மணிப்பூர்: ஏன் இந்த மௌனம்?

நம் வீட்டின் ஒரு மூலையில் நெருப்புப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இதற்கு ஒரு தீர்வு ஆக முடியுமா?

அப்படித்தான் மணிப்பூரில் சில மாதங்களாகவே கலவரம் நாகரீக வரம்புகளை எல்லாம் மீறிய அளவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வசதியற்ற முகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மணிப்பூருக்குச் சென்று வந்த நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவினர் நேரடியாக அங்கு பார்த்த கொடுமைகளை ஊடகங்களுக்கு முன் பேசியிருக்கிறார்கள்.

ஆனால், அதை நாடாளுமன்றத்தில் அவர்களால் பேச முடியவில்லை. பேச அனுமதிக்கவும் படவில்லை.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைப் பேச‍ச் சொல்லி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.  

நாடாளுமன்றம் தினமும் அமளியால் முடங்கிப் போகிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முயற்சித்தும் இன்னும் பிரதமர் பேசின பாடாக இல்லை.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கடிந்து கொள்ளும் அளவுக்கு இருக்கிறது மணிப்பூர் சூழ்நிலை.

காவல்துறை ஏன் அங்கு செயலிழந்துவிட்டது என்கிற கேள்வியுடன் மணிப்பூர் டி.ஜி.பி.யை விசாரணைக்கு அழைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

இந்தியாவின் ஓர் அங்கம் தானே மணிப்பூர் மாநிலமும். அங்கு பா.ஜ.க ஆட்சி தானே நடக்கிறது? அதன் மீது தானே இவ்வளவு விமர்சனங்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற போது மத்தியில் ஆளுகிற அரசு என்ன முடிவு எடுத்திருக்க வேண்டும்? சட்டத்தின் ஆட்சியை அங்கு எப்படியாவது அமல்படுத்தியிருக்க வேண்டாமா?

பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் புகார் செய்தும், மாநில ஆளுநர் கண்டித்தும் கூட இன்னும் பிரதமர் அது குறித்துப் பேசாமல் மௌனமாக இருப்பது எதைக் காட்டுகிறது? மக்கள் இந்த மௌனத்தை எப்படிப் புரிந்து கொள்வார்கள்?

 ‘மன்கீ பாத்’ நிகழ்ச்சியில் பேசுகிற பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசுவதற்குத் தயங்குவானேன்?

வாய் மூடிய மௌனத்தால் எந்தப் பிரச்சினையும் எப்போதும் தீரப் போவதில்லை.

– யூகி

Comments (0)
Add Comment