நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை, ரூ.5000 அபராதம்!

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. 1970-கள் தொடங்கி 90-களின் முற்பகுதி வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தவர்.

கே.பாலசந்தர் 1976-ல் இயக்கிய ‘மன்மத லீலை’ படத்தில் கமலுடன் நடித்திருந்தார் ஜெயப்பிரதா. தமிழில் இவர் அறிமுகமான படமும் இது தான். 1979ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல் – ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்திலும் இவர் நடித்துள்ளார்.

1970 முதல் 90-கள் வரை இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்த ஜெயப்பிரதா, அதன்பிறகு கதாநாயகியாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

ஆனால், சில படங்களில் கவுரவ வேடங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இடையே ‘தசாவதாரம்’ படத்தில் கமலுடன் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நகதாவை 1986ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட  ஜெயப்பிரதா பின்னர் அரசியலில் ஆர்வம் காட்டினார்.

முதலில் என்.டி.ராமாராவின் தெலுங்கு தேசக் கட்சியில் 1994ம் ஆண்டு ஜெயப்பிரதா தன்னை இணைத்துக் கொண்டார்.

பின்னர் அந்த கட்சியிலிருந்து விலகி சந்திரபாபு நாயுடு பிரிவில் இணைத்துக் கொண்டார்.

சந்திரபாபு நாயுடுவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது கட்சியில் இருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

2004ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த பொதுத் தேர்தலின் போது ராம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019ல் பாரத ஜனதா கட்சியில் சேர்ந்தார். ஏறத்தாழ 30 ஆண்டுகளில் 300 திரைப்படங்கள் நடித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ராம்குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் திரையரங்கம் நடத்தி வந்தார்.

அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது.

இது தொடர்பாக, தொழிலாளர் அரசுக் காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதை எதிர்த்து, ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், ஜெயப்பிரதா தரப்பில், தொழிலாளர்களிடம் பெற்ற தொகையைச் செலுத்திவிடுவதாகத் தெரிவித்தார்.

இதற்கு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் 6 மாதம் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

Comments (0)
Add Comment