வெயில் அதிகம் உள்ள நாட்களில் தாகமும் அதிகரிக்கும். அதுபோன்ற தாகம் எடுக்கும் தருணங்களில் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது இளநீர். இதனைக் குடித்த பிறகு அதில் இருக்கும் வழுக்கை தேங்காயை நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா?
இந்த சதைப் பற்றான தேங்காயில் ஏராளமான தாதுக்கள் மற்றும் தனிமங்கள் போன்றவை உள்ளன. ஆரோக்கியமான நன்மைகளும் பல இருக்கின்றன. இதனைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
இளநீரில் உள்ள வழுக்கை உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இளநீர் உடல் சூட்டை தணிப்பது போலவே அதில் உள்ள வழுக்கையும் உடல் சூட்டை குறைக்க உதவுவதுடன் உடல் வெப்ப நிலையை சமநிலையின் வைக்கவும் உதவுகிறது.
இந்த வழுக்கைத் தேங்காயை நிறைய பேர் விரும்புவதில்லை. வெறும் இளநீரை மட்டும் குடித்துவிட்டு மற்றதை தூக்கி எறிந்து விடுகின்றனர்.
இதற்குக் காரணம் தேங்காய் உடல் எடையை அதிகரிக்கும் என பலரும் நினைக்கின்றனர்.
ஆனால், தேங்காயில் அந்த அளவிற்கு கொலஸ்ட்ரால் கிடையாது. உண்மையில் தேங்காய் உங்கள் உடல் எடையைக் குறைக்க பயன்படுகிறது. சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
தேங்காயில் நிறைய நார் சத்துக்கள் உள்ளன. இது செரிமான ஆரோக்கியத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
– வி. சங்கீதா