மக்களை மாற்றியமைக்கும் செயல் திட்டம் தேவை!

– டாக்டர் க. பழனித்துரையின் நம்பிக்கைத் தொடர் – 3

                நிதானமாக உழைத்து சம்பாதிக்க வேண்டுமென்று முயல்வோர் வாரத்தில் 5 நாட்களுக்கும் அனைவருக்கும் வேலை கிடைக்கின்றது, அப்படி வேலை செய்து மேம்பட வேண்டும் என எண்ணுவோரைக்கூட 100 நாள் வேலைத்திட்டம் ஈர்க்கின்றது.

                   காரணம் இந்த வேலையில் எந்த கட்டுப்பாடோ, வரையறையோ செய்ய இயலாத அளவுக்கு இந்த திட்டத்தை சிதிலமடைய வைத்து விட்டோம். இந்த 100 நாள் வேலை செய்வோர் முறைப்படி பயன்படுத்த முடியவில்லை.

அந்த அளவுக்கு மக்களை மாற்றியமைத்து விட்டது இந்தச் செயலாக்கம்.

                   இதில் பஞ்சாயத்துத் தலைவர் வேலை செய்யுங்கள் என்றால், பணம் அரசு கொடுக்கின்றது, அதை நீர் யார் கேட்க என்ற பார்வை வந்து விட்டது.

                    அப்படிக் கேட்கும் தலைவர்கள் அவர்களில் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும், இந்தப் பணிகளை மேற்பார்வையிட்டு ஒழுங்காக நடைபெறுகிறதா என்பதை பார்க்க எந்த தொழில்நுட்ப பொறியாளரும் வருவதில்லை.

காரணம் பொறியாளர் பற்றாக்குறை. இந்த தொழில்நுட்ப பொறியாளர் பற்றாக்குறை என்பது இந்தத் திட்டத்தை மட்டுமல்ல எல்லாத் திட்டத்தையும் பாதித்துள்ளது. தரம் என்பது செயல்பாடுகளில் கிஞ்சித்தும் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

            ஒரு கிராமத்தில் ஏரி குளங்கள் குட்டைகள் தண்ணீருடன் இருந்தால் அதில் மீன் இருக்கும் . அதைப் பாசிக் குந்தையாக விடுவதன் மூலம் பஞ்சாயத்துக்கு ஒரு வருமானம் வரும்.

இந்த ஏலத்தை ஒரு காலத்தில் ஒரு சிலர் 250 ரூபாய்க்கும் கூட ஏலம் எடுத்தது உண்டு. ஆனால் இன்று அதே நீர்நிலைகள் மூலம் 6 லட்சம் ரூபாய் பஞ்சாயத்துக்கு வருமானம் வரும் அளவுக்கு வந்துவிட்டது.

            கிராமங்கள் ஒரு காலத்தில் நல்ல உயிர் சூழலில்தான் இருந்து வந்துள்ளது. அப்பொழுது நெகிழிப் பைகள் புழக்கத்தில் இல்லை. அனைத்தும் மக்கும் குப்பைகளாக இருந்தன.

                 எனவே குப்பைகளைக் கூட்டி குப்பைக் குழிகளில் போட்டு மக்க வைத்து உரமாக்கினர். ஆனால் இன்று குப்பைகளைக் கூட்டிப் பெருக்க ஆட்கள் தேவை. குப்பைத் தொட்டிகளை அரசாங்கமே வைத்து கொட்ட வைத்ததன் விளைவு வீதிகள் குப்பைக் கிடங்குகள்போல் காட்சியளிக்கின்றன.

                இழிந்த நிலையில் கிராமங்கள் அசுத்தத்தில் வாழ்கின்றன என்பதுதான் உண்மை. குப்பையை ஓரிடத்தில் சேர்த்து வைப்பதை தூய்மைப்பணி என்று கூறி அதற்கு ஆட்களை நியமிக்கின்றோம்.

               குப்பைக்குத் தீர்வு தூய்மைப் பணியாளர்கள் அல்ல, மக்களின் நடத்தை மற்றும் சிந்தனை மாற்றம், பார்வை மாற்றம்தான் என்பதை உணர்ந்து பஞ்சாயத்து செயல்பாட்டால் மட்டுமே.

            கிராமங்களில் பெரும்பகுதி மக்களை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதேபோல் சிந்திக்கவும் அவர்களைப் பழக்க வேண்டும்.

