கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னர் தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அப்போது, நான் இருக்கும் வில்லிவாக்கம் பகுதியில் எத்தனை விற்பனையகங்கள் மூடப்படுகின்றன எனும் தகவல்களை தினசரிகள் பார்த்து தெரிந்து கொண்டேன்.
இப்போது குடியிருக்கும் பகுதியில் இருந்து சுமார் 20 மீட்டர், 50 மீட்டர் தொலைவில் உள்ள இரண்டு விற்பனையகங்களும் அதில் அடக்கம் என்ற உப தகவல் டீக்கடையொன்றில் தானாகக் கிடைத்தது. அதனைக் கேட்டதும், ‘ஆஹா’ என்றிருந்தது.
ஏனென்றால், வீட்டின் ஜன்னலை திறந்தால் பின்பக்கத் தெருவில் மது போதையில் இருப்பவர்களின் சத்தம் கேட்கும். காலை, இரவு, மத்தியானம் என்ற பாகுபாடு அதில் இல்லை. அவர்கள் மது அருந்துவதில் எனக்கு கிஞ்சித்தும் வருத்தம் இல்லை. அது அவர்களது காசு; அதனைக் கொண்டு அவர்களது ஆரோக்கியத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்களே என்கிற வருத்தம் எப்போதும் உண்டு.
இதுவரை என்னைக் கடந்து செல்லும் எந்த குடிகாரரையும் நான் கேவலமாக நினைத்ததில்லை. அவரவர்க்கு ஆயிரம் மகிழ்ச்சிகள், வருத்தங்கள் இருக்கும் என்ற எண்ணமே அதற்குக் காரணம். ஆனால், இந்த விஷயம் கொஞ்சம் வினோதமானது.
காலையில் ஆறரை மணிக்கு ஜன்னலை திறந்தால், சிலர் குடித்துக் கொண்டிருப்பார்கள். ’டாஸ்மாக் திறப்பது 12 மணிக்குத்தானே’ என்ற நினைப்பு அப்போது வந்து போகும். சரி, ஸ்டாக் வாங்கி வைத்துக் கொண்டிருப்பார்கள் போல’ என்று நினைத்து கொண்டிருக்கிறேன். அடுத்த நாளும் அது நிகழ்ந்தது; அதற்கடுத்த நாளும் நிகழ்ந்தது; பின்னர், அதுவே தொடர்கதையானது. அதன்பிறகு, டாஸ்மாக் திறப்பு மூடல் பற்றிய கவலை நமக்கு எதற்கு என்றிருந்துவிட்டேன்.
இப்போது விஷயத்திற்கு வருகிறேன். ஏற்கனவே அறிவித்தது போல அந்த இரண்டு விற்பனையகங்கள் மூடப்பட்டன. அதிலொன்று ஐந்து நாட்கள் இடைவெளியில் மீண்டும் திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, விற்பனை அமர்க்களப்படுகிறது. வடிவேலு வரும் நகைச்சுவை காட்சியில் ‘சியர்ஸ்’ சொல்லி குதூகலிப்பார்களே, அது போல ‘இந்தக் கடைய திறந்தாச்சு.. ஆக மொத்தம் 499’ என்று மதுப்பிரியர்கள் மகிழ்ந்திருக்கக் கூடும்.
ஆனால், கடை மூடினாலும் சரி, மூடாவிட்டாலும் சரி.. ஜன்னலை திறந்தால் மதுப்பிரியர்களின் கொண்டாட்டம் மட்டும் ஓயவில்லை. அப்போதெல்லாம் கூட, ரொம்ப சத்தமாக அவர்கள் பேசிக்கொண்டதாக நினைவில்லை. எப்போதாவது ஒருமுறை சத்தம் பெரிதாக எழும். அதுவும் கூட அரிது.
இப்போது அந்த நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக, எப்போதும் ஒரு சத்தக்காடு..
