வித்தியாசமான படைப்பாளி விஜய் ஆண்டனி!

“எனக்கு இசை பிடிக்கும் கத்துகிட்டேன். ஆனா அதே சமயம் எனக்கு நேச்சுரல் டேலண்ட் கிடையாது. இப்ப ஒருத்தர் ஏதோ ஒரு விஷயத்தை செய்யறாரு, முதல் தடவையே சரியா செஞ்சுருவாரு.

ஆனா நான் 5 தடவை 10 தடவை முயற்சி செஞ்சாத் தான் எனக்கு சரியான ரிசல்ட் வரும். அப்படி முயற்சி செஞ்சு தான் மியூசிக் பண்றேன்” சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் இப்படி சொல்லியிருப்பார் விஜய் ஆண்டனி.

2005-ல் அறிமுகமான ‘சுக்ரன்’ படத்திலேயே தன்னை நிரூபித்தவர் விஜய் ஆண்டனி. எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய படத்தில் தளபதி விஜய் கெஸ்ட் ரோலில் நடித்ததால் விஜய் ஆண்டனிக்கு நல்லதொரு அறிமுகம் கிடைத்தது எனச் சொல்லலாம்.

முதல் படத்திலேயே இசை அமைத்து, பாடல் எழுதி, சொந்தக்குரலில் பாடி அசத்தினார்.

அந்த படத்தில் பெப்பி சாங்கான “சப்போஸ் உன்னை காதலிச்சா”, “உன் பார்வை ஊட்டி ஆனது” பாடல்களும், அட்டகாச மெலடியான “உச்சி முதல் பாதம் வரை” பாடலையும் விஜய் ஆண்டனி தான் எழுதியிருந்தார்.

விஜய் நடனமாடும் “சாத்திக்கடி” சூப்பர் ஹிட் பாடலை பாடியது விஜய் ஆண்டனி தான். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்ததால் அடுத்தடுத்த படங்களை எதிர்பார்க்க வைத்தார் எனச் சொல்லலாம்.

அடுத்த வருடத்தில் சசியின் இயக்கத்தில் ‘ட்ஷ்யூம்’ படம் வெளியானது. இதிலும் அட்டகாசமான இரண்டு மெலடி பாடல்கள் இடம் பெற்றன.

“பூமிக்கு வெளிச்சம் எல்லாம்”, “நெஞ்சாங்கூட்டில் நீயே” இரண்டுமே அப்போதைய காதலர்களின் பெரு விருப்பப் பாடல். நெஞ்சாங்கூட்டில் இப்போது வரை பேவரைட்டான ஒன்று. அதே படத்தில் “கிட்டே நெருங்கி வாடி” தர லோக்கல் பாடலையும் கொடுத்திருந்தார்.

“டைலாமோ டைலாமோ” பாடலை விஜய் ஆண்டனியே எழுதி பாடியும் இருந்தார். “டி எம் கே நீயானால் ஏ டி எம் கே நானானால்” என ரகளையான வரிகளுடன் எழுதப்பட்ட பாடல் அது.

டிஷ்யூம் படம் எல்லாவிதமான உணர்வுகளும் இடம்பிடித்த பர்பெக்ட் காக்டெயில். அதே வருடத்தில் ‘இருவர் மட்டும்’ என்றொரு படம். சாதனா சர்கம், ஹரிஹரன் காம்போவில் 3 டூயட்கள் உண்டு. 

அடுத்த வந்த “நான் அவனில்லை” படத்திலும் எனக்கு மிக மிக பிடித்தமான “ஏன் எனக்கு மயக்கம்” பாடலும், “நீ கவிதை எனக்கு” பாடலும் அட்டகாச பாடல்கள். இந்த ஆல்பமே மிகப்பெரிய ஹிட். “மச்ச கன்னி” பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.

அடுத்த வந்த ‘காதலில் விழுந்தேன்’ படம் தான் சன் டிவி புண்ணியத்தில் அவரை தமிழகம் எங்கும் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது. “நாக்கு முக்க” பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்.

அந்த படத்தில் இடம்பெற்ற மெலடி பாடல்கள் அனைத்தும் காதலர்களின் தேசிய கீதமானது என்றால் மிகையே இல்லை. “தோழியா, என் காதலியா” ஹரிஷ் ராகவேந்திராவின் ஆல் டைம் பெஸ்ட் எனலாம்.

“உன் தலைமுடி உதிர்வதைக்கூட” பாடலும், திப்பு பாடிய “சொல்லடி எந்தன் இதயம்” பாடலும் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது.

பிரபல பாப் பாடகி ரிஹானாவின் பாடல் ஒன்றை முறையாக காப்புரிமை பெற்று இசையமைக்கப்பட்ட பாடல் தான் “உனக்கென நான் எனக்கென நீ” பாடல்.

தமிழ் சினிமாவில் ஆங்கிலப் பாடல் ஒன்று ரைட்ஸ் பெற்று ரீகிரியேட் செய்யப்பட்ட முதல் பாடல் இது தான் என்று நினைவு. அந்த ஆண்டுக்கான பிலிம்பேர் அவார்டை பெற்றுத் தந்தது.

இடையில் பந்தயம் படத்தில் “சின்ன மாமியே” பாடலையும், “சுராங்கனி” பாடலையும் ரீ மிக்ஸ் செய்திருந்தார். விஜய்காந்த் நடித்த “மரியாதை” படத்தில் “இன்பமே உந்தன் பேர் பெண்மையோ” பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார்.

Tn 07 படத்தில் அவர் கொடுத்த “ஆத்திச்சூடி” பாடல் அந்த ஆண்டின் மெகா ஹிட். “இந்த காலத்து பாட்டெல்லாம் கொலையா கொல்றாங்களே” என்று தன்னைத்தானே கிண்டல் செய்து கொண்ட பாடல்.

