– நிரூபித்த அமெரிக்க மாணவர்
அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவர் மதுரையில் சுற்றிலும் குடிசைகளும், நெரிசலும், கொசுக்களும் நிறைந்த சிறு ஓடு வேய்ந்த வீட்டில் இருப்பார் என்று நினைத்திருப்பீர்களா?
ஆனால் – அப்படி இருந்தார் பெர்னார்ட் பேட்.
மதுரை, முனிச்சாலை பகுதியில் வைகை ஆற்றங்கரையில் இருந்தது அவர் தங்கியிருந்த வீடு. உள்ளே பளிச்சென்று எளிமையான சுத்தம்.
சுவரில் ஃப்ரேம் போட்ட நடிகர் சிவாஜிகணேசனின் புகைப்படம்.
“சிவாஜி என்ன மாதியான ஆக்டர்…? அசந்து போயிருக்கேன். அவர் முகமே எனக்குப் பிடிக்கும்.
அதான் அவரோட போட்டோவை மாட்டி வைச்சிருக்கேன்.. எப்படி இருக்கு.. நல்லா இருக்குல்லே’’ -என்று மதுரைக்கே உரித்தான வட்டார மொழியோடு பேசிக் கொண்டிருந்தவரைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது.
ரோஸ் நிறம். ஒல்லியான உடம்பு. சிறு கண்கள். சற்று அடர்த்தியான மீசை. எப்போதும் உதட்டில் படர்ந்திருக்கும் கனிவான புன்னகை.
அந்த வீட்டில் இருப்பதைப் பற்றிக் கேட்டதும் இதமான பதில்.
“இங்கே கத்துக்க வந்து ஏதோ ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறதை விட, இங்கே உள்ள ஜனங்களுக்கு நடுவே தங்கிறப்போ எவ்வளவோ கத்துக்க முடியும்.
இங்கே சுத்தியும் கரகாட்டம் ஆடறவங்க பலபேரு இருக்காங்க.. அவ்வளவு நல்லாப் பழகுவாங்க.. அன்பா இருப்பாங்க..
குழந்தைகள் என்னை ‘மாமா’, ‘அண்ணே’ன்னு கூப்பிடுவாங்க.. அவங்களை மாதிரி ஜனங்க கிட்டே இருந்து கத்துக்க எவ்வளவு விஷயங்கள் இருக்கு தெரியுமா?’’
– பேசிக்கொண்டே தேநீரைப் போட்டுக் கொடுத்தார்.
இங்குள்ள ஒரு குடும்பத்துடன் உருவான நெருக்கத்தில் மதுரைக்கு அருகில் உள்ள பிரசித்தி பெற்ற பாண்டி முனீஸ்வரர் கோவிலில் மொட்டை போடுமளவுக்குப் போயிருக்கிறார்.
“அன்புக்காக எதுவும் செய்யலாம்.. என்ன சொல்றாப்லே?’’
நியூ ஜெர்சியைச் சேர்ந்த இளைஞரான பெர்னார்ட் பேட்-கல்லூரியில் படிக்கும்போது தற்செயலாக தமிழ்நாட்டைப் பற்றிய ஒரு புத்தக்கத்தைப் படித்ததும் ஒரு ஈர்ப்பு.
மதுரை அமெரிக்கன் கல்லூரிக்குப் படிக்க வந்தவர் எஃம்.பில் ஆய்வுக்காக சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவலை எடுத்துக் கொண்டார்.
அது முடித்து சிகாகோ பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட தலைப்பு தான் வினோதம். ‘தமிழ் மேடை’
அரசியல் மேடைகள், உபந்நியாசங்கள், பட்டிமன்றங்கள், பொறி பறக்கும் இரவு நேரத்திய அரசியல் சொற்பொழிவுகள் எல்லாவற்றுக்கும் ‘பொறுப்பாகப் போய்’ ரிக்கார்டு பண்ணியதைப் பற்றி அவரவர் மொழியில் பேசும்போது, கேட்க அருமையாக இருக்கும்.
