திருப்பதி லட்டுக்கு வயது 308!

திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது ஏழுமலையானும் லட்டுவும்தான். எம்பெருமான் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுவதற்காக நாள்தோறும் 3 லட்சம் லட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தப் பணியில் கிட்டத்தட்ட 500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

லட்டுக்குத் தேவையான அடிப்படை மூலப்பொருளான ‘பூந்தி’யை தயாரிக்க ‘தெர்மல் ஸ்டவ்’ எனப்படும் 40-க்கும் அதிகமான அதிநவீன அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

750 கிராம் எடையிலான பெரிய லட்டு மற்றும் 175 கிராம் எடையிலான சிறிய லட்டுவும் தயார்செய்யப்பட்டு பக்தர்களுக்கு விற்பனைச் செய்யப்படுகிறது.

பூந்தியை கோயிலுக்கு உள்ளே எடுத்துச் செல்வதற்கும், தயாரிப்பு கூடத்திலிருந்து லட்டுகளை கவுன்ட்டர்களுக்கு கொண்டு செல்வதற்கும் ‘கன்வேயர்’ பெல்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் லட்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் நெய், பிரத்யேகக் குழாய் மூலம் கோயிலுக்கு வெளியிலிருந்து உள்ளேயும், கோயிலுக்கு வெளியே உள்ள பூந்தி தயாரிப்புக் கூடத்துக்கும் எடுத்துச்செல்லப்படுகிறது.

1715-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதியிலிருந்து ஏழுமலையானுக்கு லட்டு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. 1803-ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு பிரசாதமாக பூந்தி வழங்கப்பட்டு வந்தது.

எட்டு அணாவுக்கு ஒரு லட்டு என்று விற்கத் தொடங்கிய லட்டு இன்று 50 ரூபாய் என விலை உயர்ந்துவிட்டது; அளவும் குறைந்துவிட்டது.

ஆனாலும், சுவையும் மணமும் மாறாமல் திருமலையான் அருள் போலவே பக்தர்களைச் சொக்கவைக்கிறது.

முன்னர், முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே முழு லட்டு வழங்கும் நடைமுறை இருந்தது. 1940-ம் ஆண்டிலிருந்துதான் பக்தர்கள் அனைவருக்கும் பூந்திக்குப் பதிலாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, 307 வயதைக் கடந்து, 308-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள திருப்பதி லட்டு பிரசாத விற்பனை மூலம் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட தேவஸ்தானம் கணக்கிட்டிருக்கிறது.

– நன்றி: ஆனந்த விகடன்

Comments (0)
Add Comment