இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு கணிசமான இடங்களை அள்ளும் கட்சி, டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் என்பது தேர்தல் கணக்கு.
ஒரு காலத்தில் இந்த மாநிலம் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது.
இப்போது? – பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை அடுத்து நான்காம் நிலையில்தான் உள்ளது.
உ.பி.யில் காங்கிரஸ் கட்சியின் வலிமையை விளக்க பெரிய புள்ளிவிவரங்கள் தேவையில்லை. மூன்று வரிகள் போதும்.
இப்போது, அந்தக் கட்சிக்கு ஒரே ஒரு எம்.பி. மட்டும்தான் இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல. சோனியாகாந்தி தான்.
5 சதவீத வாக்குகளை மட்டுமே வைத்துள்ளது காங்கிரஸ்.
நேரு குடும்பத்து ஆட்கள் அனைவரும் போட்டியிட்டு வாகை சூடிய மாநிலம் இது. நேரு, இந்திரா, சஞ்சய், ராஜிவ், சோனியா, ராகுல், மேனகா, வருண் என இதன் பட்டியல் நீளும்.
சுருக்கமாக சொன்னால், பிரியங்காவை தவிர, நேரு குடும்ப வாரிசுகள் அனைவருமே உ.பி.யில் களம் இறங்கி, வெற்றிகொடி நாட்டியவர்கள். இந்நிலையில் மீண்டும் உ.பி.யை மீட்டெடுக்கும் முயற்சியில் சோனியா இறங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் தேர்தலில் உ.பி.யில் குடும்பத்தோடு களம் இறங்க சோனியா முடிவு எடுத்துள்ளார். ரேபரேலியில் அவர் போட்டியிடுகிறார். அமேதியில் ராகுல் நிற்பார். வாரணாசியில் பிரியங்காவை நிறுத்தும் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. முதலில் அந்த மூன்று தொகுதிகளின் நிலவரம் அறியலாம்.
ரேபரேலி:
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்கிறது, ரேபரேலி தொகுதி. பெரும்பாலும் காங்கிரஸ் வேட்பாளர்களே இங்கு ஜெயிக்க முடியும். இந்திரா காந்தி இரு முறை இங்கு வெற்றி பெற்றுள்ளார்.
மோடி அலை ஆக்ரோஷமாக வீசிய கடந்த தேர்தலில், ரேபரேலியில் சோனியா சுலபமாக வென்றார். இதற்கு முன்பு நடந்த மூன்று தேர்தல்களிலும் அவருக்கே ஜெயம். 2004, 2009, 2014, 2019 ஆகிய நான்கு தேர்தல்களிலும் அவர் தொடர்ச்சியாக வெற்றிக்கனி பறித்தார். இந்த முறையும் சோனியாவுக்கு சிரமம் இருக்காது.
அமேதி:
2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.
வயநாட்டில் 4 லட்சத்து 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இராணியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.
அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிபோனது. இந்த தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டதால் ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யானார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று உத்தரப்பிரதேச காங்கிரஸ் விரும்புகிறது.
அவரும் அங்கு போட்டியிடத் தயாராகி விட்டார்.
‘இந்தியா’ கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி இருப்பதால், ராகுல் எளிதாக வெல்வார் என்பது, காங்கிரஸ் கட்சியின் கணக்கு. உண்மை நிலவரமும் அதுதான்.
கடைசியாக நடந்த 4 தேர்தல்களில் அமேதியில் 3 முறை ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரணாசி:
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி இதுவரை தேர்தலில் போடியிட்டதில்லை.
இந்த முறை பிரியங்கா தேர்தலில் நிற்க அவரது கணவர் ராபர்ட் வதேரா பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
அவரை பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் நிறுத்த பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளன.
“மோடியை எதிர்த்து பிரியங்கா நிற்க வேண்டும். நிச்சயம் பிரியங்கா வெல்வார். வாரணாசி மக்கள் பிரியங்காவை விரும்புகிறார்கள்’’ என சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
உபி மாநில காங்கிரஸ் கட்சியினரும் இதே கருத்தை வழி மொழிந்துள்ளார்.
கடந்த 2019 தேர்தலிலேயே வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா நிற்பதாக இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் அஜய் ராய் என்பவரை வேட்பாளரக அறிவித்தது காங்கிரஸ். இந்த முறை பிரியங்கா, வாரணாசியில் போட்டியிடும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
கடந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் மோடி 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
சமாஜ்வாதி வேட்பாளர் ஷாலினி சுமார் 1 லட்சத்து 95 ஆயிரம் வாக்குகளும், காங்கிரசின் அஜய் ராய் சுமார் 1 லட்சத்து 52 ஆயிரம் வாக்குகளும் வாங்கினர்.
நேரு குடும்பத்தில் மூன்று பேர் உ.பி.யில் களம் இறங்கத் தீர்மானித்துள்ளதால் அந்த மாநிலத் தேர்தல் களம் இப்போதே பரபரப்பாகியுள்ளது.
-பி.எம்.எம்.