசையெங்கும் பறந்து, மலர்களில் இருந்து மதுவைக் குடித்து தேனாகத் தருகிறது.

மலைத் தேனீ, கொம்புத்தேனீ ஆகியவை உருவில் பெரியது.

பெட்டிகளில் அடைத்து வளர்க்க முடியாது. இந்தியத் தேனீ எனப்படும் அடுக்குத்

தேனீ, கொசுத் தேனீ, இத்தாலிய தேனீ ஆகியவை உருவில் சிறியது. பெட்டியில் வளர்க்க ஏதுவானது. ஜவ்வாது மலையில் மலைத் தேனீ, கொம்புத் தேனீ ஆகியவை, ஆண்டு முழுதும் கிடைக்கிறது.

குறிப்பாக ஜனவரி முதல் மார்ச் வரை மலர்கள் பூத்துக் குலுங்கும் காலம் என்பதால், இந்தப் பருவத்தில் அதிக தேன்கூடுகள் காணப்படும்.

மலைவாழ் மக்கள் பெட்டித் தேனீ வளர்ப்பிலும் ஈடுபடுகின்றனர். மழைக் காலங்களை விட, வெயில் காலங்களில் கிடைக்கும் தேன் கூடுதல் சுவையுடையது.

ஒவ்வொரு கூட்டிலும் சுமார் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும். பாறை இடுக்குகளில் உள்ள மலைத்தேன் கூடுகளில், அதிக பட்சம் ஒரு லட்சம் தேனீக்கள் வரை இருக்கும். சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள மலர்களின் வாசனையையும் தேனீக்கள் உணரும்.

ஜவ்வாதுமலை பகுதியில் சிறு, சிறு குடியிருப்புகளாக 278 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் சுமார் 50 ஆயிரம் பழங்குடியின மக்களின் பிரதான வாழ்வாதாரம் தேன். பாறைகள் மற்றும் மரக் கிளைகளில் இருந்து தேன் கூடுகளில் தேனீக்களை விரட்டி விட்டு தேனடைகளை எடுக்கின்றனர்.

அடையில் இருந்து பிழியப்படும் தேன், இளம் சூட்டில் பக்குவப்படுத்தப்படுகிறது. அதிலிருக்கும் மெழுகு, இறந்த தேனீ, இலை, பூ, அழுக்கு போன்ற தேவையற்றவைகளை நீக்கி, தூய்மையான தேன் விற்பனை செய்யப்படுகிறது.

பழங்குடியின மக்கள், கூட்டில் இருந்து தேன் எடுக்க எளிய முறைகளைக் கையாளுகின்றனர். உலர்ந்த தென்னை நாரினை தீயிட்டுக் கொளுத்தி அதிலிருந்து வெளியாகும் புகையைத் தேன் கூட்டின் மீது படர விடும்போது, அதிலிருந்து தேனீக்கள் விலகிவிடுகின்றன.

பின்னர், அடை உடைந்து விழாமல் பக்குவமாக எடுத்து தேன் பிழிகின்றனர். அந்தி சாயும் நேரங்களில்தான் தேன் எடுக்கும் பணியில் மலை வாழ் மக்கள் ஈடுபடுகின்றனர்.

வீரப்பனூர், பலாமரத்தூர், கானமலை, கல்லாத்தூர், மேல் சிலம்படி, கீழ் சிலம்படி, குட்டக்கரை போன்ற மலை கிராமங்களில் அதிக அளவில் கொம்புத் தேன் கிடைக்கிறது.

மலைவாழ் மக்களிடம் இருந்து தேனை கொள்முதல் செய்து, அக்மார்க் முத்திரையுடன் சந்தைப்படுத்தும் பணியில், அரசு மற்றும் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த பல்வேறு அமைப்புகள் ஜவ்வாதுமலையில் செயல்படுகின்றன.

ஜவ்வாதுமலைப் பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் தேன் சப்ளை செய்கிறது.

ஜவ்வாதுமலை தேனுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பு உண்டு. மேலும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ஜவ்வாதுமலைத் தேன் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஜவ்வாதுமலை தேன் கலப்படமற்றது. இயற்கை முறையில் சுத்திகரிக்கப்படுகிறது. அதோடு, அங்குள்ள மலர்களின் மருத்துவ குணம், தேனின் சுவையை பன்மடங்காகக் கூட்டுகிறது.

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவத்திலும், உணவு முறையிலும் முக்கிய இடம் பெற்றது தேன். பல்வகை நோய் தீர்க்கும் இயற்கையின் அருமருந்தாகவும் பயன்படுகிறது.

குறிப்பாக, மலைத்தேன் மருந்துக்கு நல்லது. எனவே, ஜவ்வாதுமலைத் தேன் உலகளாவிய வரவேற்பையும் சிறப்பையும் பெற்றிருக்கிறது.

-கி.வினோத்குமார் 

– நன்றி: தினகரன் பொங்கல் மலர்

Comments (0)
Add Comment