கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் ரஜினிகாந்த் படம் என்ற எதிர்பார்ப்பைத் தாங்கி நிற்கிறது ‘ஜெயிலர்’. பாட்டு, பைட்டு, காமெடி, சென்டிமெண்ட், பஞ்ச் டயலாக் என்ற தனக்கென்று வகுத்துக்கொண்ட பார்முலாவை மீறி ரஜினி நடித்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அந்த வரிசையில் ஒன்றாக இடம்பெற முனைந்திருக்கிறது ‘ஜெயிலர்’. இதில் ரஜினிக்கென்று பாடல்கள் இல்லை; பத்து பேர் அந்தரத்தில் பறக்கும் அளவுக்கு ஆக்ஷனில் அவர் இறங்கவில்லை; ‘சவால்’ விட்டு வசனம் பேசுவதோ, ‘பஞ்ச்’ பேசி அதிர வைப்பதோ கொஞ்சம் கூட இல்லை.
அவரது உண்மையான வயதைப் பிரதிபலிக்கிற ஒரு பாத்திரத்தை ஏற்று, அதில் ‘ஹீரோயிசம்’ வெளிப்படும் வகையில் நடித்திருக்கிறார். அவ்வளவே!
இந்த படம் எந்தளவுக்கு நம்மைக் கவர்ந்திழுக்கிறது?
சிலை கடத்தல் கதை!
தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்குகளைத் தோண்டியெடுத்து விசாரணை செய்து வருகிறார் உதவி கமிஷனர் அர்ஜுன் (வசந்த் ரவி). அவரது தந்தை முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்); பணியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் பொழுதைக் கழிக்கிறார்.
மனைவி, மகன், மருமகள், பேரன் என்றிருக்கும் அவர், தன்னை ஒரு சாதாரண மனிதராகவே சமூகத்தில் காட்டிக் கொள்கிறார். ஆனால், வர்மனின் (விநாயகம்) ஆட்களோடு மோதுகையில் அவரது இன்னொரு முகம் தெரிய வருகிறது.
திடீரென்று ஒருநாள், அர்ஜுனை காணவில்லை என்று தகவல் வருகிறது. அவர் இறந்துவிட்டதாகச் சொல்கின்றன சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள். அதன் தொடர்ச்சியாக, வர்மன் கும்பலைத் தேடிச் செல்கிறார் முத்துவேல்.
அந்த பயணத்தில், அவருக்கு சில எதிர்பாராத உண்மையொன்று தெரிய வருகிறது. அது என்ன என்பதோடு படம் முடிவடைகிறது.
சிலை கடத்தல் விவாகரத்தைத் தொட்டுச் சென்றாலும், இந்தக் கதையில் அது குறித்த ‘டீட்டெய்லிங்’ ஏதும் இல்லை. அதனால், ‘விக்ரம்’ பாணியில் இறந்துபோன மகன் சாவுக்குப் பழி வாங்க விரும்பும் ஒரு தகப்பனின் வேட்கையே இதன் மையமாக உள்ளது.
ஹீரோயிச ஷாட்கள்!
காலா, கபாலி போன்று இதிலும் தன் வயதையொத்த பாத்திரமொன்றில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். அதனால் அவரது நடை, உடை, பாவனை, ஒப்பனையை எதிர்மறையாக விமர்சிக்கத் தேவையில்லை.
வழக்கமான மசாலா படமாக இல்லாமலிருந்தாலும், இதிலும் அவரது இமெஜுக்கு ஏற்றவாறு சில ‘விட்டுக் கொடுத்தல்கள்’ நிகழ்ந்துள்ளன.
அவரது பாத்திரம் ‘ஹீரோயிசம்’ மிக்கது என்பதைத் திரைக்கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார் இயக்குனர் நெல்சன்.
அந்த விஷயத்தில் ‘சஸ்பென்ஸ்’ வைக்கத் தேவையில்லை என்று அவர் நினைத்ததற்குக் காரணம் என்னவோ?
ஆனால், அதுவே படத்தில் ஆக்ஷன் காட்சிகள் வரும்போது ஆச்சர்யத்தை ஏற்படுத்தாமலிருக்கக் காரணமாகிறது.
அதேநேரத்தில், ரஜினிக்கான ‘ஹீரோயிச பில்டப்’ ஷாட்கள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதற்காகவே, ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
நிர்மலின் படத்தொகுப்பு, காட்சிகளை வெகு நெருக்கமாகக் கோர்த்துள்ளது. கிரணின் கலை வடிவமைப்பு, வெகு எளிதாக ரியல் லொகேஷன்கள் உடன் செட்களை இணைத்துப் பார்க்க முயன்றிருக்கிறது.
அனிருத் ரவிச்சந்தரின் இசையில் ‘ஹுக்கும்’, ‘காவாலா’ பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டன. அதனை மிஞ்சுவது போல, பின்னணி இசை ஆங்காங்கே மிரட்டலாக அமைந்துள்ளது.
ரஜினியின் ராஜ்ஜியம் என்று சொல்லும் அளவுக்கு, ‘ஜெயிலர்’ படம் முழுக்க அவரே நிறைந்திருக்கிறார். ஆனாலும், ‘யானைப் பசிக்கு சோளப்பொறி’ என்பது போல அவரது திறமை மிகச்சிறியளவில் வெளிப்பட்டிருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது.
