எதிர்க்கட்சிகள் வியூகமும், மோடியின் நம்பிக்கையும்!

பெங்களூருவில் கூடிய எதிர்க்கட்சிகள், தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைத்து, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டார்கள்.
இந்த அணியில் 26 கட்சிகள் உள்ளன.

பெங்களூருவில் ’இந்தியா’ உருவான அதே நாளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் கூடினார்.

இந்தக் கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் இருந்து அதிமுக, பாமக, தமாகா, புதிய தமிழகம், உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

“மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம்” என 38 கட்சிகளும் சூளுரை எடுத்தன.
ஆளும் கூட்டணியில் கட்சிகள் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும் பல கட்சிகள் ‘லட்டர்பேடு’ கட்சிகளாகவே உள்ளன.

ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிர்க்கட்சிகள் அணிக்கு பலமான தளம் உள்ளது.

வழக்கமாக ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படும். இரண்டு முறை தொடர்ச்சியாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்துள்ள மோடி அரசுக்கும் அது போன்ற சிக்கல் உண்டு.

இதனை மோடி எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பது போகப்போக தெரியும்.
கடந்த தேர்தலில் இரு கூட்டணிகளின் பலம், கிடைத்த வெற்றிகள், வாக்கு வங்கி நிலவரம் ஆகியவற்றை பார்க்கலாம்.

பாஜக கூட்டணியின் பலம்:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மக்களவையில் உள்ள பலம் மற்றும் அவற்றின் வாக்கு சதவீதத்தை முதலில் பார்க்கலாம்.

பாஜக கடந்த தேர்தலில் 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் ஓட்டு சதவீதம் 37.3 %ஆகும்.

கூட்டணி கட்சிகளின் பலம் இது:

கட்சிகள்     —–   வென்ற தொகுதிகள்     ——  வாக்குச் சதவீதம்
ராஷ்டிரிய லோக் ஜனசக்தி  ———— 6  ————— 0.52 %
அப்னா தளம் ————2 ———— 0.17 %
அதிமுக ———— 1 ————1.35 %
தேசிய மக்கள் கட்சி ————1———— 0.07 %
ஜனநாயக முன்னேற்ற கட்சி———— 1 ———— 0.08 %
மிசோ தேசிய கட்சி ————1 ———— 0.04 %
சிக்கிம் கிராந்தி மோர்ச்சா ———— 1———— 0.03 %
ஜார்கண்ட் மாணவர் யூனியன்———— 1 ———— 0.11 %

பாஜக கூட்டணியில் 38 கட்சிகள் இருந்தாலும் பாமக, தமாகா உள்ளிட்ட பல கட்சிகளுக்கு மக்களவையில் ஒரு இடமும் இல்லை.

’இந்தியா’ கூட்டணி

காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள ‘இந்தியா‘ கூட்டணியில் 26 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கடந்த தேர்தலில் இந்த அணியில் உள்ள கட்சிகள் மொத்தம் 135 இடங்களில் வென்றிருந்தன.

இரண்டாக பிளவுபட்டுள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் வென்ற இடங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும் ‘இந்தியா’அணியில் உள்ளன.

’இந்தியா’ அணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் கடந்த தேர்தலில் 52 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஓட்டு சதவீதம் 19.5 %.
கூட்டணி கட்சிகளின் பலம் இது:

கட்சிகள்     —–   வென்ற தொகுதிகள்     ——  வாக்குச் சதவீதம்
திமுக ———— 24 ———— 2.34 %
திரினாமூல் காங்.———— 22 ———— 4.06 %
ஐக்கிய ஜனதா தளம்———— 16 ————1.45 %
சமாஜ்வாதி ————5 ———— 2.55 %
சிபிஎம் ————3 ———— 1.75 %
முஸ்லிம் லீக்———— 3 ————0.2%
சிபிஐ ————2 ————0.58 %
விடுதலைச் சிறுத்தைகள் ————1 ————0.08 %
ஆம் ஆத்மி———— 1 ————0.44 %
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ————1 ————0.31 %
ஆர்.எஸ்.பி ————1 ————0.12 %
கேரள காங்.———— 1———— 0.07 %

’இந்தியா’ அணியில் உள்ள ஆர்.ஜே.டி. உள்ளிட்ட பல கட்சிகளுக்கு மக்களவை ஒரு இடமும் இல்லை.

விடுதலைச் சிறுத்தைகள் இரு இடங்களில் ஜெயித்தனர். ஒரு தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால், தேர்தல் ஆணையம் அதனை கணக்கில் கொள்ளவில்லை.

அதேபோல் மதிமுகவும் உதயசூரியன் சின்னத்தில் வென்றதால் அந்த கட்சி எம்.பி., திமுக எம்.பி.யாகவே கருதப்படுகிறார்.

நடுநிலை வகிக்கும் கட்சிகள் ஆளுங்கட்சி பக்கமும் சேராமல், ‘இந்தியா‘ அணியிலும் ஒட்டாமல் 10 க்கும் மேற்பட்ட கட்சிகள் நடுநிலையில் உள்ளன.

இந்த கட்சிகளுக்கு 10 சதவீதத்துக்கும் கூடுதலான ஓட்டுகள் உள்ளன. மக்களவையில் இன்றைய தேதியில் இந்த கட்சிகளுக்கு 63 எம்.பி.க்கள் உள்ளனர்.

இதில் ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானாவின் பி.ஆர்.எஸ்., ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முக்கியமானவை. அந்த மூன்று கட்சிகளும் மாநிலத்தை ஆளும் கட்சிகளாகும்.

இந்த கட்சிகள் மோடியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளன.

மக்களவைத் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால், இந்த கட்சிகளை வளைத்து விடலாம் என கணக்கு போட்டுள்ளார் மோடி.

டெல்லி மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளது.

அந்த சட்ட மசோதா நிறைவேற, பிஜு ஜனதா தளமும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் ஆளும் கட்சிக்கு கை கொடுத்து உதவின.

மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக இரு கட்சிகளும் ஓட்டளித்தன.
இந்த கட்சிகள் ’’நடுநிலை’’ என சொல்லிக்கொண்டாலும், பாஜக ஆதரவு கட்சிகள் தான்.

ஒருவேளை ‘இந்தியா’ கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைத்தால், இந்த இரு கட்சிகளும் அந்த அணியை ஆதரிக்கவும் தயங்காது என்பதே உண்மை.

நடுநிலை வகிக்கும் கட்சிகளான மாயாவதியின் பகுஜன் சமாஜ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் ஊசலாட்டத்தில் உள்ள கட்சிகள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

நடுநிலை வகிக்கும் கட்சிகள், புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதே யதார்த்த நிலையாக உள்ளது.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment