அண்மையில் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய 3 தமிழகப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளன.
இதில் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்தின் சிறப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
மட்டி வாழைப்பழத்தில் மாவுத்தன்மை மிகுதியாக காணப்படுவதால் குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கப்படுகிறது. அளவில் சிறியது. இது மற்ற வாழைப் பழங்களை விட இனிப்பு சுவை மிகுந்து காணப்படுவதோடு மணமாகவும் இருக்கும்.
ரஸ்தாளி பழம் போலவே தோற்றமளிக்கும் மட்டிப்பழத்தின் நுனிப்பகுதி சற்று நீண்டிருக்கும். காந்தி, நேரு, தாகூர், வாஜ்பாய் உள்ளிட்டோர் போற்றிய பெருமைக்குரியது இந்த மட்டிப்பழம்.
நேரு பிரதமராக இருந்தபோது அவர் திருவனந்தபுரத்துக்கு வந்தபோது விருந்தில் அவருக்கு குமரி மாவட்ட ஸ்பெஷல் மட்டிப்பழம் வழங்கப்பட்டது.
சாப்பிட்ட நேரு, ”ஆஹா… அருமை.. இவ்வளவு தித்திப்பு சுவையில் வாழைப்பழம் நான் சாப்பிட்டதே இல்லை!” என மகிழ்ச்சியாக சொன்னாராம். நேருவுக்கு குமரி மாவட்ட மட்டிப்பழம் திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் அனுப்பப்பட்டதாம்.
தமிழ் பாரம்பரிய அடையாளங்கள் போற்றுவோம்.
- வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்