யாரைப் பின் தொடர்ந்தால் நல்லது?

படத்தில் பார்க்கிறீர்களே, வரிக்குதிரை மாதிரி வரிவரியாக இருக்கிற மீன்களை. இந்த மீன்களுக்கு ஆங்கிலத்தில் பைலட் மீன் என்று பெயர். தமிழில் வலவம் மீன்.

அம்மணி உழுவை (Whale Shark), சுறா மாதிரியான உருவத்தில் பெரிய கடல் உயிர் ஒன்றை இந்த வலவம் மீன்கள் தலைவனாக வரித்துக் கொள்ளும். அந்த பேருயிரை கடலில் விடாமல் பின்பற்றிச் செல்லும்.

இந்த வலவம் மீன்களை வழிகாட்டி மீன்கள் என்று சொல்வது சும்மா பேருக்குத்தான்.

உண்மையில் இந்த மீன்கள் வழிகாட்டுகிற மீன்கள் அல்ல. பின்பற்றுகிற மீன்கள்.

தலைவராக வரித்துக் கொள்ளும் மீனை விடாமல் பின்தொடரும் இந்த மீன்கள் அந்த பேருயிர் திடீரென மாயமாகிவிட்டால் திகைத்து திக்குமுக்காடிப்போகும்.

அந்த பேருயிர் ஒரு மீன்பிடிப் படகின் அருகே மறைந்து விட்டால், ‘இந்த இடத்தில் தானே தலைவர் மாயமானார்? இனி என்ன செய்வது? ஒன்று செய்யலாம்.

தலைவர் இல்லாத இடத்தில் இனி இந்த மீன்பிடி படகுதான் நமக்குத் தலைவர்’ என்ற முடிவுக்கு வலவம் மீன்கள் வந்து விடும்.

பிறகு மீன்பிடிப் படகை அவை பின்தொடர ஆரம்பித்துவிடும். (ஆகா! என்ன ஒரு கொள்கை? என்ன ஒரு கோட்பாடு?)

முட்டையில் இருந்து வெளிவரும் கோழிக்குஞ்சு, தாய்ப்பறவை ஒருவேளை அதன் அருகில் இல்லாமல் போனால், அந்த நேரம் அதன் அருகில் இருக்கும் எந்த ஒரு பெரிய உயிரையும் தனது தாயாக நினைத்துக் கொள்ளுமாம். (இது வேறயா?)

வால்ட் டிஸ்னி கார்ட்டூன் படம் ஒன்றில், முட்டையில் இருந்து பொரித்து வெளிவந்த கோழிக் குஞ்சுகள், தாய்க்கோழி அருகில் இல்லாத நிலையில், நாய் ஒன்றை தனது தாயாக நினைத்து அதை பின்பற்றும் நகைச்சுவைக் காட்சி இருக்கிறது.

தமிழர்களும் இப்போது இப்படித்தான் இருக்கிறார்கள். பின்பற்ற வேண்டியவர்களை விட்டுவிட்டு யார் யாரையோ, ஏதேதோ கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள். பின் தொடர்ந்து செல்கிறார்கள்.

இந்த இழிநிலை எப்போது மாறுமோ தெரியவில்லை?

– மோகன ரூபன் முகநூல் பதிவு 

Comments (0)
Add Comment