– ரவீந்திரன், முன்னாள் செய்தித்துறை துணை இயக்குநர்
நான் வட ஆற்காடு மாவட்டத்தின் மாணவர் அமைப்பில் அண்ணன் ஏசி சண்முகம் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்தபோது துணைச் செயலாளராக இருந்திருக்கிறேன்.
பிறகு 1980களில் அண்ணன் திருநாவுக்கரசர் தலைமையில் இயங்கிய இளைஞரணி மாவட்டத் தலைவராக இருந்தேன். பிறகு அப்படியே அண்ணா திமுகவிலிருந்து தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தலைவர் அவர்களைச் சந்தித்தேன்.
அப்போது ஏ.சி.சண்முகம் எம்.ஜி.ஆர். அவர்களிடம், “தம்பி ரவிக்கு ஏதாவது வேலை “கொடுங்கள் அண்ணா” என்று கேட்டார். அப்போது நான் புரட்சித்தலைவருக்கு ஒரு சால்வை போர்த்தினேன்.
அதன்பிறகு என்னை அதிமுகவின் செய்தி மக்கள் தொடர்பாளராக பணி நியமனம் செய்தார்.
நான் சேலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதன்பிறகு சென்னைக்கு பணி மாற்றம் செய்து கொடுத்தார் ஜானகி அம்மா. அது அம்மா எனக்குச் செய்த பேருதவியாக இருந்தது.
அதேபோன்று என்னுடைய திருமண நிச்சயதார்த்தம் நடந்தபோது திருமணத்திற்கு வருமாறு தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் கூறினேன்.
அப்போது அவர் ஜானகி அம்மாவை அழைத்துச் செல்லுமாறு எங்களிடம் கூறினார். ஆனால் என் திருமணத்தின்போது தலைவரின் உடல்நிலை சரியில்லாததால் அவர் சொன்ன படியே ஜானகி அம்மா என்னுடைய திருமணத்திற்கு வந்து அவரது தலைமையில் திருமணத்தை நடத்தி வைத்தார்.
ஜெகத்ரட்சகன், ஏ.சி.சண்முகம். ஜேப்பியார் உள்பட பல தலைவர்கள் கலந்துக் கொண்டு திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைத்தனர்.
அதன்பிறகு நான் அடிக்கடி ஜானகி அம்மாவை இராமாவரம் தோட்டத்திற்குச் சென்று சந்தித்திருக்கிறேன். அரசியல் நிலவரம் குறித்து அவருடன் உரையாடி இருக்கிறேன்.
அதிமுக தொண்டர்கள் உட்பட தலைவர் யார் யாருக்கெல்லாம் மதிப்பு கொடுக்கிறாரோ, அவர்களையெல்லாம் தன் பிள்ளைகளைப் போலத் தான் ஜானகியம்மா பார்த்துக் கொண்டார்.
தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு தந்தையைப் போலவும், ஜானகி அம்மா ஒரு தாயைப் போலவும் தான் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார்கள்.
இராமாவரம் தோட்டத்திற்குச் செல்லும் அதிமுகவின் சாதாரண தொண்டனைக் கூடச் சாப்பிட வைத்துத் தான் அனுப்பி வைப்பார்கள். இருவரும் அவ்வளவு அன்புடன் உபசரணையுடன் இருந்தார்கள்.
அதிமுக இரண்டாகப் பிளவுபட்ட போதும் கட்சியை ஒன்று சேர்க்க ஜானகி அம்மா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
கட்சியை ஒன்றிணைக்க மனப்பூர்வமாகவும், பெருந்தன்மையுடனும் விட்டுக் கொடுத்தார்.
இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்கு எல்லோரிடமும் கையெழுத்துக் கேட்டு வாங்கும் ஏற்பாட்டினை ஜானகி அம்மா தான் செய்து மீட்டுக் கொடுத்தார்.
ஜானகி அம்மா தன் சொந்தப் பணத்தில் வாங்கிய இடத்தை தலைவர் மீது கொண்ட அன்பின் காரணமாக அதிமுக அலுவலகத்திற்காக கொடுத்தார்.
அது அவருடைய பெருந்தன்மையை வெளிக்காட்டுகிறது.
அண்ணா திமுகவிற்கு ஜானகி அம்மா தந்த மகத்தான பரிசுகள் இரண்டு.
ஒன்று இரட்டை இலைச் சின்னம். மற்றொன்று அதிமுக தலைமை அலுவலகம்.
தலைவருக்காக ஜானகி ஆற்றிய தொண்டு அதிகம். அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவமனையில் தலைவரை ஜானகி அம்மா தாயைப் போலக் கவனித்துக் கொண்டார்.
தலைவரைக் கவனித்துக் கொண்டதாக இருக்கட்டும், நல்ல துணைவியாக அவருடன் இணைந்து கட்சிக்கு ஆற்றிய தொண்டாக இருக்கட்டும், போற்றும்படியாக இருந்தது அவருடைய பங்களிப்பு.
அதிமுகவும் நூற்றாண்டு நேரத்தில் அவருடைய தொன்டை உணர வேண்டும். தமிழக அரசும் செய்ய வேண்டும், அவருடை நூற்றாண்டைக் கொண்டாட வேண்டும்.
தமிழகத்தின் முதல் பெண் முதல்வராக இருந்ததால் அவரது நூற்றாண்டு விழாவை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை.
-அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலரிலிருந்து…
*****
அன்னை ஜானகி – 100
நூற்றாண்டுச் சிறப்பு மலர்
வெளியீடு: மெரினா புக்ஸ்
தரணி காம்ப்ளெக்ஸ்,
1A, திருநாத முதலி நகர்,
திருப்பத்தூர். – 635 601
அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலரைப் பெற கீழே உள்ள இணைப்பைத் தொடுக…