அடுத்து வந்த நினைத்தாலே இனிக்கும் ஆல்பம் மியூசிக்கல் ஹிட். “அழகாய் பூக்குதே” பாடல் இன்று வரையிலுமே ஆசம் பெஸ்ட். விஜய் ஆண்டனியின் நம்பர் ஒன் பாடல் என்று கண்ணை மூடிச் சொல்லலாம். “செக்சி லேடி”, “அல்லா”, விஜய் ஆண்டனியே பாடிய “பனாரஸ் பட்டு கட்டி” பாடல் ஒலிக்காத நாளே இல்லை.

தொடர்ச்சியான வெற்றிப் பாடல்களினால் தளபதி விஜயின் “வேட்டைக்காரன்” படம் கிடைத்தது. மீண்டும் சன் டிவி புண்ணியத்தில் அனைத்துப் பாடல்களும் மாஸ் ஹிட். “நான் அடிச்சா தாங்க மாட்ட” பாடல் அடுத்த தலைமுறை ரசிகர்களை விஜய்க்கு உருவாக்கியது. “புலி உறுமுது” பாடல் விஜய் ரசிகர்களுக்கானது.

“ஒரு சின்னத் தாமரை”, “கரிகாலன்” பாடலும் விஜய் ஆண்டனியின் ட்ரேட்மார்க் மெலடி வகை. விஜயின் “வேலாயுதம்” படமும் ஆல்பம் ஹிட் வகையறா தான்.

“மொளச்சு மூணு இலை” பாடல் ஆல் டைம் பேவரைட். “மாயம் செய்தாயோ” அவருடைய ட்ரேட்மார்க் பாடல், “சில்லாக்ஸ்” பாடல் ஹிட் நம்பர். “உத்தமபுத்திரன்” படப்பாடல்களும் ஹிட் நம்பர்ஸ் தான்.

இடையில் ஒன் சாங் வொண்டர் ஆல்பம் என்ற வகையில் சில படங்கள் வந்து போனது. அதில் முக்கியமானது “அவள் பெயர் தமிழரசி”. ” நீ ஒத்த சொல்ல சொல்லு” பாடல் ஆல் கிளாஸ் ஹிட்.

“ரசிக்கும் சீமானே” படத்தில் “நான் உன்னை பார்க்கும் நேரம்”, “யுவன் யுவதி”யில் “உன் கண்ணைப் பார்த்தபிறகு” பாடல்கள் என்ன படங்கள் என்றே தெரியாமல் தனிப்பாடலாக ஹிட் லிஸ்ட் ஆன நம்பர்ஸ்.

அங்காடித்தெரு படத்தில் விஜய் ஆண்டனி இரு பாடல்களுக்கு மட்டும் இசை அமைத்தார். அதில் ஒரு பாடல் “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை”.

அந்த விஜய் ஆண்டனியை யாராவது திரும்ப கூட்டி வந்தால் பரவாயில்லை என்று ஏங்க வைக்கும் அவ்வளவு அழகான பாடல்.

“வெடி” படத்தில் இடம்பெற்ற “இப்படி மழை அடித்தால்” பாடலும் அனைவரின் பேவரைட் லிஸ்ட்டில் இருக்கும் பாடல்.

ஜி வி பிரகாஷைப் போல “நான்” திரைப்படம் மூலம் நடிகரான பிறகு இசையில் அவருக்கு இறங்கு முகம் தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார்.

விஜய் ஆண்டனியின் மெலடி பாடல்கள் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவையாக இருக்கும். ஆனால் அவரிடத்தில் இருக்கும் முக்கியப் பிரச்சினை பாடல்களில் இசைக்கு பதிலாக புரியாத வார்த்தைகளை ஓசையாக்கி நிரப்புவது.

ஹாரிஸ் ஜெயராஜுக்கு கூட்டாளி இவர். “நெஞ்சாங்கூட்டில் ” போன்ற மெலடி பாடலில் கூட இதை செய்திருக்கிறார். கூடவே ஆங்கில ராப் பாடல் வரிகளையும் அதிகபட்சம் பயன்படுத்துபவர்.

இசையின் போதாமையால் இதை செய்கிறாரா அல்லது ஒரு பாடல் ஹிட்டானதால் தொடர்ந்து செய்தாரா அல்லது தனக்கென்று அடையாளத்துக்காக செய்தாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

அதே சமயம் ஏகப்பட்ட புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நிறைய புதிய பாடலாசிரியர்களை பயன்படுத்தியும் இருக்கிறார்.

தயாரிப்பாளர், நடிகர் அவதாரம் எடுத்த பிறகு அவரது இசையின் தரம் முன்பு போல் இல்லை என்பது பெரும்பாலானவர்களின் கருத்து.

இருந்தாலும் அவ்வப்போது “அரும்பே அரும்பே” போல் சில நல்ல பாடல்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

விஜய் டிவி “காதலிக்க நேரமில்லை” தொடருக்காக அவர் கொடுத்த டைட்டில் பாடலான “என்னைத் தேடி காதல்” பாடல் ஒரு சினிமா பாடலுக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. அந்த பாடலுக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள்

விஜய் ஆண்டனி ஹிட்ஸ் ப்ளே லிஸ்ட் கேட்டால் அட்டகாச பெப்பி சாங்ஸும், அருமையான மனதை மயக்கும் மெலடி பாடல்களையும் கேட்கலாம். அவரது இசைப்பயணம் தொடரவேண்டும் என்பதே இசை ரசிகர்களின் விருப்பம்.

– நன்றி: முகநூல் பதிவு.

Comments (0)
Add Comment