ரம்யாகிருஷ்ணன் பாத்திரம் இரண்டொரு இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறது. மகனாக வரும் வசந்த் ரவிக்குத் திரைக்கதையில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
ஆனால், அவரது மகனாக வரும் ரித்துவுக்கு கிடைத்த ‘ஸ்கோப்’ கூட, மனைவியாக வரும் மிர்ணாவுக்குக் கிடைக்கவில்லை.
சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால் ஆகியோர் இதில் ‘கௌரவமாக’ தலைகாட்டியிருக்கின்றனர்.
மூவரையும் ‘பில்டப்’களோடு திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர். மாகரந்த் தேஷ்பாண்டே, கிஷோர் போன்றவர்களும் கூட, இதில் ஒரு காட்சிக்கு வந்து சென்றிருக்கின்றனர்.
முன்பாதி முழுக்க யோகிபாபு, ரஜினியுடன் சேர்ந்து திரையில் தோன்றி அவ்வப்போது நம்மைக் கிச்சுகிச்சு மூட்டுகிறார். பின்பாதியில் தெலுங்கு நடிகர் சுனில், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி கூட்டணி அந்த வேலையைச் சேர்ந்து செய்கிறது.
விழுந்து புரண்டு சிரிக்க முடியாவிட்டாலும், லேசாகப் புன்னகைக்க வைக்கிறது இவர்களது பெர்பார்மன்ஸ்.
வில்லனாக வரும் விநாயகன், வெகு அலட்சியமாக அப்பாத்திரத்தைக் கையாண்டுள்ளார். மாரிமுத்துவும், விநாயகனின் நண்பராக வரும் நபரும் கூட நம்மை எளிதில் கவர்கின்றனர்.
இவர்கள் போதாதென்று விக்ரமில் வந்த ஜாபர் சாதிக், சிவராஜ்குமாரின் அடியாட்களாக வருபவர்கள். தமன்னா, விடிவி கணேஷ் என்று பலர் இதில் முகம் காட்டியுள்ளனர்.
என்னதான் ரஜினி படம் என்றாலும், ‘ஜெயிலர்’ மீதான எதிர்பார்ப்பு எகிற இயக்குனர் நெல்சனும் ஒரு காரணம். அவர் திரையில் ரஜினியை காட்டியிருக்கும் விதம் நம்மை அதிர்வுற வைக்கிறது. ஆனால், ‘டாக்டர்’ படத்தில் நிறைந்திருந்த லாவகமான கதை சொல்லல் இதில் மிஸ்ஸிங்!
ஓவர் வன்முறை!
திரைப்படங்களில் வன்முறை காட்சிகள் இடம்பெறுவது புதிதல்ல. அதேநேரத்தில், ஒரு கதையில் அதனைத் தவிர்த்திருக்க முடியுமா, முடியாதா என்பதைப் பொறுத்து, அதனை ஏற்பதா வேண்டாமா என்று முடிவு செய்யலாம்.
திருவிழா போன்று கூட்டத்தை தியேட்டருக்கு இழுத்து வரும் நட்சத்திரங்களின் படங்களில் அது போன்ற காட்சிகள் நிச்சயம் தேவையற்ற ஆணிதான்.
மணிரத்னத்தின் ‘தளபதி’க்கு முன்னிருந்தே, அவ்வப்போது ரஜினியின் படங்களில் வன்முறை தெறிக்கும் வழக்கம் உண்டு.
தொண்ணூறுகளில் அதன் அளவைக் குறைக்க முயன்றார் ரஜினி. ஆனால், ‘ஜெயிலர்’ படத்தில் அந்த வரம்பு அனாயசமாக மீறப்பட்டுள்ளது.
நெல்சனின் முந்தைய படங்களான ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’ இரண்டிலும் நகைச்சுவை அதிகமிருக்கும். அவற்றில் சில, நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.
இதில், அது நிகழவே இல்லை. ரஜினி, யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு தியேட்டரில் சிரிப்பலை எழுந்தாலும், அது குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் பிடிக்குமா என்பது கேள்விக்குறியே!
கமர்ஷியல் படத்தில் லாஜிக் தேவையில்லை என்பதே உண்மை; அதையும் மீறி, ‘இது ஏன் இப்படி நிகழணும்’ என்ற கேள்வி நம்முள் தாண்டவமாடக் கூடாது.
இந்த படத்தில், விடிவி கணேஷ் பொறுப்பில் தனது குடும்பத்தினரை ரஜினி ஏன் ஒப்படைக்கிறார் என்பதற்குப் பதிலே சொல்லப்படவில்லை. போலவே, ஜெயிலராக இருக்கும் நபருக்கு கேங்ஸ்டர்களுடன் இருக்கும் தொடர்பு எத்தகையது என்ற கேள்விக்கும் திரைக்கதையில் பதில் இல்லை.
ஆனால், இரண்டுமே இந்தக் கதையோடு நாம் ஒன்றுவதைத் தடுத்து நிறுத்தக்கூடியது. மீண்டும் ஒருமுறை படம் பார்க்கலாம் என்ற யோசனையைத் தள்ளிவைக்கும் அளவுக்கு வல்லமை கொண்டது.
’அதெல்லாம் தேவையில்லை, ஒருமுறை தலைவர் படம் பார்த்தால் போதும்’ என்பவர்கள் தாராளமாக ‘ஜெயிலர்’ பார்க்கலாம். ரஜினியின் பழைய பொலிவைப் பார்க்க முடியாவிட்டாலும், அவரது ஹீரோயிசத்தை கொண்டாட நிறையவே இடம் தருகிறது இந்த ‘ஜெயிலர்’!
– உதய் பாடகலிங்கம்