இதற்கு முதலில் கிராமசபையை மகளிருக்கென தனி கிராமசபை கூட்டுவது.

குழந்தைகளுக்கென பாலர்சபை கூட்டுவது போன்ற செயல்பாடுகள் இந்தப் பஞ்சாயத்துக்கு பள்ளி மேலாண்மைக்குழுவில் மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு விவாதம் செய்ய வேண்டும். முடிவுகள் எடுக்க வேண்டும்.

சமூகப் பொருப்புணர்வு பற்றி முதலில் நம் ஆசிரியர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு சமூகப் பார்வையை உருவாக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் மாணவர்களுக்கு ஏற்படுத்துவார்கள்.

                கிராம மேம்பாட்டுக்கான ஒரு வரைவுத் திட்டத்தை உருவாக்க ஒரு பெரும் புள்ளிவிபர சேகரிப்புச் செய்து கொண்டுள்ளோம் இந்தப் பஞ்சாயத்தில். இதற்கு ஓர் ஆய்வு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ஆய்வாளர்கள் அந்தக் கணக்கெடுப்பைச் செய்து வருகின்றனர்.

                   ஒன்று, குடும்பம் பற்றிய புள்ளி விபரம் சேகரித்தல்,  அடுத்து கிராமம் பற்றிய புள்ளிவிபரம் சேகரித்து வருகின்றனர். குடும்பம் பற்றிய புள்ளிவிபரம் என்பது, குடும்பத்தின் பொருளாதார நிலை பற்றி அறிதல்தான் மிக முக்கியமானது. அந்த அடிப்படையில் புள்ளிவிபரம் குடும்பம் பற்றி சேகரிக்கப்படுகிறது.

 அடுத்து கிராமம் பற்றி புள்ளிவிபரம் சேகரிப்பு என்பது அதன் இயற்கை வளம், பொருளாதார வளம், சமூக வளம், அரசு உருவாக்கித்தந்த மக்கள் நிறுவனங்கள், மற்றும் அடிப்படை கட்டுமான வசதிகள் அதாவது சாலை, பள்ளி, நூலகம்,

பொதுக்கழிப்பிடம், விளையாடுமிடம் போன்ற வசதிகளையும் வளங்களையும் கணக்கெடுத்து இந்த ஊர் மேம்பாட்டில் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து எங்கு செல்ல வேண்டும் என்பதையும் கணக்கில் கொண்டு ஒரு மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்க முனைந்து வருகின்றோம்.  

இந்தப் பணிகள் நடைபெறும் நேரத்தில் மக்கள் தேவைகளையும் கனவுகளையும் நிறைவேற்ற தேவையான ஒரு திட்டத்தை வரைவதுதான் மிக முக்கியமான பணி. இந்தப் பணியையும் மக்கள் பங்கேற்புடன் நடத்திட வேண்டும். மக்கள் பங்கேற்பு என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

                 மக்களை என்று பயனாளியாகக் கருத ஆரம்பித்ததோ, மக்களும் அதில் ஒரு சுகம் காண ஆரம்பித்து தங்கள் பொறுப்புக்களை அரசிடம் விட்டு விட்டு, பயனாளியாக வாழப் பழகிக் கொண்டுவிட்டனர்.

              ஒரு காலத்தில் தன் வீட்டுக் குப்பையை தன் வீட்டுக் குப்பைக் குழியில் போட்டு மக்க வைத்து உரமாக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தினர். இன்று குப்பைகளை சாலையிலும் வீதிகளிலும் கொட்டி, அரசு கூட்டி சுத்தம் செய்யட்டும் என்று கொட்டுகின்றனர்.

            75 ஆண்டுகால கிராம மேம்பாடு என்பது அடிப்படை கட்டுமான வசதிகளான சாலை போடுதல், பள்ளிக்கூடம் கட்டுதல், ஆரம்ப சுகாதார வசதி ஏற்படுத்துதல், விவசாய உற்பத்திப் பெருக்கத்திற்கான உரம் பூச்சி மருந்து, போன்றவைகளை கூட்டுறவு சங்கத்தின் மூலமாக வழங்குதல், விவசாயம் செய்ய கடன் தருதல், மின்சார வசதி ஏற்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்து தந்துள்ளன அரசுத் துறைகள். 

                    அத்துடன் தனிநபர் சார்ந்த குழு சார்ந்த கிராமம் சார்ந்த திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தின.

