ஜெயிலர் ரிலீஸ் – பால் விநியோகத்தில் கவனமுடன் செயல்படுங்கள்!

 – பால் முகவர்களுக்கு அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவர்களின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதுதொடர்பாக அதன் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சில ரசிகர்களும், ரசிகர்கள் எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் சமூக விரோதிகளும்

பால் முகவர்களின் கடைகளில் நள்ளிரவில் இறக்கி வைக்கப்படும் பால் பாக்கெட்டுகளை டப்புகளோடு திருடிச் செல்லும் சம்பவங்கள் கடந்த காலங்களில் தொடர்ந்து அரங்கேறியுள்ளது என்பதையும், அதனால் பல பால் முகவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் இழந்துள்ளனர்.

அதிலும் கடந்த 2022ம் ஆண்டில் அஜீத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘வலிமை‘ திரைப்படம் வெளியான திரையரங்குகளின் வழியாக சென்ற பால் விநியோக வாகனங்களை மறித்து அதிலிருந்து பால் மற்றும் தயிரினை திருடி உயிரற்ற கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், தயிராபிஷேகம் செய்த நிகழ்வுகள் நடந்ததையும்,

அதற்கு முன் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி திரைப்பட வெளியீட்டின் போதும் பால் முகவர்கள் கடைகளில் இருந்து பால் பாக்கெட்டுகள் டப்புகளோடு களவாடப்பட்டதையும் நாம் எவரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.

இது போன்று பாதிக்கப்பட்ட பால் முகவர்கள் சார்பிலும், நமது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பிலும் காவல்துறையில் பல மாவட்டங்களில் புகார் அளிக்கப்பட்டதையும்,

“கடைகளுக்கு வெளியே இறக்கி வைக்கப்பட்டிருக்கும் பால் பாக்கெட்டுகள் திருடு போனால் நடவடிக்கை எடுக்க இயலாது” என காவல்துறை தரப்பில் கைவிரிக்கப்பட்டதையும் நாம் ஏற்கனவே கடந்த காலங்களில் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பதிவு செய்திருக்கிறோம்.

இந்த நிலையில், இரண்டாண்டு கால இடைவெளிக்குப் பின் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருக்கும் இத்தருணத்தில் திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் அவரது கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக ஒரு சில ரசிகர்களும், ரசிகர்கள் எனும் போர்வையில் உள்ள சமூக விரோதிகளும் இன்று நள்ளிரவிலோ அல்லது நாளை அதிகாலை நேரத்திலோ பால் முகவர்களின் கடைகளில் இருந்து பாலினை திருட முயற்சி செய்யலாம்.

குறிப்பாக, தமிழகம் முழுவதும் அத்திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளின் அருகாமையில் உள்ள பகுதிகளில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களின் கடைகளில் இருந்தோ அல்லது திரையரங்க வளாகங்கள் வழியாக செல்லும் பால் விநியோக வாகனங்களை வழி மறித்தோ பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகள் திருடப்படலாம் என்பதால் நமது வாழ்வாதாரத்தை நாமே காத்துக்கொள்ள கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

ஒரு வார காலத்திற்கு தினந்தோறும் நள்ளிரவு தொடங்கி காலை 6.00 மணி வரை தமிழகம் முழுவதும் அந்தந்தப் பகுதியில் உள்ள பால் முகவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சுழற்சி முறையில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதோடு,

ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் திரையரங்க வளாகங்கள் அமைந்துள்ள சாலை வழியாக நள்ளிரவு முதல் அதிகாலை வரை பால் விநியோகம் செய்யச் செல்வதை தவிர்த்து மாற்றுப் பாதையை பயன்படுத்தி பொதுமக்களுக்கு தங்குதடையற்ற சேவையை வழங்கி,

பால் முகவர்கள் அனைவரும் தங்களின் வாழ்வாதாரத்தை தற்காத்துக் கொள்ளுமாறும், அன்போடு கேட்டு கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment