ஆகஸ்ட் 21: கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன் தோழர் ஜீவா பிறந்த நாள் இன்று…
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரன். கலைகள் பேசிய புலவன். நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவன். எளிய மனிதன்… புனிதன்!
* ஐந்தாம் ஃபாரம் படிக்கும்போதே பாடல்கள் இயற்றும் திறமை பெற்றிருந்தார். ‘காலுக்குச் செருப்புமில்லை… கால் வயித்துக் கூழுமில்லை… பாழுக்கு உழைத்தோமடா… பசையற்றுப்போனோமடா!’ என்ற இவரது பாட்டுதான் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் அனைவரையும் செங்கொடியின் கீழ் திரளவைத்த பாட்டாளி கீதம்!
* எவ்வளவு காலம்தான் பேசிக்கொண்டே இருப்பீர்கள்? பொறுப்புகளுக்கு வர வேண்டாமா?’ என்று முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமி ராஜா கேட்டார். ‘ஏழைகளுக்காகப் பேச வேண்டியதுதான். சாக வேண்டியதுதான்’ என்று தயக்கம் இல்லாமல் பதவிகளைத் தட்டிக் கழித்தார்!
* பத்மாவதி மீதான ஜீவாவின் காதலுக்குத் தூதுவனாக இருந்தவர் எம்.ஆர்.ராதா. ‘காதல் கடிதம் கொண்டுபோய் கொடுத்திருக்கிறேன். காதல் கடிதமா அது? சுத்த வரட்டு மனுஷன்… ஜனசக்திக்குக் கட்டுரை எழுதுறது மாதிரியில்ல எழுதியிருந்தார்’ என்று கிண்டல்அடித்தார் ராதா!
* புத்தகப் பிரியர். ஜீவா வருகிறார் என்றால் பலரும் தங்களது புத்தகங்களைப் பதுக்க ஆரம்பிப்பார்களாம். ஆனால், இவர் படித்து முடித்த புத்தகத்தை யார் கேட்டாலும் கொடுத்துவிடுவார். அடுக்கிவைக்கவே மாட்டார்!
* ஜீவாவுக்கு இடது காது கொஞ்சம் மந்தம். அதனால் காது கேட்கும் கருவியை மாட்டியிருப்பார். அடுத்தவரைப்பற்றி யாராவது குறை சொல்ல ஆரம்பித்தால், கருவியைக் கழற்றிவிட்டு, ‘இனி எனக்குக் கேட்காது. பேசலாம்’ என்று அறிவிப்பார்!
* ‘அன்பும் அரசியலும் வேறு வேறல்ல; உலகம் முழுமைக்கும் அன்பும் சகோதரத்துவமும் நிலவ வேண்டும் என்பதே உண்மையான அரசியல் தத்துவமாகும். ஆகவே, அன்பினை அழிக்கக்கூடிய எதுவும் அரசியலாக இருக்க முடியாது. கூடாது!’ – இதுதான் ஜீவாவின் அரசியல் தத்துவம்!
– ப.திருமாவேலன்