இந்தத் திட்டங்களால் விளைந்த விளைவினை சீர்தூக்கிப்பார்த்தால் கிராமம் மாற்றம் அடைந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மேம்பட்டனவா என்றால், இல்லை என்றும் கூறமுடியாது.

                     ஆனால் கிராமத்தில் எல்லாத் தரப்பு மக்களும் குறைந்தபட்ச எல்லா அடிப்படை வசதிகளும் பெற்று மதிக்கத் தகுந்த ஒரு மேம்பட்ட வாழ்க்கையை வாழ முடியவில்லை.

கிராமங்களில் இருந்த கூட்டு வாழ்க்கை, சமூக வாழ்க்கை பொதுச் சொத்து பராமரிப்பு, இயற்கை வளப்பாதுகாப்பு என்பதெல்லாம் மக்கள் மத்தியில் மறக்கடிக்கப்பட்டு விட்டன.

            இன்று கிராம சமுதாயத்தை சாதியாகவும், அந்தச் சாதியிலே ஏழை பணக்கார வகுப்பாகவும், கட்சி ரீதியாகவும் பிரித்து விட்டனர்.

அத்துடன் தனிமனிதர்களாக எனக்குக் கிடைத்தால் போதும், மற்றவர் எக்கேடு கெட்டால் என்ன என்ற பொதுச் சிந்தனையற்றவர்களாக உருவாக்கப்பட்டுவிட்டனர்.

கிராம வளங்கள் கிராமத்தைப் பாதுகாக்கும் என்பதைவிட அதை எப்படியாவது விற்று நாம் காசாக்கிக் கொள்ளலாமா என்ற சிந்தனை வளர்ந்தவர்களாகவே மக்கள் மாறிவிட்டனர்.

ஒரு பொதுப்பள்ளியைச் சீரமைத்து, அதன் தரத்தை உயர்த்தி அனைவர் வீட்டுக் குழந்தைகளும் அங்கு படிக்க வேண்டும் என்ற உன்னத சமூகப்பார்வையற்று என்னிடம் பணம் இருக்கிறது, என் குழந்தையை தனியார் பள்ளியில் படிக்க வைத்துவிடுவேன், என் குழந்தை நன்கு படிக்க வேண்டும் என்பதுதான் குறிக்கோள், பொதுப்பள்ளி என் பொறுப்பல்ல, என்னால் அதைச் சரிசெய்ய இயலாது, எப்படியோ போகட்டும் எனக்கென்ன என்ற மனோபாவம்தான் பொதுப்பள்ளிகள் தரமற்ற கல்வியை புகட்டும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

நாம் கல்விக்கு வரியும் செலுத்திவிட்டு பள்ளிக்கும் கட்டணம் கட்டுகின்றோம் என்ற புரிதல் இல்லாது செயல்படும் மக்களிடம் நாம் வசிக்கின்றோம், வாழ்கின்றோம்.

எல்லாக் கிராமங்களிலும் நீர் நிலைகள் உண்டு. குளங்கள் உண்டு, குட்டைகள் உண்டு, ஏரிகள் உண்டு, ஓடைகள் உண்டு, கேணிகள் உண்டு.

ஒரு காலத்தில் அத்தனையும் பராமரிக்கப்பட்டது கிராமத்தில் உள்ள சமூகக் குழுக்களால். இன்று அவைகள் அனைத்தும் மக்களிடமிருந்து அன்னியப்படுத்தப்பட்டு விட்டன.

இவைகள் அனைத்தும் அரசாங்கத்தின் பிடியில். இதன் விளைவு நீர் நிலைகள் பராமரிப்பற்றுப்போனது.

மக்களுக்கு அரசு குழாய் மூலம் தண்ணீர் கொடுக்க ஆரம்பித்தது. இதன் விளைவு நீர்நிலைகளைப் பற்றிய எந்தக் கவலையும் அற்று மக்கள் வாழப் பழகிக்கொண்டனர். ஊர்களில் காணாமல் போன ஆறுகள் உண்டு, காணாமல் போன குளங்கள் உண்டு, காணாமல் போன ஏரிகள் உண்டு.

அந்தச் செய்திகளை பத்திரிக்கைகளில் நாம் பார்த்து உள்ளோம். இந்த ஊரிலும் அப்படி ஏரிகளைக் காணவில்லை, ஆறுகளைக் காணவில்லை. அதை மீட்டெடுத்தது ஒரு பெரிய வரலாறு.

