– உச்சநீதிமன்றம் அதிரடி
உச்சநீதிமன்றத்தில் ஷாஹீன் அப்துல்லா என்ற பத்திரிகையாளா் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், “பல்வேறு மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற 27-க்கும் மேற்பட்ட பேரணிகளில் முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும், அவா்களை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் புறக்கணித்து ஒதுக்கவேண்டும்” என்று வெறுப்புணா்வுடன் பேசப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஹரியாணா மாநிலம் ஹிசாா் பகுதியில் சம்ஹஸ்த் ஹிந்து சமாஜ் அமைப்பின் பேரணி நடைபெற்றது.
அப்போது அந்தப் பகுதியில் 2 நாட்களுக்குப் பிறகு முஸ்லிம்களை வேலைக்கு வைத்துள்ளவா்களின் கடைகள் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப்படும் என்று பேரணியில் ஈடுபட்டவா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.
காவல் துறையினா் முன்னிலையில், இவ்வாறு அவா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.
கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள சாகா் பகுதியில் காவல் துறையினா் இருந்தபோதே முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடவும், அவா்களை ஒதுக்கிவைக்கவும் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவா் ஒருவா் வெளிப்படையாக அழைப்பு விடுத்தாா்.
இதுபோன்ற பேச்சுகள் கொண்ட பேரணிகள் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, நாடு முழுவதும் வெவ்வேறு மதத்தினா் இடையே விரோதம், அளவிட முடியாத வன்முறைக்கு வழிவகுக்கும்.
எனவே, இதுபோன்ற பேரணிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று ஹரியாணா உள்பட பல்வேறு மாநிலங்களின் காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்எவிஎன் பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வெவ்வேறு சமூகத்தினா் இடையே நல்லிணக்கம், மரியாதை இருக்க வேண்டும்.
அனைத்து சமூகத்தினருக்கும் பொறுப்புணா்வு உள்ளது. வெறுப்புணா்வு பேச்சு நல்லதல்ல. அதை எவராலும் ஏற்கமுடியாது.
இந்தப் பேச்சுகள் குறித்த புகாா்களின் உள்ளடக்கம் மற்றும் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து முடிவு எடுப்பதற்கு 3 அல்லது 4 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்குமாறு மாநில காவல் துறை தலைவா்களிடம் கேட்டுக்கொள்ளலாம்.
இந்தக் குழு அமைக்கும் யோசனை குறித்து மத்திய அரசிடம் இருந்து அறிவுறுத்தல்களைப் பெற்று தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம். நடராஜுக்கு அறிவுறுத்தினா்.
வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைக்கப்பட்டது.