சைக்கிளிலும், பழைய பைக் ஒன்றிலும் பல இடங்களுக்குச் சென்று வருவார்.
அவரை வீட்டுக்கு ஒருமுறை சாப்பிட அழைத்தபோது, வந்திருந்தவர் ,என்னிடம் இருந்த பல பைண்ட் செய்யப்பட்ட பத்திரிகைகளின் தொகுப்பைப் பார்த்ததும் சிறு குழந்தையைப் போன்ற பரவசத்தோடு, அவற்றை எடுத்துக் கொண்டு போனார்.
அப்போது நான் தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியிலும் கீழ்மட்ட அளவில் சற்று ஓவராகப் பேசக்கூடிய ‘பாப்புலரான’ பேச்சாளர்களை எல்லாம் சந்தித்துப் பேட்டி எடுத்திருந்தேன்.
அந்தக் குறிப்புகளை எல்லாம் கொடுத்தபோது, இன்னும் சந்தோஷம்.
“எப்படித்தான் ரெண்டு மணி நேரம் பேசுறாங்களோ தெரியலைப்பா.. ஜனங்க கலையாம கடைசி வரை உட்கார்ந்திருக்காங்க..
பல அரசியல் பேச்சாளர்களைச் சந்திக்கிறபோது வீட்டில் சாதாரணமாப் பேசிக்கிட்டிருப்பாங்க..
அதே ஆட்கள் மேடைக்குப் போனதும் பேசுற விதமே மாறிவிடும்.
மேடை என்றால் பேச்சு மட்டுமில்லை.. மேடை போடுறவிதம், அலங்காரங்கள், போஸ்டர்கள், ஒலிபெருக்கி, போடுற மாலைன்னு எல்லாத்தையும் குறிப்புகள் எடுப்பேன்..’’
ஒருமுறை கூட்டம் ஒன்றில் டேப் ரிகார்ட்டில் பதிவு பண்ணியபோது சிக்கல் வந்து அவரை அப்புறப்படுத்தி விட்டார்கள்.
“ஏன்.. பொதுக்கூட்டம் தானே.. தூரத்தில் இருந்து டேப் பண்ணியிருக்கலாமே’’ என்ற போது, அவசரத்துடன் மறுத்தார்.
“ஒரு போதும் அப்படிச் செய்ய மாட்டேன்.
யார் பேச்சை ‘டேப்’ பண்ணுகிறேனோ, அது சம்பந்தபட்டவருக்குத் தெரியணும்.
நாம் தெரியப்படுத்தி அனுமதி வாங்கணும்.. அது தானே ‘எத்திக்ஸ்’? இல்லையா?’’
– சொல்லும்போது அவருடைய முகம் கொஞ்சம் சீரியஸாகி இருந்தது.
செய்யும் வேலையில் வீண் கௌரவம் பார்க்காமல், அகந்தையை மூளையிலும், உடல்மொழியிலும் ஏற்றிக் கொள்ளாமல், தன்னைக் கீழிறக்கி அனுபவங்களைச் சிரத்தையுடன் அவர் எதிர் கொண்ட விதம் பல ஆய்வாளர்களுக்கு முன்னுதாரணம்.
அவரை ஒரு வார இதழ் ஒன்றிற்காகப் பேட்டி கண்டபோது, இரண்டு மணி நேரத்திற்கு மேல் விரிவாகப் பேசியவர், புகைப்படம் எடுக்கும்போது மட்டும் சற்று வெட்கப்பட்டார்.
பேசும்போது, தமிழில் செந்தமிழுக்கும், வட்டாரக் கொச்சைத் தமிழுக்கான வித்தியாசத்தைப் பற்றிச் சில அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது, அவருடைய முகத்தில் தனிக் குதூகலம்.
“அமெரிக்காவில் பொதுவாக மேடையில் பெரிய அளவில் ஆடம்பரம் இருக்காது. மேடையில் சுருக்கமாகப் பேசுவார்கள். தொலைக்காட்சியில் கொஞ்சம் அதிகமாகப் பேசுவார்கள். அதை மக்களும் கவனமாகக் கேட்பார்கள்.
இங்கு பேச்சில் எத்தனை வெரைட்டி? கிருபானந்த வாரியார் பேச்சு ஒரு ரகம்; அண்ணா, கலைஞர், ம.பொ.சி போன்றவர்களின் பேச்சு ஒரு ரகம்.
தமிழ் சினிமாவில் செந்தமிழிலும் பேசுகிறார்கள்.
அதே படங்களில் ‘காமெடி’ நடிகர்கள் மட்டும் வட்டார மொழியில் பேசுவார்கள்.
கலைவாணர் காலத்திலிருந்தே இது நடந்திருக்கிறது.
தமிழ் நாடகங்களிலும் ‘பபூனா’ வருகிறவர்கள் அந்தப் பகுதி மக்களோட மொழியில் தான் பேசுகிறார்கள். அதைப் பத்தியெல்லாம் என்னோட ஆய்வில் நான் தனி அத்தியாயமே எழுதியிருக்கேன்..’’ என்று சொல்லிக் கொண்டு போனவருக்கு ஒரு வருத்தம்.
சில அரசியல் மேடைகளுக்கு முன்னால் பெர்னார்ட் உட்கார்ந்து குறிப்புகள் எடுப்பதைப் பார்த்ததும், “சி.ஐ.ஏ உளவாளி’’ முத்திரை கிடைத்ததைப் பற்றியும், அதனாலேயே தான் ஒதுக்கப்பட்டதைப் பற்றியும் சொல்லிக் கொண்டு போனார்.
அவரால் புரிந்துகொள்ள முடியாத சிக்கலாகச் சொன்னது – இங்கு நிலவும் சாதியப் பாகுபாட்டை, அதனால் உருவாக்கும் பிரிவனைகளை, சண்டைகளை, வீறாப்புகளை.
அரசியலுக்கும், மேடைகளுக்குமான தொடர்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது,
“அரசியல், அதிகாரம், பதவிகளுக்கு வருவதற்கான ஒரு வாய்ப்பாக இங்கு மேடைகள் இருக்கின்றன. சினிமாவும் அதற்கு உதவியிருப்பதை மறுக்க முடியாது’’
என்று சொன்ன அவர், வியந்து பாராட்டியது ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி பேசிய கலைஞரின் வசனத்தை.
சிலவற்றை வித்தியாசமான தொனியில் பேசியும் காட்டினார்.
பொறி பறக்கப் பேசுவதில் புகழ் பெற்றிருந்த ‘தீப்பொறி’ ஆறுமுகத்தின் பேச்சைத் தொடர்ந்து கேட்கப் போனபோது, பலமுறை அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, பேச்சைக் கேட்பவர்களுக்கு அதிர்ச்சி பரவி, மின்சாரம் துண்டிக்கப் பட்டதையும், அதையும் எதிர்பார்த்தே அவரை வைத்துக் கூட்டம் நடத்துகிறவர்கள், தனியாக பேட்டரி வாங்கி வைத்திருந்ததையும் சிலாகித்துச் சொன்னார்.
அவரைச் சந்தித்து வெளியான கட்டுரை அப்போது வெளிவந்த ‘தினமணி’ நாளிதழின் இணைப்பில் – அட்டைப்படக் கட்டுரையாக அவருடைய புகைப்படத்துடன் வந்தபோதும், புன்னகை பரவிய பாராட்டு அவரிடமிருந்து.
‘பாணி’ என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட, பெர்னாட் பேட்டின் பி.ஹெச்.டி ஆய்வு உரிய கவனம் பெற்றிருப்பது பிறகு தெரிய வந்தது.
பலமுறை மதுரைக்கு வந்து சென்ற பெர்னாட் பேட் , சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த செய்தியைக் கேள்விப் பட்டபோது, பலருக்கும் அதிர்ச்சி.
பலருடைய நினைவுகளிலும், இதை எழுதும் இந்தக் கணத்தின் நினைவிலும் தங்கியிருப்பது அவருடைய புன்னகைத்த இனிய முகம் தான்!
– மணா