ஆனால் அதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய போராட்டம் இருந்திருக்கிறது. இவைகளை மீட்டெடுக்க யாருடன் போராட வேண்டியுள்ளது என்றால் வெள்ளையருடன் அல்ல, கிராமத்தில் அவைகளை ஆக்கிரமித்தவர்களுடன்.

நம் கிராமத்து பொது வளங்களை நாமே அழிப்பு வேலையைச் செய்கின்றோமே என்ற குற்ற உணர்வற்றுச் செய்து அதை மீட்டெடுக்கும்போது அதற்காக மீட்டெடுப்பவர்களை கிராமத்தில் உள்ளவர்கள் பாராட்டுபவர்களைவிட மிகமோசமாக ஏசியவர்கள்தான் அதிகம்.  

காரணம் கிராம வாழ்க்கை என்பது ஒரு சமூக வாழ்க்கை, அது ஒரு கூட்டு வாழ்க்கை என்பது புரிந்து வாழ்வோர் எண்ணிக்கையில் மிகக் குறைவு.

இன்று கிராமங்களில் மக்கள் விசாலமான சிந்தனைச் சூழலில் வாழாமல் மிகக் குறுகிய சிந்தனை கொண்டவர்களாக தயாரிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டுள்ளனர் என்பதுதான் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்.

            ஒரு பஞ்சாயத்தில் ஊழலில்லாமல் நிர்வாகத்தை நடத்துவது என்பது மிகப்பெரிய போராட்டத்திற்கு மத்தியில் நடைபெறும் செயலாக உள்ளது.

காரணம் ஊழலை கிராமத்து மக்களில் பெரும்பான்மையானவர்கள் எதிர்க்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, ஆமோதித்து கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு வேலை நடந்துவிட்டால் போதும் என்ற மனோபாவத்தில் வாழப் பழகிக் கொண்டனர்.

அத்துடன் ஊழலுக்குத் தேவையான பணத்தை நாமும் அதர்ம வழியில் சம்பாதிப்போம் என்று ஊழலை நம் வாழ்வில் ஒரு பகுதியாக ஆக்கிக் கொண்டுவிட்டோம். இந்தச் சூழல் யாரை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்றால் ஏழைகளையும், நடுத்தரவர்க்க மக்களையும்தான்.

இன்று ஊழல் ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. ஒரு கிராமப் பள்ளிக்கூடத்திற்கு வரும் ஆசிரியை தன் நியமனத்திற்கு பணம் கொடுத்து அந்தப் பதவியில் வந்து அமர்ந்தால் அவர் எப்படிப்பட்ட கல்வியை மாணவர்களுக்குக் கற்பிப்பார்.

சத்துணவுக் கூடத்தில் பணிபுரியும் அந்த ஆயா தன் வேலைக்கு பணம் கொடுத்து வாங்கி வந்தார் என்றால் அவர் வாங்கும் சொற்ப ஊதியத்தில் அவர் கொடுத்த பணத்தை எப்படி ஈடுகட்ட முடியும் என்றுதானே சிந்தித்துச் செயல்படுவார்.

அந்த பள்ளி ஆசிரியரும் சரி, அந்த சத்துணவுக்கூட ஆயாவும் சரி என்ன சேவை செய்வார்கள் என்று நாமே யூகித்துக் கொள்ளலாம்.

சேவைச் சிந்தனையுடன். அவர்கள் அனைவரும் கிராமத்திற்கு வந்து பணி செய்வதில்லை. யாரும் கிராமத்தில் தங்கிப் பணி செய்வது கிடையாது.

யாரும் கிராமத்து மக்களுடன் தொடர்பு வைத்துக் கொளவ்து கிடையாது. வழிப்போக்கர்கள்போல் அனைவரும் வந்து செல்கிறார்கள்.

                   ஒரு பள்ளி ஆசிரியர், பள்ளியைப் பற்றி பஞ்சாயத்துத் தலைவரிடம் எதையும் தெரிவிப்பது கிடையாது, ஒரு கிராம நிர்வாக அதிகாரி, கிராமத்தில் உள்ள நிலங்கள் பொதுச் சொத்துக்கள் பற்றி விபரத்தை பஞ்சாயத்துத் தலைவர்களிடம் தெரிவிப்பது கிடையாது.

