மக்களவைத் தேர்தலில் ஜி.கே.வாசனின் கணக்கு?

தமிழ்நாட்டில் மறு ஆக்கம் செய்யப்பட்ட மூன்று கட்சிகளில் ஒன்று, தமாகா என அழைக்கப்படும் தமிழ் மாநில காங்கிரஸ்.

மற்ற இரண்டு கட்சிகள் எவை?

ஒன்று – நாம் தமிழர் கட்சி.

தினத்தந்தி பத்திரிகையின் நிறுவனரான சி.பா.ஆதித்தனார் 1958 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தார்.

1962 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டபேரவைத் தேர்தலில் இந்தக் கட்சி தனித்து களம் கண்டது. வெற்றி கிட்டவில்லை.

இதனால் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து நான்கு இடங்களில் வென்றது. அந்தத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

பின்னர், நாம் தமிழர் கட்சியை திமுக வோடு இணைத்து விட்டார், ஆதித்தனார்.
ரொம்ப ஆண்டுகளுக்கு பிறகு, நாம் தமிழர் கட்சியின் பெயரை இயக்குநர் சீமான், தான் ஆரம்பித்த புதிய கட்சிக்கு சூட்டினார்.

காகாதேகா என அழைக்கப்பட்ட காந்தி – காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சியின் கதையும் இதுவே.

அந்தக் கட்சியை நிறுவியவர் குமரி அனந்தன்.

ஜனதாக் கட்சியில் அப்போது முக்கிய தலைவராக அவர் இருந்தார்.

அங்கு உரிய மரியாதை அளிக்கப்படாததால், குமரி அனந்தன் காகாதேகாவை தொடங்கினார்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தின் போது அந்த கட்சி உதயமானது. தொடக்கத்தில் தனித்து போட்டியிட்ட அந்த கட்சி, பின்னர் அதிமுகவோடு கூட்டணி அமைத்தது. வெற்றிகள் கிடைத்தன.

கொஞ்சநாள் கழித்து, தனது கட்சியை மீண்டும் ஜனதாவில் இணைத்தார். அதிக நாட்கள் அங்கு காலம் தள்ள முடியாததால் மீண்டும் காகாதேகாவை புதுப்பித்தார், குமரி அனந்தன்.

தனிக்கடை போணியாகாத நிலையில் காங்கிரசில் ஐக்கியமானார்.
இப்போது தமாகாவின் தோற்றம், வளர்ச்சி மற்றும் தளர்ச்சியை பார்க்கலாம்.
’தமாகா -1’ ஜி.கே. மூப்பனரால் தோற்றுவிக்கப்பட்து.

1996 ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க அப்போதைய காங்கிரஸ் தலைவர் நரசிம்மராவ் தீர்மானித்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சியை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த மூப்பனார், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நரசிம்மராவ் மசியவில்லை.

காங்கிரஸ் துண்டை கழற்றிப்போட்ட மூப்பனார், தமாகாவை ஆரம்பித்து, திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார்

96 தேர்தலில் தமாகா போட்டியிட்ட 20 எம்.பி தொகுதியிலும் வாகை சூடியது.
சட்டமன்ற தேர்தலில் 41 இடங்களை வழங்கினார், அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி. 39 தொகுதிகளில் வென்றது, தமாகா.

அதன்பின், தொடர்ச்சியாய் தோல்விகள்.

1998 மக்களவைத் தேர்தலிலும் திமுக – தமாகா கூட்டணி தொடர்ந்தது. ஆனால் 3 இடங்களில் மட்டுமே தமாகா வென்றது..

1999 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தமாகாவுடன், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.

2001-ல் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி.கே. வாசன் தமாகா தலைவரானார். 2002-ல் தனது தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தார், வாசன்.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, ராகுல் காந்தியின் வாரிசு அரசியலை எதிர்த்து காங்கிரசில் இருந்து விலகி, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியை மறுதொடக்கம் செய்தார் வாசன்.

மூப்பனார் தொடங்கிய ’தமாகா பகுதி -1’ ஆரம்ப நாட்களில் வெற்றியை ருசித்தது.
ஆனால் வாசனின் ’தமாகா பகுதி -2’ வெற்றி வாசத்தை முகர்ந்து பார்க்கவே இல்லை.

2016 சட்டமன்றத் தேர்தலில், தமாகா, வைகோ தலைமையில் அமைந்த மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்தது.

அந்த அணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலை படுத்தப்பட்டார். ஒரு இடத்தில் கூட அந்த அணி ஜெயிக்கவில்லை.

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது, தமாகா.
அந்தக் கட்சியின் சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர். நடராஜன் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது, தமிழ் மாநிலக் காங்கிரஸ். அந்தக் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. வாசனுக்கு கடந்த 10 ஆண்டுகளாக தொட்டதெல்லாம் தோல்வியாகவே முடிந்துள்ளது.

இப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது, அவரது கட்சி. தமிழ்நாட்டில் அந்தக் கூட்டணிக்கு பெரிய நம்பிக்கை இல்லை.

மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் வாசன் இந்தத் தேர்தலில் போட்டியிட போவதில்லை.

வரும் தேர்தலில் பாஜவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், கூட்டணிக் கட்சிகளை சேர்த்து ஆட்சி அமைக்கலாம்.

அப்போது தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார், மூப்பனார் குமரன்.

எட்டு மாதங்களில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment