ஸ்மார்ட் மின் மீட்டர் சாமானியர்களுக்கு சாதகமா, பாதகமா?

தமிழ்நாட்டில் ஆறு லட்சம் கி.மீ. தொலைவுக்கு மின் கம்பிகள் உள்ளன. மூன்று லட்சம் மின்மாற்றிகள் உள்ளன. 1900 துணை மின் நிலையங்கள் உள்ளன. இவை தமிழ்நாட்டில் 3 கோடியே 30 லட்சம் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கி வருகின்றன.

மின் நுகர்வை கணக்கிடும் வகையில், 2025ஆம் ஆண்டுக்குள் அனைத்தும் ஸ்மார்ட் மீட்டர்களாக மாறப் போகின்றன. மத்திய அரசின் நிதியுதவியுடன் இத்திட்டம் அமலாகிறது.

தமிழ்நாடு முழுவதும் 19 ஆயிரம் கோடி செலவில் மூன்று கட்டங்களாக ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் மட்டும் 59 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.

மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்குத் தேவையான 1.83 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டது. அடுத்த கட்டமாக மீட்டர்களை வாங்கும் நடவடிக்கைகளையும் மின்சாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

சென்னை தியாகராய நகரில் கடைகளிலும் வீடுகளிலும் பொருத்தப்பட்ட 1.3 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களின் செயல்பாடு வெற்றிகரமாக இருந்ததன் காரணமாக மாநிலம் முழுவதும் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்திய பிறகு அரசு நினைத்தால் மாதம் ஒருமுறை கட்டணம் செலுத்தும் நடைமுறையை அறிமுகப்படுத்தலாம்.

மின் பயன்பாட்டையும், அதற்கு உரிய கட்டணத்தையும் இணையத்தின் உதவியுடன் ஸ்மார்ட் மீட்டர் துல்லியமாகக் கணக்கிடும். ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின் பயன்பாட்டு கணக்குகள் தானாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழக அலுவலகத்தில் இருக்கும் கணினியில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட தேதியில் கணக்குகள் பதிவேற்றம் ஆகிவிடும்.

கட்டணம் செலுத்தாத ஒருவரின் இணைப்பைத் துண்டிக்க மின் பணியாளர் நேரில் செல்லத் தேவையில்லை. கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பை மின் வாரிய அலுவலகத்தில் இருந்தபடியே துண்டிக்க முடியும்.

அதேபோல அந்த நபர் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, தானாக 12 நொடிகளில் இணைப்பு மீண்டும் வழங்கப்படும். அலுவலக நேரம் அல்லாமல் வேறு எந்த நேரத்தில் தொகையைச் செலுத்தினாலும் 12 நொடிகளில் இணைப்பு சீர்செய்யப்படும்.

மேலும், ஒரு நபர் வீட்டு உபயோகத்துக்கு என மின் இணைப்பு பெற்று விட்டு அலுவலக பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டால், அதை எளிதில் கண்டறிய முடியும்.

மாலை 7 மணிக்கு மேல் தினமும் பயன்பாடு இல்லை என்றால் அதில் ஏதோ தவறு இருக்கிறது என ஸ்மார்ட் மீட்டர் மூலமாக அதிகாரிகள் கண்டறிந்துவிடுவார்கள்.

விலையை ஒப்பிட்டுப் பார்த்தால், சிங்கிள் ஃபேஸ் ஸ்மார்ட் மீட்டரின் விலை ரூ.6 ஆயிரம். ஆனால் தற்போதுள்ள சிங்கிள் ஃபேஸ் ஸ்டாடிக் மீட்டர் விலை ரூ.650. மூன்று ஃபேஸ் ஸ்மார்ட் மீட்டரின் விலை ரூ.10 ஆயிரம்.

அதுவே மூன்று ஃபேஸ் ஸ்டாடிக் மீட்டர் விலை ரூ.1600. தற்போதுள்ள ஸ்டாடிக் மீட்டர்களில் ஒரு சிம் பொருத்தினால் போதும், தொலைவிலிருந்தவாறே மின் பயன்பாட்டைக் கண்காணிக்கலாம்.

அப்படித்தான் துணை நிலைய மின் பயன்பாட்டைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் தெரிந்துகொள்கிறது.

அப்படியிருக்கும் போது 19 ஆயிரம்கோடி செலவில் ஸ்மார்ட் மீட்டர் எதற்கு என்று கேட்கிறார் தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.காந்தி.

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மின் வாரிய ஊழியர்கள் சங்கம், இது தனியார்மயத்தின் முதல் படி என்கிறது.

மேலும், “எதிர்காலத்தில் மின் கட்டணத்தைத் தனியார் நிர்ணயிக்கும் நிலை ஏற்படும். ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் தனியார் நிறுவனங்களுக்கு பராமரிப்பு செலவை தமிழ்நாடு மின்வாரியம் செலுத்த வேண்டும் என்பது அபத்தம்.

ஏற்கெனேவ நிதிச்சுமையில் திண்டாடி வரும் வாரியத்துக்கு இது கூடுதல் பளுவாகும். தமிழ்நாட்டில் உள்ள கணக்கீடு பணியாளர்கள் 6 ஆயிரம் பேரின் வேலை பறிபோகும்.

எதிர்காலத்தில் இதை ப்ரீபெய்டு மீட்டராக மாற்றும் திட்டமும் உள்ளது. மின் பயன்பாடு அதிகமுள்ள காலை மற்றும் மாலை நேரத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும்,” என்று மின்வாரிய ஊழியர் சங்கத்தினர் எச்சரிக்கின்றனர்.

இதனிடையே, தமிழகத்தில் ஒரே கட்டமாக 3.3 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

அனைத்து மின் இணைப்புகளுக்கும் பொருத்தும் வகையில் ஒரே கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு டெண்டர் விட தீர்மானித்த தமிழக அரசு, கடந்த ஜூன் மாதம் டெண்டர் கோரியது. ஆனால் இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களை நிறுவனங்கள் எழுப்பியதால் ரத்து செய்யப்பட்டது.

தற்போது விதிகளில் பல்வேறு மாற்றங்களை செய்து புதிய டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் கோரியுள்ளது.

அதன்படி, அடுத்த 10 ஆண்டுகளுக்கு மின் மீட்டரை பொருத்துதல், ஒருங்கிணைத்தல், பராமரித்தல், தகவல் தொடர்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் வகையில் டெண்டர் கோரும் நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு இறுதிக்குள் டெண்டரை இறுதி செய்து விட வேண்டும். அதன்பிறகு எவ்வளவு விரைவாக முடியுமோ, அந்த அளவிற்கு விரைவாக ஸ்மார்ட் மின் மீட்டர்களை முழுமையான அளவில் அமல்படுத்த வேண்டும்.

அதாவது, அனைத்து வீடுகளிலும் மின் இணைப்பை டிஜிட்டலுக்கு மாற்றி விட வேண்டும். அதற்கேற்ப நிறுவனங்கள் மும்முரம் காட்ட வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: வேல்ஸ் மீடியா இணையதளம்

Comments (0)
Add Comment