கிராமத்தில் பணிபுரியும் செவிலியர்கள் அந்த கிராமப்பஞ்சாயத்துத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் எவ்வளவுபேர் ஊட்டச்சத்து பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்,

எவ்வளவு கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர், எவ்வளவு பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர், எவ்வளவு வளர் இளம் பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்,

அதேபோல் பிறந்த குழந்தைகள் எத்தனை குறைந்த எடையுடன் பிறந்தன என்ற புள்ளி விபரத்தை பகிர்ந்து அந்தக் குறைபாடுகளை நிவர்த்திக்க முயல்வதில்லை.

இவைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கிராமசபை மூலமாக பஞ்சாயத்துத் தலைவர் உருவாக்க முடியும். ஆனால் எந்த புள்ளி விபரமும் பஞ்சாயத்தில் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை.

அதேபோல் எத்தனை குழந்தைகள் பள்ளியில் சேரும் வயதில் சேர்க்கப்படாமல் இருக்கின்றனர், சேர்ந்த குழந்தைகளில் இடை நிறுத்தம் செய்த குழந்தைகள் எவ்வளவு என்பதை பள்ளி ஆசிரியர் தெரிவிப்பது கிடையாது. கிராமத்தில் பலர் கிராமத்திற்காக பணிபுரிகின்றார்கள்.

ஆனால் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்வதும் கிடையாது, ஒருங்கிணைவதும் கிடையாது. கிராமத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான சிந்தனையின்றி தனியாகவே அனைவரும் செயல்படுகின்றனர்.

            கிராமப் பஞ்சாயத்து ஒவ்வொன்றிலும் ஒரு அய்யன் திருவள்ளுவர் நூலகம் அமைக்கப்பட்டு மக்களின் வாசிப்புச் சிந்தனையை தூண்ட செயல்பட வைக்கப்பட்டது.

ஆனால் அதை முறையாகப் பராமரிக்கும் பஞ்சாயத்துக்கள் ஒரு சில மட்டுமே. வாசிப்புக் கலாச்சாரத்தை உருவாக்க முயன்று அந்த நூலகத்தை பயன்படுத்த வைத்துள்ளது பார்க்க அழகாக இருந்தது.

27000 புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் அந்த நூலகத்தினை மெருகேற்றியது.

            பஞ்சாயத்து நிர்வாகத்தின் முதுகெலும்பே பஞ்சாயத்து எழுத்தர் மட்டும்தான்.

ஆனால் இந்த பஞ்சாயத்தின் எழுத்தருக்கு, பஞ்சாயத்து அரசாங்கத்தின் முக்கியத்துவம் அறிந்து செயல்படுகிறாரா, ஆளுகை பற்றி தெரியுமா, நிர்வாகம் பற்றி தெரியுமா என்றால் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது என்பதுதான் நிதர்சனாமான உண்மை.

அவர்களுக்கு குறைந்தபட்ச நிர்வாகத் திறமை சோதிக்கப்படாமல் அவர்களை நியமனம் செய்வது, பஞ்சாயத்துக்கு ஏற்புடைய செயல் அல்ல. அவர்களுடைய சம்பளம் வரையறுக்கப்பட்டது நியாயமானது தான்.

ஆனால் அவர்களின் திறமை எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாமல் அவர்களை பணியில் வைத்திருப்பது ஒரு அரசியல் முடிவுதானே தவிர, பஞ்சாயத்து நிர்வாகத்தை சீர் செய்யும் செயல்பாடு அல்ல.

குறைந்த பட்சம் மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி மையத்தின் மூலமாக ஒரு பட்டயப் படிப்பு அல்லது சான்றிதழ் படிப்பாவது அவசியம் என கேட்டிருக்க வேண்டும். முறையான நிர்வாகத்திறமை படைத்தவர்களாக இல்லாத காரணத்தால் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஒன்றிய ஆணையவரின் வாய்வழி உத்தரவுக்கு காத்திருக்கின்றனர் என்பது இந்த பஞ்சாயத்தின் பரிதாப நிலை.

 50%க்கு மேல் பெண்கள் சிற்றூராட்சி மன்றங்களுக்கு தலைவராக வந்து விட்டனர், அதேபோல் 20% தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து தலைவர்களாக இடஒதுக்கீட்டின்படி வந்து விட்டனர்.

இவர்களின் வரவு நிர்வாகத்தில் மேம்பாட்டை கொண்டுவர வேண்டுமென்றால் அவர்களுக்கு முறையான பயிற்சியும், நல்ல ஆதரவுச் சூழலும் தேவை.

