மனிதநேயம் மலரச் செய்வோம்!

மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களிலும் போர், குண்டுவெடிப்பு போன்ற கொடுமையான வன்முறை நிகழ்வு காலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, மருத்துவ உதவி வழங்க, உயிர் இழந்தவர்களை நல்லடக்கம் செய்ய, அகதிகளாக நிற்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட என சில நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் போராடுவார்கள்.

அவர்களின் மனிதாபிமானம் மிக்க சேவையை நன்றியுடன் நினைவுகூர்வதற்காக ‘உலக மனித நேய தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

2003-ம் ஆண்டு, ஆகஸ்ட் 19. ஈராக்கில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அங்கே செயல்படும் ஐ.நா உதவி தூதுக்குழுவைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியது அல்கொய்தா அமைப்பு.

கேனல் ஹோட்டல் என்ற இடத்தில் நடந்த அந்தத் தாக்குதலில், ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ வியரா டெ மெல்லோ (Sergio Vieira de Mello) கொல்லப்பட்டார். 22 பேர் உயிரிழந்தார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

செர்ஜியோ, ஐ.நா-வுக்காக 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். அவர் நினைவாக, அவர் இறந்த ஆகஸ்ட் 19 தினத்தை  ‘உலக மனித நேய தினமாக’ அனுசரிக்க வேண்டும் என ஐ.நா சபை முடிவெடுத்தது.

2009-ம் ஆண்டிலிருந்து இந்த தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய கருப்பொருளுடன் இந்நாளைக் கொண்டாடுகிறது. இந்தாண்டு உலக மனிதநேய தினத்தின் கருப்பொருள் “எதுவாக இருந்தாலும் சரி” என்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

மனிதநேயத்துடன் ஒரு பொதுவான குறிக்கோளுடன் மனிதநேய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பிணைக்கப்பட்டுள்ளனர்.

மனிதநேய பணி என்பது மிகவும் சவாலானது மற்றும் ஆபத்தானது. இருப்பினும் தடைகளைத் தாண்டி தேவைப்படுபவர்களுக்கு உயிர் காக்கும் உதவிகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதாகும்.

வாடிய பயிர் கண்டபோதெல்லாம் வாடினேன் எனப் பாடிய வள்ளலார் பிறந்த தேசம் இது.

பிற மனிதர்கள் வாட நாம் வாழ்தல் கூடாது. எனவே ஒற்றுமையும் அன்பும் ஈகையும் நம் அடையாளங்கள் ஆகட்டும்.

நம் சிறு சிறு செயலிலும் சொல்லிலும் அசைவிலும் கூட மனிதநேயம் மலரச் செய்வோம். மனிதம் காப்போம்.

Comments (0)
Add Comment