காலம் கொன்றது, கவிதை வென்றது!

கவிஞர் நா.முத்துக்குமார் நினைவுநாள் பதிவு:

ஸ்தல புராணம்
—————–
பெருமாள் கோயில் பிராகாரமும்
பல்லக்குத் தூக்கிகளின் கோஷமும்
ஆயிரங்கால் மண்டபத்தின்
அமானுஷ்ய இருட்டும்கூட
காலத்தில் கரையாமல்
அப்படியே இருக்கின்றன நண்பா!

தன் தம்பியுடன் வந்து
நம் பார்வைகளுடன் திரும்பும்
காயத்ரியின்
கால் தடங்களில் மட்டும்
சிமெண்ட் பூசியிருக்கிறார்கள்!

– கடந்துபோன காதலின் நினைவுகளை இதுபோல இன்னும் ஈரமாகவே வைத்திருக்க முடியுமா?. முடியும். நளினமும், எளிமையும், வலிமையும் கொண்ட கவிதைகளை வடிக்கும் நா.முத்துகுமார் போன்றவர்களாலும், அவர் கவிதையைப் படித்து, காதல் காயத்தை ஆற்றிக் கொண்டவர்களாலும்.

பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்றோர் திரையிசைப் பாடல்களை திசையெல்லாம் பரப்பிவிட்டு, தனது ஆளுமையை அன்றாடம் நிரூபித்துக் கொண்டிருக்க, 90களின் இறுதியில் இளைய ஆளுமை ஒன்று, தமிழ்த்திரைப் பாடல்களில் தனது ஆதிக்கத்தின் முத்திரையை அமைதியாகப் பதித்தது. அதன் பெயர் நா.முத்துக்குமார்.

மர‌‌‌பு சார்ந்த தமிழ் வாழ்வியலை பாடிக்கொண்டிருந்த கவிஞர்களுக்குப் பிறகு, களத்திற்கு வந்த நா.முத்துக்குமார், இயற்கை சார்ந்த வாழ்வியலையும், கண்ணியம் தொலைக்காத காதலின் வடிவத்தையும், கவி‌‌தைகளில் படம் பிடித்துக் காட்டினார்.

‘காற்றினில் கிழியும்
இலைகளுக்கெல்லாம்
காற்றிடம் கோபம் கிடையாது’
– என இயற்கையோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட கவிஞன்.

ஆழமான வார்த்தைத் தேடல் அவரிடம் இருக்காது. ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் ஆழமாகவே பதியும்.

‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை’
– இந்த வர்ணனையில் ஒன்றும் குறையில்லைதானே?.

‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்’
– என்ற சிறந்த குழந்தை இலக்கியத்தை எழுதியவரும் நா.முத்துக்குமார்தான்.

‘நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்’

– காதலின் கனமான நினைவுகளை, உள்ளம் சுமக்கும் வலிமையை தரவேண்டும் என ஆத்திகர்கள் இறைவனிடமும், நாத்திகர்கள் இயற்கையிடமும் மன்றாடுவார்கள்.

நா.முத்துக்குமாரின் இந்த ‘காதல் மன்றாட்டு’ பாடல், யாரிடம் மன்றாடுகிறதோ?.

நா.முத்துக்குமார் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி, 90-களின் இறுதியிலிருந்து, 2015-ம் ஆண்டு வரை தமிழ் திரையிசையை, முன்னணிப் பாதையில் இட்டுச் சென்றது.

ஆனால், காலம் யாருடைய சிபாரிசையும், ஆசையையும் பூர்த்தி செய்வதில் அக்கறைக் காட்டுவதில்லை.

கவிதை நண்பனை, காலன் கைபிடித்து கூட்டிச் சென்றபோது, அதை தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியவில்லை. மரணம் பற்றிய வதந்தி:

திருஷ்டி கழிந்தது என்றார்கள்
தீர்க்காயுசு என்றார்கள்
படபடத்தோம் என்றார்கள்

எப்போதோ எழுதிய
என் கவிதையைச் சொன்னேன்.
”இறந்துபோனதை
அறிந்த பிறகுதான்
இறக்க வேண்டும் நான்!

– என்று எழுதிய கவிஞனே… இறந்து போனதை அறிந்த பிறகுதான், நீ இறந்து போனாயா?

(கவிஞரும், பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் நினைவு தினம் (ஆகஸ்ட் 14, 2016) இன்று)

✍️ லாரன்ஸ் விஜயன்

Comments (0)
Add Comment