அயோத்திதாச பண்டிதரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்!

உலகளாவிய தளத்தில் பெண்ணியம் என்பது சமத்துவத்தையும் பெண் விடுதலையையும் அடிப்படையாகக் கொண்டது என்கிறபோதும் நிலத்துக்கு ஏற்பவும் பண்பாட்டுக்கு ஏற்பவும் தனித்த கூறுகளையும் மாற்றங்களையும் உள்ளடக்கியது.

இந்தியாவில் பெண்ணிய இயக்கம் எழுச்சிபெறத் தொடங்கிய காலகட்டத்தில் சமூக நீதியை உயர்த்திப் பிடித்த ஆண்களும் பெண்களுக்கு ஆதரவான கருத்துகளை முன்வைத்தனர்.

சமூக விடுதலைப் போராளியும் பௌத்த மறுமலர்ச்சியாளருமான பண்டித் அயோத்திதாசர் அவர்களில் ஒருவர்.

தான் நடத்திய ‘தமிழன்’ (1907-1914) இதழில் பெண்ணுரிமை குறித்த கட்டுரைகளை வெளியிட்ட தோடு பெண்களுக்கென்று தனி பத்தியையும் வெளியிட்டார்.

இவை தவிர, பெண்கள் தொடர்பான தகவல்கள் பலவற்றையும் அதில் பதிவுசெய்துள்ளார்.

அயோத்திதாச பண்டிதரின் பெண் விடுதலைச் சிந்தனைகள், ‘தமிழன்’ இதழில் வெளியான பெண்கள் பத்தியில் இடம்பெற்ற கட்டுரைகள், பிற பெண்ணியச் செய்திகள் ஆகியவற்றை பெ:விஜயகுமார் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

நூறாண்டுக்கு முந்தைய பெண்ணியக் கட்டுரைகளை வாசிக்கிறபோது அந்தக் காலத்துப் பெண்களின் நிலையும் இன்றைக்கும் அவற்றின் தேவை இருப்பதையும் உணர முடிகிறது.

சாதி மறுப்புத் திருமணம், மது ஒழிப்பு, கைம்பெண் மறுமணம், ஆணாதிக்கம் என்று பலவற்றையும் அயோத்திதாசர் கவனப்படுத்தியுள்ளார்.

1905இல் ‘தமிழ் மாது என்கிற மாத இதழை நடத்திவந்த கோ.சொப்பநேஸ்வரி அம்பாள், பெண்கள் பத்தியில் தொடர்ந்து எழுதிவந்துள்ளார்.

அந்தக் கட்டுரைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண்கள் சார்ந்த கட்டுரைகள் மட்டுமல்லாமல் நாய், எருது, பூனை என விலங்குகள் பற்றிய கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.

எழுதியவர் பெண் என்பதால் இதில் இடம்பெற்றுள்ளன என்றே தோன்றுகிறது. அன்றைய சமூக – அரசியல் நிலையையும் பெண்களின் நிலையையும் புரிந்துகொள்ள இந்நூல் உதவும்.

நூல்: அயோத்திதாச பண்டிதரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்
தொகுப்பும் பதிப்பும்: முனைவர் பெ.விஜயகுமார்
வெளியீடு: பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்
விலை: ரூ,300
தொடர்புக்கு: 9881744460

நன்றி. இந்து தமிழ் நாளிதழ்

Comments (0)
Add Comment