’எங்கும் ஜெயிலர் மயம்’ என்பது போல, சமூகவலைதளங்களைத் திறந்தாலே அப்படம் குறித்த தகவல்கள் நிறைந்து வழிகின்றன. ‘எத்தனை கோடி வசூல் தெரியுமா’ என்று சாலை முனையில் நின்றுகொண்டு ‘பாக்ஸ் ஆபிஸ்’ நிலவரங்களை ஆராய்ந்து புளகாங்கிதமடைகின்றனர் சில ரசிகர்கள்.
இதற்கு முன்னர் யாரெல்லாம் ‘ஜெயிலர் ஜெயிச்சாத்தான் ஆச்சு’ என்று ரஜினிக்கும் நெல்சனுக்கும் ‘டெஸ்ட்’ வைத்தார்களோ, அவர்களே ‘இதைப்போல சொல்லி அடிக்க வேறு படம் இல்லை’ என்று பெருமைப்படுகின்றனர். ரஜினி ரசிகர்களுக்கோ, அவை மகிழ்ச்சித் தருணங்கள்.
படம் பார்த்துவிட்டு வருபவர்களில் பலர், நீண்ட நாட்கள் கழித்து ரஜினியின் ‘ஹீரோயிசம்’ பார்த்த பூரிப்பைச் சுமக்கின்றனர். அதேநேரத்தில், கமல் நடித்த ‘விக்ரம்’ போலவே ஜெயிலர் படமும் சிலருக்கு அதிருப்தியைத் தந்திருக்கிறது.
அனைத்து தரப்பினரையும் கவரும்விதமாக இல்லை என்று தாங்கள் முன்னர் பார்த்து ரசித்த ரஜினியின் திரைப்படங்கள் குறித்த நினைவுகளை அவர்கள் பகிருந்து வருகின்றனர். அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கும்போது, ஜெயிலர் வெற்றிக்கான சூட்சமங்கள் லேசாகத் தென்படுகின்றன.
பொருத்தமான பாத்திரம்!
திரையில் ரொம்பவே சீரியசான ரஜினியை எந்த படத்தில் பார்த்திருக்கிறோம். பா.ரஞ்சித்தின் ‘கபாலி’க்கு முன்னதாக, மணிரத்னத்தின் ‘தளபதி’யில் பார்த்ததாக நினைவு.
அந்த படங்களில் கூட, சில காட்சிகளில் ரொம்ப ஜாலியான மனிதராக வந்து போயிருப்பார் ரஜினி.
அதற்கு முன்னர் ‘நான் சிகப்பு மனிதன்’ போன்ற ‘பழிக்குப் பழி’ வகையறா படங்களில் முகத்தில் அனலைக் கக்கும் பாத்திரங்களை ஏற்றிருக்கிறார்.
அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், இதில் ஓரளவு ‘சீரியஸ்’ முகபாவத்தோடே வலம் வந்திருக்கிறார் ரஜினி. அந்த இடங்கள் ரொம்ப இறுக்கமாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, திரைக்கதையில் யோகிபாபுவின் பாத்திரம் சேர்க்கப்பட்டுள்ளது. பின்பாதியில் தெலுங்கு நடிகர் சுனில் அக்குறையைப் போக்குகிறார்.
’லிங்கா’வில் அனுஷ்காவோடு டூயட் பாடியதும், கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் பாராசூட்டில் பறந்ததும், ரஜினியின் மீது எதிர்மறை விமர்சனங்களை உண்டாக்கின. ‘காலா’வில் நானா படேகர் பாத்திரத்தோடு தொடர்ந்து மோதிக்கொண்டே இருந்தது சலிப்பை ஏற்படுத்தியது. கல்லூரி செல்லும் வயதில் மகள் இருக்க, ‘தர்பார்’ படத்தில் நயன்தாராவை ரஜினி காதலிக்க முயன்றது அயர்ச்சியைத் தந்தது. ‘அண்ணாத்த’வில் இன்னும் நிலைமை மோசம்.
முப்பதுகளில் இருக்கும் மனிதராக, அவரைக் காண்பித்திருந்தார் இயக்குனர் சிவா. அவற்றையெல்லாம் கிண்டல் செய்தவர்கள், தனது வயதுக்கேற்ற பாத்திரத்தில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி வந்தார்கள்.
‘ஜெயிலர்’ படத்தில் இயக்குனர் நெல்சன் அதனைச் செயல்படுத்தியிருக்கிறார். கூடவே, துப்பாக்கிச் சண்டை போடுவதிலோ, அடியாட்களோடு மோதுவதிலோ, அவர் நேரடியாக இறங்கக்கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு ஒரு குழுவை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். திரைக்கதையில் ’சில்லறை ஆக்ஷன்’களை அவர்கள் பார்த்துக் கொள்கின்றனர்.