நிர்வாகம் தெரிந்த பஞ்சாயத்துச் செயலர் இருந்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும். அந்தச் சூழல் பெரும்பாலான இடங்களில் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இன்றுவரை தமிழக அரசால் நிர்வாகக் கையேடு உள்ளாட்சிக்கு இல்லாத காரணத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி வாய்மொழி உத்தரவாகவே நிர்வாகக் கையேடாக கருத வேண்டிய சூழலுக்கு பஞ்சாயத்துக்கள் தள்ளப்பட்டுள்ளன.

            இன்று பொதுமக்கள் ஊழல் அரசியல்வாதிகள் ஊழல் அலுவலர்கள் அதிகாரிகள் என்று தங்களுக்கு சலிப்பு வரும்போது பேசுகின்றார்கள் உண்மை அதுவல்ல. நம் பொது மக்களே ஊழலை ஊக்குவிக்கின்றார்கள்.

நாம் வேலையை எளிதாய் முடிக்க வேண்டும், விரைவாய் முடிக்க வேண்டும், சட்டத்தை, விதியை மீற வேண்டும், தகுதியில்லாமல் தனக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற ஊழல் சிந்தனை பொதுமக்களிடம் இருப்பதால்தான் ஊழல் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

இது பெரும் சிந்தனை நோய், ஊழல் இல்லாமல் நிர்வாகத்தை நடத்துவது, ஆட்சி நடத்துவது, மிகக் கடினமானது. இதற்குத் தீர்வு முதலில் நாம் ஊழலில்லாமல் பஞ்சாயத்தை நடத்துவது.

பஞ்சாயத்துக்கு திட்டங்களைக் கொண்டுவர கையூட்டு நாம் கொடுக்காமல் இருப்பது, பஞ்சாயத்தின் மூலம் தனிநபர், குழுப் பயன்களைத் தரும்போது யாருக்கு என்ன சேரவேண்டுமோ அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பது.

அதைச் செய்ய ஆரம்பித்தாலே ஊழல் குறைய ஆரம்பித்துவிடும். பஞ்சாயத்துத் தலைவருக்கு எதிர்ப்பலை குறைந்துவிடும்.

பஞ்சாயத்துத் தலைவர் தன் கையெழுத்துக்கு பணம் வாங்கவில்லை, பஞ்சாயத்திலிருந்து தரும் அரசுப் பயன்களுக்கு பஞ்சாயத்துத் தலைவர் பணம் வாங்கவில்லை என்பதே ஒரு பெரும் முயற்சிதான். நாம் தேர்தலுக்கு எந்தச் செலவும் செய்யவில்லை. எனவே பணம் எடுக்க தேவை இல்லை.

                  அது மட்டுமல்ல அது ஒரு மானப் பிரச்சினை. என் தாத்தா ராஜிவ் காந்தியிடம் நல்ல பஞ்சாயத்திற்கான பரிசு பெற்றார் என் தந்தை வாஜ்பாயிடம் பரிசு பெற்றார். ஊரில் நல்ல குடும்பம் பாரம்பரியமான குடும்பம் நியாயமான குடும்பம் என பெயர் பெற்ற குடும்பம்.

அந்தக் குடும்பத்திலிருந்து வந்த நான் தவறு செய்வதை என் குடும்பமும் ஏற்காது, என் உறவினர்களும் ஏற்க மாட்டார்கள், எங்கள் குடும்பத்தை மதிக்கும் மக்களும் ஏற்க மாட்டார்கள் என் மனது அதற்கு எப்போதும் இடம் தராது மாறாக ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் மானத்துடன் உழைத்து பணம் சம்பாதிக்க வெளிநாடு சென்று விடலாமே என்பதுதான் அவரின் பதிலாக இருந்தது.

            அடுத்து கிராம மேம்பாட்டுக்கான ஒரு கூட்டுச் சிந்தனையும், கூட்டுச் செயல்பாடும், இல்லாத எந்தக் கிராமமும் தன்னிறைவு அடைய முடியாது.

