பராசக்தி படத்திற்கு வசனம் எழுதும்போது கலைஞரின் வயது?

1947 ல் முதல் படமான ராஜகுமாரிக்கு (எம்.ஜி.ஆர். கதாநாயகனானதும் இந்தப் படத்தில்தான்) வசனம் எழுதும்போது கலைஞர் கருணாநிதிக்கு வயது இருபத்து மூன்று.

அந்தக் காலத்தில் திரையுலகில் நுழைவது அத்தனை எளிதல்ல. கலைஞருக்கும் ஆரம்பத்தில் பல சிரமங்கள் இருந்தன.

ராஜகுமாரி படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்தபோது, பெரியார் நடத்திய குடியரசு இதழுக்கு துணையாசிரியராக இருந்தார்.

அப்போதே அவரது மேடைப் பேச்சும் அதிரடி எழுத்தும் மிகப் பிரபலம். அதனால் ஜூபிடர் நிறுவனம் தயாரித்த ராஐகுமாரியில் வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் படத்துக்கான வசனங்களை அவர் எழுதியிருந்தாலும் டைட்டில் போடும்போது; வசனம் உதவி-கருணாநிதி என்றுதான் போட்டார்கள்.

இதற்கு அடுத்த படமான ‘அபிமன்யு’வில் இன்னும் மோசம், வசனங்கள் எழுதிக் கொடுத்தும் கலைஞரின் பெயரை திரைப்படத்தில் குறிப்பிடவில்லை.

இப்படி கலைஞரின் பெயரை இருட்டடிப்புச் செய்த அதே தமிழ்த் திரையுலகம், ‘கருணாதிதியின் அனல் பறக்கும் வசனங்கள்’ என விளம்பரம் செய்து கொண்டாடியது.

முதல் இரண்டு படங்களிலேயே தன்னுடைய எழுத்துத் திறமையை நிரூபிக்க, அதன்பிறகு தமிழ்த் திரையுலகில் கலைஞரின் வசன மழை புயல், இடி, மின்னல் எல்லாம்.

மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, பராசக்தி, மனோகரா என்று தொடர்ந்து கலைஞரின் வெற்றிப் படங்கள். இன்றும் மிகப் பிரபலமாய் இருக்கும் பராசக்தி வசனங்களை எழுதும்போது கலைஞருக்கு வயது இருபத்தெட்டுதான்.”

– திரைவாணனின் ‘கலைஞரின் திரைப்பட வாழ்க்கை’ நூலிலிருந்து.

நன்றி: வார இதழ் – 2011

Comments (0)
Add Comment