ஒரு வாரத்திற்கு முன், எனக்கு மிகவும் பிடித்த ‘வெளிநாட்டு காற்று’ பாடலை சத்தமாக வைத்துக் கேட்டேன். அதன்பிறகு, அந்த மதுப்பிரியர்களில் ஒருவர் ‘மலரே.. மௌனமா..’ பாடலை ‘ரிங்டோன்’ வைத்துக்கொண்டு நொடிக்கு ஒருமுறை அர்ஜுனையும் ரஞ்சிதாவையும் டூயட் பாட வைத்துக் கொண்டிருக்கிறார். வீட்டில் நூடுல்ஸ் சமைத்தால், ‘மேகி வச்சிருக்காங்க போல’ என்று கமெண்ட் வந்து விழுகிறது.
அது பரவாயில்லை என்பது போல, காலை 6.30 முதல் 12 மணி வரை ஒவ்வொருவராக ‘ஜமா’வில் கலந்துகொண்டு சிறப்பு செய்கிறார்கள். அவர்களது கொண்டாட்டம் நமக்கு திண்டாட்டம் ஆகிறது. ‘எழுதித்தான் சம்பாதிப்பது’ என்று ‘தருமி’ பிழைப்பை மறுஆக்கம் செய்துகொண்டிருக்கும் எனக்கு இது கொஞ்சம் இடையூறாகத்தான் இருக்கிறது. ’பேருந்தில் கர்ப்பிணிகளுக்கு இடம் தருவது போல மதுப்பிரியர்களுக்கும் இடமளித்து புண்ணியம் கட்டிக்கொண்டோமே’ என்றெல்லாம் எண்ணங்கள் அலைமோதுகின்றன. என்ன செய்வது?
ஆனாலும், மது அருந்துபவர்கள் மீதான மரியாதை சற்றும் குறையாததால், நான் ஜன்னலை மூடுவதே இல்லை. அதனால், இது எல்லாமே என் காதில் விழுந்தது. விழாதது இன்னும் எத்தனையோ இருக்கலாம்.
என்னைப் பொறுத்தவரை, ஒரு மாபெரும் கேங்க்ஸ்டரோ, கிங்மேக்கரோ, சாதனையாளரோ, ‘தான் இப்படிப்பட்டவர் தான்’ என்று வெளியே சொல்லிக்கொள்வதே இல்லை. அப்படிச் சொல்லிக் கொள்பவர்களை ‘அமெச்சூர்’ ஆகத்தான் நினைக்கிறேன். அதுபோல, ஆகப்பெரிய மதுப்பிரியர்கள் ‘நான் குடிகாரண்டா’ என்று சலம்புவதில் கொஞ்சமும் அக்கறை காட்டமாட்டார்கள்.
ஆனால், இவர்களைப் பார்த்ததும் சில விஷயங்கள் வந்து போயின.
எத்தனை தடவை மது அருந்தினாலும் உடலும் மனச்செயல்பாடும் கொஞ்சம் கூட துரு பிடிக்காது.
டீ, காபியை விட மது அருந்துவது புத்துணர்ச்சி தரும்.
கடினமாக உடலுழைப்பு தேவைப்படுபவர்களை விட, ஸ்மார்ட்வொர்க் செய்பவர்கள்தான் மது அருந்துவதற்கு முழுமையாகத் தகுதி படைத்தவர்கள்.
மதுப்பழக்கமே வாழ்வில் ஒருபடி மேலுயர்த்துகிறது.
மேற்சொன்ன அனைத்தும் அவர்களது வாழ்வில் உண்மையாகிவிட வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம்.
என்ன, இந்த ’மது சந்திப்புகள்’ குறைந்தால் சத்தம் குறைந்து, நம்ம பொழப்பு ஓடும் என்பது மட்டுமே நமது அங்கலாய்ப்பு. இது போன்ற அங்கலாய்ப்புகள் பெருகும் வகையில், தமிழ்நாடு முழுவதும் 499 என்ற எண்ணிக்கை மேலும் குறைந்திருக்கக் கூடாது என்பது நமது பிரார்த்தனை.
வேறென்ன சொல்ல..? ‘சியர்ஸ்..’!!
– பா.உதய்