நூலகத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதா?

ஆகஸ்ட் 12 – தேசிய நூலக தினம்.

சிறப்பு மிக்க இந்த நாள் கொண்டாடப்படுவதற்குக் காரணமானவர், தமிழகத்தை சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன். இவர் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

புது + அகம் = புத்தகம்… நமக்குள் உருவாகும் புது அகம்தான் புத்தகம் என்றும் வரையறுத்துக் கொள்ளலாம். புறத்தில் மாற்றம் வேண்டும் என்றால் முதலில் அகத்தில் மாற்றம் வேண்டும். அக மாற்றத்திற்கு மிக எளிய வழிமுறை புத்தகம்தான்.

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு என்கிரார் சிக்மண்ட் ஃப்ராய்ட். ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.

‘புத்தகம் இல்லாத அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது’ என்கிறார் சிசரோ. இவ்வாறு பல முன்னோர்கள் புத்தகங்களின் பெருமையை கூறிச்சென்றுள்ளனர்.

இத்தகைய புத்தகங்களை தாங்கி நிற்பதுதான் நூலகம். பண்டைக்காலத்தில் கல்வியறிவு பெற்றோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

அரண்மனைகளிலும் கோவில்களிலும் பெரும்பாலும் படிக்கும் நோக்கமின்றி பெருமைக்காக மட்டுமே நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

பிற்காலத்தில் நூல்கள் படிப்பதற்கே என்ற எண்ணம் தோன்றி நூலகங்கள் உருப்பெற்றன. ‘கண்டதைப் படிப்பவன் பண்டிதன் ஆவான்’ என்பது பழமொழி. எதுவும் தெரியாமல் பிறந்த நாம் அறிஞனாக நூலகப் படிப்பு அவசியம்.

அத்தகைய தேசிய நூலக தினம்தான் இன்று கொண்டாடப்படுகிறது. அதற்கு காரணம், தமிழகத்தை சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன்தான்.

சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன் 1892-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி பிறந்தார்.

இவரின் பிறந்தநாளான இன்றுதான் தேசிய நூலக தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் சென்னை மாகாணத்தின், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த சீர்காழியில் பிறந்தார்.

இவரது தந்தை ராமாமிருதம் மற்றும் தாயார் சீதாலட்சுமி. ராமாமிருதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உபயவேதாந்தபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

மக்களுக்கு ராமாயணக் கதைகூறும் வல்லமை பெற்ற இவருக்கு சுற்றாரிடம் நல்ல மதிப்பு இருந்தது. ராமாமிருதம் 1898-ஆம் ஆண்டில், அவரது 30 ஆவது வயதில் திடீரெனக் காலமானார்.

அப்போது ரங்கநாதனுக்கு ஆறு வயது. பள்ளி ஆசிரியராக இருந்த பாட்டனாரிடம் வளர்ந்தார். இவர் மூலமாக இந்து நூல்கள் பற்றி ரங்கநாதனுக்குப் பயிற்சி ஏற்பட்டது.

இதனால், நூலகவியல் தொடர்பான இவரது ஆக்கங்களிலும் ஆங்காங்கே இந்து நூல்களின் தாக்கங்கள் காணப்பட்டன.

சீர்காழியில் இருந்த பள்ளி ஒன்றில் தனது கல்வியைத் தொடங்கிய ரங்கநாதன், பின்னர் அதே ஊரில் இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

1909-இல் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் சேர்ந்த ரங்கநாதன் 1913-இல் இளங்கலைப் பட்டத்தையும், 1917-ஆம் ஆண்டில் கணிதத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்று வெளியேறினார்.

பின்னர் சைதாப்பேட்டையில் இருந்த ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியத் தகுதிச் சான்றிதழையும் பெற்றார்.

ரங்கநாதன் 1907-ஆம் ஆண்டில் அவருக்கு 15 வயதாக இருக்கும்போது ருக்மணி என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். 

928-ல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குளத்தில் குளிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ருக்மணி இறந்துவிட்டார்.

இந்தத் திருமணம் மூலம் ரங்கநாதனுக்குப் பிள்ளைகள் இல்லை. தொடர்ந்து ரங்கநாதன் 1929-ல் இரண்டாவது முறையாக சாரதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

கல்வியை முடித்துக்கொண்ட ரங்கநாதன், மங்களூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்த அரசாங்கப் பள்ளிகளிலும், பின்னர் மதராஸ் பிரெசிடென்சி கல்லூரியிலும் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கற்பித்து வந்தார்.

தனது வருமானத்தை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் மதராசுப் பல்கலைக்கழகத்தில், நல்ல சம்பளத்துடன் கூடிய நூலகர் வேலைக்கு விண்ணப்பம் செய்தார்.

1924 ஜனவரியில் மதராஸ் பல்கலைக்கழகத்தில் நூலகராக நியமனம் கிடைத்தது.

இவருக்கு நூலகருக்கான கல்வித் தகைமையோ, அனுபவமோ இருக்கவில்லை. அத்துடன், பள்ளிகளில் காணப்பட்ட கலகலப்பான சூழலுக்கு எதிராக நூலகத்தின் அமைதியான சூழல் அவருக்குப் பிடிக்கவில்லை.

மீண்டும் ஆசிரியத் தொழிலுக்கே செல்ல முடிவு செய்தார். ஆனாலும், பிரெசிடென்சி கல்லூரியின் அதிபரின் ஆலோசனையின்படி, நூலகர் பயிற்சிக்காக லண்டனுக்குச் சென்று திரும்பும்வரை அந்த முடிவை நிறுத்தி வைத்தார்.

9 மாதங்கள் பயிற்சிக்காக லண்டனுக்குச் சென்ற ரங்கநாதன் 1925 ஆம் ஆண்டில் நாடு திரும்பினார்.

அக்காலத்தில் மதராசுப் பல்கலைக்கழக நூலகம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

சரியான ஒழுங்கமைப்போ போதிய ஊழியர்களோ இருக்கவில்லை.

நூலகத்தைப் பயன்படுத்துவோரும் மிகவும் குறைவாகவே இருந்தனர். இந்த நிலையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்ட ரங்கநாதன், நூலகத்தின் குறைபாடுகளை நீக்குவதற்காகப் பல சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதுடன், அங்கிருந்த நூல்களை வகைப்படுத்தி, விபரப் பட்டியல்களையும் தயாரித்தார்.

நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர் ரங்கநாதன்தான். இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படும் இவர், அத்துடன், நூலகவியலில் இவரது அடிப்படையான சிந்தனைகளுக்காக உலகின் பல பகுதிகளிலும் பெயர் பெற்றவர்.

நூலகவியலுக்குச் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.

தவிர, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு நூலகவியல் சார்ந்த உயர்தொழிற் கழகங்களில், உறுப்பினராக இருந்து உயர் பதவிகளையும் வகித்துள்ளார். 1972ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி ரங்கநாதன் மறைந்தார்.

– நன்றி: புதிய தலைமுறை

Comments (0)
Add Comment