நல்ல மனம் வாழ்க… நாடு போற்ற வாழ்க…!

சாஸ்திரிய சங்கீதத்தில் சாதனை படைத்த பலர், சினிமா சங்கீதத்தோடு சமர் புரிபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்… ஆனால் ஒருசிலர்தான் சமர் புரிவதை நிறுத்திவிட்டு, சமரசம் செய்துகொண்டு சாஸ்திரிய சங்கீதத்தின் அருமைகளை, திரைப்பட பாடல்களில் எளிமையாகப் புகுத்தி ஏற்றம் காண செய்கிறார்கள்… அப்படிப்பட்ட இசை மேதைகளில் ஒருவர்தான் வி.தட்சிணாமூர்த்தி.

கேரள மாநிலம் ஆழப்புழா மாவட்டம் அரிபாத்தில் பிறந்தவர் தட்சிணாமூர்த்தி… வெங்கடேஸ்வர ஐயர் – பார்வதி அம்மாள் தம்பதியருக்கு மொத்தம் 7 குழந்தைகள்… தட்சிணாமூர்த்திதான் மூத்தவர்… 7 ஸ்வரத்தில் மூத்த ஸ்வரம், தட்சிணாமூர்த்தி…

சிறுவயதிலிருந்து இசையில் லயிக்கத் தொடங்கிய தட்சிணாமூர்த்தி, தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளை பாடுவதில் வல்லமை பெற்றிருந்தார்… வெங்கடாச்சலம் என்பவரிடம் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்ட தட்சிணாமூர்த்தி, தனது 13வது வயதில் கிருஷ்ணன் கோவிலில் பாடினார்…

பள்ளிப்படிப்பை முடித்த பின், இசைதான் தன்னுடைய வாழ்க்கை என உறுதி செய்து கொண்ட தட்சிணாமூர்த்தி, தனது 16வது வயதில் வைக்கத்திற்கு வந்தார்… அங்கு பலருக்கு கர்நாடக சங்கீதம் கற்று தந்தார்…

1948ம் ஆண்டு சென்னைக்கு குடிபெயர்ந்த தட்சிணாமூர்த்தி, கல்யாணி என்ற ரசிக்கத்தக்க ராகத்தை பெயராக கொண்ட பெண்மணியை கல்யாணம் செய்துகொண்டார்…

1948ம் ஆண்டு வெளியான நல்லதங்காள் படத்துக்கு தட்சிணாமூர்த்திதான் இசை… பின்னர் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதிசங்கரர், அருமை மகள் அபிராமி, உலகம் சிரிக்கிறது, எழுதாத கதை போன்ற தமிழ் படங்களுக்கு சிறப்பான பாடல்களை கொடுத்து இசையமைத்துள்ளார்…

கேரளாவின் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் அகஸ்டின் ஜோசப், அவரது மகனாக விளங்கிய பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ், யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ், பி.சுசிலா, இசைஞானி இளையராஜா ஆகியோருக்கு குரு ஸ்தானத்திலிருந்து சங்கீதத்தை அவர்களுக்குள் சங்கமம் ஆக்கியவர் தட்சிணாமூர்த்தி…

இசைத்துறையில் பல சாதனைகளை புரிந்துள்ள தட்சிணாமூர்த்தியின் இதயம் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 2ம் தேதி நின்று போனது…

சங்கீதமாக வாழ்ந்து வந்த ஒரு சரித்திரத்தின் பெயருக்குப் பின்னால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது… இந்த முற்றுப்புள்ளி, பின்னால் வந்த பல இசைக்கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் தொடக்க புள்ளியாக இருந்து வருகிறது…

(பிரபல கர்நாடக இசைக்கலைஞரும், திரைப்பட இசையமைப்பாளருமாகிய வி.தட்சிணாமூர்த்தியின் நினைவு நாளையொட்டி (ஆகஸ்டு-2, 2013) வெளியிடப்பட்ட பதிவு.

நன்றி: லாரன்ஸ் விஜயன்

Comments (0)
Add Comment