கிராமத்திலிருக்கின்ற மக்களுக்கு கிராம மேம்பால்தான் தங்கள் குடும்ப மேம்பாடு இருக்கிறது என்ற புரிதல் இல்லாத மக்கள் இருக்கின்றவரை அரசு பயனாளியைத்தான் உருவாக்கும் என்று மக்கள் கூட்டுச் சிந்தனைக்கு வந்துவிட்டார்களோ, அப்பொழுதே அரசு மக்களுக்குச் சேவை செய்ய ஆரம்பித்துவிடும்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஒரு நதி அங்கே ஒரு காலத்தில் ஓடியது, அதில் காவிரி நீர் வந்தது, அந்த நீர் அந்த ஊரில் உள்ள ஏரிகளுக்கு வந்தது, அதிகம் வந்தபோது போக்குக் கால்வாய வழியாக எஞ்சிய நீர் கடலுக்குச் சென்றது.

காலப்போக்கில் நதியைக் காணாமல் போக பார்த்துக் கொண்டிருந்தோம், ஏரியை ஆக்கிரமிக்க அனுமதித்தோம், வரத்துக் கால்வாய் போக்குக்கால்வாய் அனைத்தும் தூர்ந்து விட அனுமதித்தோம், பொது இடங்கள் ஆக்கிரமிப்புக்கு இலக்காகின.

பொதுக்குளங்கள் பராமரிப்பு இல்லை, அதைப்பற்றி யாருக்கும் அக்கறை இல்லை, கவலை இல்லை. அதில் வந்த வருமானம் குறைய ஆரம்பித்தது. அதையும் ஒருசிலர் பங்கு போட்டனர். அதைப்பற்றியும் யாருக்கும் கவலை இல்லை.

            அவைகளை மீட்டெடுக்க வருபவனுக்கு எதிர்ப்பு யாரிடமிருந்து. ஊரைச் சுரண்டும் ஒரு கும்பலிடமிருந்து. ஊருக்காகத்தானே மீண்டெடுப்பு நடக்கிறது, அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டியது ஒவ்வொருவரின் தார்மீகக் கடமைதானே, அது ஏன் நடைபெறவில்லை.

இங்குதான் கிராமத்தில் சிக்கல். இந்தச் சூழலில், சூழலை மாற்றுவதற்கு செயல்படுவதா, சூழலுக்குள் இருந்து ஏதோ ஒரு சில கட்டுமானப்பணிகளைச் செய்துவிட்டு செலவழித்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுவதா என்ற மனப் போராட்டத்தில் இருப்போர் எண்ணிக்கை ஏராளம்.

அதுதான் இன்றைய பஞ்சாயத்துக்களை வலுவிழக்கச் செய்கின்றது. இந்தச் சூழலை மாற்றியமையுங்கள், உங்களுக்கு பக்க பலமாக நம் அரசு இருக்கிறது என்று கூறும் நிலையில் நம் மாநில அரசு இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இந்தச் சூழலில் நமக்கு ஏன் வம்பு.

ஏதோ அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு, பஞ்சாயத்து செயலர் கூறுவதைக் கேட்டு ஒருசில பணிகளைச் செய்துவிட்டு செலவழித்த பணத்தையும் எப்படியாவது எடுத்துக் கொண்டு வெளியேறுவதுதான் சிறந்த வழி என்று எண்ணுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

இருந்தும் ஒரு தலைவனுக்கு உள்ள சிந்தனை பெற்ற ஒருவனால் சூழலுக்குள் சிக்க இயலாது, சூழலை வெல்லத்தான் முயல்வான், சூழலை முறியடிக்க முயல்வான், எதிர்ப்புக்களை சமாளிப்பதில் ஒரு சாகசம் இருப்பதை உணர்வான், அநீதியைப் பார்த்துக் கைகட்டி நிற்க மாட்டான், அவன் சூழலைவிட்டு வெளிவந்து விடுகிறான்.

அவன் ஒரு கனவுடன் அலைகின்றான். அவன்தான் சாதிக்க முடியும். அவனுக்கும் ஒரு ஆதரவுச் சூழல் தேவைப்படுகிறது.

 அந்தச் சூழலை நம் கிராமம் முன்னேற வேண்டும், நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுவோர் உருவாக்க வேண்டும்.

            கிராமிய மேம்பாடு என்பது ஒரு வேள்வி. அது சாதாரணப் பணி அல்ல. இந்தப் பணி அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவரத்தக்க வல்லமை கொண்டது.

எனவே அதைப் புரிந்து மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சியில் செயல்பட்டால் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

முந்தைய தொடர் – https://thaaii.com/2023/07/15/prathampuram-is-an-example-of-a-model-panchayat/

Comments (0)
Add Comment