அறுபது வயதைக் கடந்தவராகக் காட்டியபோதும், ஜெயிலரில் ரஜினிக்கென்று தனியாகப் பாடல்கள் கிடையாது. பாசத்தில் உருகும் காட்சிகள் இல்லை. முக்கியமாக, பஞ்ச் வசனங்கள் இல்லை. அதற்குப் பதிலாக, வில்லன் அழுத்திச் சொன்ன வசனங்களைத் தனக்கான தருணம் வரும்போது அவர் அப்படியே ‘ரிப்பீட்’ செய்யும் காட்சிகள் உண்டு.
இது ஒரு அற்புதமான உத்தி. படம் முழுக்க ரஜினியே நிறைந்திருந்தாலும், வில்லனாக வந்த விநாயகத்திற்கு முக்கியத்துவம் தரும் காட்சிகளும் படத்தில் உண்டு.
’க்ரைம் ஆக்ஷன்’ படம் என்ற வகையில், ஒரு படையப்பா போலவோ, சிவாஜி போலவோ, ‘ஜெயிலர்’ அனைத்து ரசிகர்களையும் மகிழ்விக்காது.
அது தெரிந்தும், ஒரு மாத காலத்தில் வசூலை வாரியிறைக்கும் திரைக்கதையே போதுமானது என்று களமிறங்கியிருக்கிறார் ரஜினி. திரையில் தெரியும் நாயகனாகத் தோன்ற மெனக்கெட்டிருக்கிறார். அதுவே, இந்த கமர்ஷியல் படத்தை ரசிகர்கள் சிலாகிக்கச் செய்திருக்கிறது.
மாநிலவாரியாக வெற்றி!
‘கேஜிஎஃப்2’, ‘காந்தாரா’, ‘புஷ்பா’ படங்கள் இந்திய அளவில் வெற்றி பெற, அவற்றின் காட்சியாக்கமே காரணம்.
அதேநேரத்தில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’, சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’, ஷாரூக்கானின் ‘பதான்’ வெற்றிகளுக்கு, படத்தின் ஆக்கத்தோடு சேர்ந்து அவற்றில் கௌரவமாகத் தலைகாட்டிய நட்சத்திரங்களும் ஒரு காரணமாக மாறினர்.
முக்கியமாக காட்பாதர், பதான் இரண்டிலும் பத்து நிமிட அளவில் சல்மான் வந்து போனது பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதனை அப்படியே பிரதியெடுத்தது போல, ‘ஜெயிலர்’ படத்தில் ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், மோகன்லாலின் பாத்திரங்கள் காட்டப்பட்டுள்ளன.
வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இவர்களனைவரும், படத்தில் தத்தமது மொழியிலேயே உரையாடுகின்றனர்.
இம்மூவரையும் திரையில் அறிமுகப்படுத்தும்போதும், கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியின்போதும் ‘ஹீரோயிசம்’ நிறைந்து வழியுமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் நெல்சன். அது, பெரிய அளவில் ரசிகர்களைக் குதூகலத்தில் ஆழ்த்துகிறது.
ஒன்றுசேர்ந்து திரையில் தோன்ற மாட்டார்கள் என்று நினைத்த ஆர்னால்டு ஸ்வாசநேகரும் சில்வெஸ்டர் ஸ்டாலோனும் கைகோர்த்த ‘எக்ஸ்பேண்டபிள்ஸ்’ பெரு வெற்றி பெற்றதை இந்த இடத்தில் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. ‘ஜெயிலர்’ தரும் அனுபவமும் அது போன்றதே.
கிட்டத்தட்ட இந்த நட்சத்திரம் தோன்றுவதால் இத்தனை ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள் என்ற ‘தோராயக் கணக்கு வழக்கு’களின் அடிப்படையில், அவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இந்த உத்தி, இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்திய சினிமாவில் ஒரு ‘சுற்று’ வரும்.
விக்ரம், பொன்னியின் செல்வன் 1 & 2 மற்றும் சமீபகாலத்தில் ‘பான் இந்தியா’ படங்களாகக் கொண்டாடப்பட்ட படங்களைச் சார்ந்த கலைஞர்கள், ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் நடத்தப்பட்ட ‘புரோமோஷன்’ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அவற்றை ஈடு செய்வது போல, ‘ஜெயிலர்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவை ரஜினி பயன்படுத்திக் கொண்டார்.
‘அடுத்த சூப்பர்ஸ்டார் யார்’ என்ற விவகாரம் பற்றிய சூழலில், ‘காக்கா – கழுகு’ கதையைச் சொல்லி உஷ்ணம் கிளப்பினார். அது மட்டுமல்லாமல், அந்த விழா மேடையில் இன்றைய இளைய நட்சத்திரங்கள் பேசும் பாணியில் ’கலாய் மொழி’யை கைக்கொண்டார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை அவரது பேச்சு அமைந்தது. அதில் இயக்குனர் நெல்சன் தன்னை முதன்முறையாகச் சந்திக்க வந்ததில் தொடங்கிப் பலவற்றைப் பகிர்ந்திருந்தார்.
‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ ஆடியோ விழாவின்போதும், இதேபோல மணிரத்னத்தோடு ‘தளபதி’ படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுகளைச் சொல்லியிருந்தார் ரஜினி.
அதோடு, கல்கியின் வந்தியத்தேவனாக தன்னை ஜெயலலிதா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்ததையும் நினைவூட்டினார். அந்த படத்தின் ஆரம்பகட்ட வசூலுக்கு, ரஜினியின் பேச்சும் ஒரு காரணமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.
அதனைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு, ’ஜெயிலர்’ படத்தின் மீது கவனம் குவிக்க வழியை உருவாக்கினார் ரஜினி. அந்த விழாவில் அவர் பேசிய பேச்சு திட்டமிட்டதா, இயல்பானதா என்று தெரியவில்லை.
ஆனால், அதுவே ‘ஜெயிலர்’ படத்திற்கு ‘டிக்கெட் தட்டுப்பாடு’ ஏற்படக் காரணமானது. சந்தைப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று என்பதை ரஜினியே மறுக்கமாட்டார்.
அதிரும் பாக்ஸ் ஆபீஸ்!
முதல் நான்கு நாட்களில் மட்டும், உலகம் முழுக்க சுமார் 222 கோடி ரூபாய் வசூலை ‘ஜெயிலர்’ அள்ளியிருப்பதாகச் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தோராயக் கணக்கு என்றாலும், இதில் பெரிதாக ஏற்ற இறக்கங்கள் இராது என்று நம்பலாம்.
இதே போன்றதொரு வரவேற்பு தொடரும் பட்சத்தில், இரண்டு வாரங்களில் 400 கோடியை எட்டும் நிலை உருவாகலாம். நிச்சயம் அது சாதனையாகவே கருதப்படும். ஏனென்றால், கமலின் ‘விக்ரம்’ உலகம் முழுக்க 430 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
இரண்டுமே விழாக்காலம் அல்லாத சாதாரண நாளொன்றில் வெளியாகியுள்ளன; வேறு மொழிகளிலும் கூட பெரிதாகப் போட்டியில்லாத சூழலை எதிர்கொண்டுள்ளன.
அவ்வளவு ஏன், ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாதி நகர்ந்த விதம் கூட ‘விக்ரமை’யே நினைவூட்டியது. இது போன்ற ஒப்பீடுகள் அனைத்தும், ‘விக்ரம்’ வெற்றியைத் தாண்ட வேண்டுமென்ற விருப்பம் உண்மையாகவே ரஜினியிடம் இருந்ததா என்ற கேள்வியை எழுப்புகிறது.
’ஜெயிலர்’ படத்தின் வகைமையை விமர்சிக்க விரும்பாதவர்கள் கூட, அதில் இருந்த நகைச்சுவை பஞ்சத்தையும் அதீத வன்முறையையும் லாஜிக் சார்ந்த குறைகளையும் சுட்டிக்காட்ட முனைகின்றனர்.
சில வாரங்களுக்குப் பிறகோ அல்லது ஓடிடி வெளியீட்டின்போதோ அவை பூதாகரமாகலாம். அதற்குள், நிச்சயம் தனது சாதனையின் ஒரு பகுதியை ‘ஜெயிலர்’ நிகழ்த்தி முடித்திருக்கும்.
படம் தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வருவதையடுத்து, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது ‘ஜெயிலர்’ குழு. சரி, அத்தனை விஷயங்களையும் கேள்விப்பட்ட ரஜினி என்ன ‘ரியாக்ட்’ செய்தார்?
இப்படியொரு கேள்வி எழும் என்று தெரிந்தே, அவர் இமயமலைக்குச் சென்றுவிட்டார். ஆனாலும், அங்கு அவர் கலந்துகொண்ட விழாக்கள் தொடர்பான புகைப்படங்கள் சுடச்சுட ரசிகர்கள் கைகளில் தவழ்ந்தன.
என்னதான் நம்பர் ஒன் இடத்தை விரும்பாவிட்டாலும், சூப்பர்ஸ்டார் பட்டத்தை மூளையில் மாட்டிக் கொள்ளாவிட்டாலும், ‘சவால்’ என்று வந்துவிட்டால் ஜெயித்துவிடத் துடிப்பதுதான் ‘ரஜினி’ எனும் நடிகருக்கு அழகு.
வந்த நாள் முதல் இந்த நாள் வரை அதனைச் செய்து காட்டுவதாலேயே, அவரை ‘சூப்பர்ஸ்டார்’ என்றும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.
– உதய் பாடகலிங்கம்