படைப்பாளிகள் காலத்தின் கையில், படைப்புகளோ காலத்தைக் கடந்து!

விருதுகள் பலருக்கு கௌரவம் பெற்று தந்துள்ளன. ஆனால் ஒருசிலர் விருதுகளுக்கே கௌரவம் பெற்று தந்துவிடுகிறார்கள், அதை அடைவதன் மூலம்.

5 முறை தேசிய விருது, 22 முறை பிலிம் ஃபேர் விருது, ஒருமுறை அகடாமி விருது, கிராமி விருது, சாகித்ய அகடாமி விருது, பத்மபூஷன் விருது,

உச்சகட்டமாக திரையுலகின் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது என வாழ்நாளில் 36 விருதுகளை வென்றவர்தான் பாலிவுட் திரையுலகின் பிரபல பாடலாசிரியர், கவிஞர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் என பன்முக ஆளுமை கொண்ட குல்சார் (Sampooran Sing Kaira (a) Gulzar).

தற்போது பாகிஸ்தானில் உள்ள ஜீலம் மாவட்டத்தில் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்த குல்சார், இளம் வயதில் தாகூரின் கவிதைகளை மொழிபெயர்த்து, அதன் மூலம் கவிதை மீது காதல் கொண்டார்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிந்தபோது குல்சாரின் குடும்பமும் பிரிந்தது. ஒரு பிரிவினர் மும்பையில் குடிபெயர்ந்தனர்.

குடும்பத்தை காப்பாற்ற படிப்பை விட்ட குல்சார், சிறு சிறு தொழில்கள் செய்து வந்தார்.

குல்சார் தீன்வி (Gulzar Deenvi) என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதி வந்தார். திரையுலகத்தைச் சேர்ந்த சைலேந்திரா மற்றும் பிமல் ராயுடன் தொடர்பில் இருந்த குல்சார், இயக்குனர் ரிஷிகேஷ் முகர்ஜியுடன் அறிமுகப்படுத்தப்பட்டார்.

எஸ்.டி.பர்மன் இசையில் Bandini என்ற படத்தில் முதன்முதலாக பாடல் எழுதினார். அதன்பிறகு எஸ்.டி.பர்மன் – குல்சார் இணை பல வெற்றிப் பாடல்களை ரசிகர்களிடையே தவழ விட்டது.

சலிம் சௌத்ரி இசையில் ஆனந்த், மேரே அப்னே, மதன்மோகன் இசையில் Mausam ஆகிய படங்களில் குல்சார் சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்.

Guddi திரைப்படத்தில் குல்சார் எழுதிய ‘Humko Man Ki Shakti Dena’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பல திரைப்படங்களுக்கு குல்சார் வசனமும் எழுதியுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் பிரபல பாடலாசிரியராக உருவான குல்சார், கடந்த 2009ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தில் வரும் ‘ஜெய் ஹோ’ என்ற பாடலுக்கு சிறந்த முதன்மை பாடலுக்கான அகாடமி விருது பெற்றார்.

குல்சாரின் கவிதைகள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய சில திரைப்படங்கள் பல விருதுகளை பெற்றுள்ளன.

சின்னத்திரையில் மிர்சா காலிப், தஹீர் முன்ஷி பிரேம் சந்த் ஜி ஆகிய நெடுந்தொடர்களை இயக்கியுள்ளார்.

பழம்பெரும் பாலிவுட் திரைப்பட நடிகை ராக்கியை, குல்சார் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேக்னா குல்சார் என்ற பெயரில் மகள் உள்ளார்.

படைப்பாளிகள், காலத்தின் கைப்பாவைகள். அவர்கள் நீண்டநாள் வாழலாம் அல்லது எதிர்பாராத நேரத்தில் மறையலாம். ஆனால் அவர்களது சிறந்த படைப்புகள் காலம் கடந்தும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

குல்சார் படைப்பாளி. அவரது படைப்புகள் யாவும் மிகச்சிறந்தவை.

(பாலிவுட்டின் பிரபல பாடலாசிரியர், கவிஞர், திரைக்கதை வசனகர்த்தா, இயக்குனர் குல்சாரின் பிறந்தநாளில் (ஆகஸ்டு 18, 1934) அவரை நினைவுகூர்வோம். 

✍️ லாரன்ஸ் விஜயன்

Comments (0)
Add Comment