ஆடியில் பெருகும் நமது வளம்!

’நீரின்றி அமையாது உலகு’ என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை. அது மட்டுமல்லாமல், வளத்தின் அடையாளமாகவும் நீர் மட்டுமே கொள்ளப்படுகிறது.

எத்தனையோ முன்னேற்றங்களை அறிவியல் தொழில்நுட்பங்கள் சாதித்துவிட்டாலும், நீருக்கான பதிலீட்டை மட்டும் இதுவரை கண்டறியவில்லை.

ஒரு மனிதரின் தொடக்கம் முதல் முடிவு வரை, வாழ்வின் அனைத்து நிலைகளிலும் நீர் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த புவியில் நீக்கமற நிறைந்திருக்கும் நீருக்கு நன்றி செலுத்தும் நாளே ’ஆடிப்பெருக்கு’.

விவசாயமே அடிப்படை!

எத்தனையோ தொழில்கள் இந்த பூமியில் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, இன்றும் முதல் தொழிலாக போற்றப்படுவது விவசாயம் மட்டுமே.

வாழ்வின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில் முதலாவதற்கு வழி வகுப்பது.

சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை, முப்போகத்தைக் கண்டிருக்கிறது நம் மண். இன்று, ஆண்டு முழுவதும் நீரோட்டம் இருக்கும் இடங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு முறை நெல் அறுவடை நிகழ்கிறது.

இதர பயிர்களும் கூட நீர் வரத்தை பொறுத்து விளைவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட காலங்களில் நீர் பெருத்தாலும் சிறுத்தாலும் விவசாயம் பாதிக்கப்படும்.

’அவ்வாறு நடவாமல் பார்த்துக்கொள்’ என்று நீரை தாயாக எண்ணிப் போற்றும் திருநாளே ‘ஆடிப்பெருக்கு’ எனக் கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் நாள் எனக் கொண்டால், இது நீர்மைக்கானது.

ஆடி மாதம் 18ஆம் நாளன்று புது மழையால் வெள்ளம் பெருக்கெடுக்கும் என்பது நம்பிக்கை. அதனை முதலீடாக எண்ணி விதைப்பதற்கு தயாராவது இத்தினத்தின் சிறப்பு.

ஆற்றங்கரைகளில் கொண்டாட்டம்!

தமிழ்நாட்டில் ஆறுகள் பாயும் அனைத்து பகுதிகளிலும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆனாலும், காவிரி பாயும் பகுதிகளில் இதன் வீரியம் இன்னும் அதிகம்.

ஆற்றங்கரையில் ஓரிடத்தில் அமர்ந்து விளக்கேற்றி வழிபாடு செய்து, பின்னர் அந்த விளக்கினை ஆற்றில் விடும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

ஆறுகள் பாயாத பகுதிகளில் வாய்க்கால், குளம் மற்றும் ஏரிக்கரைகளில் இவ்வழக்கம் நிகழ்த்தப்படுகிறது.

தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல் போன்றவற்றை செய்து படைப்பதுண்டு.

கரையில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, மனதார நீர்த்தாய்க்கு நன்றி தெரிவித்தால் விளைச்சல் மேலும் பெருகும் என்பதே இந்த வேண்டுதலின் அடிப்படை.

அனைத்து வளங்களும் பெருக வேண்டுமென்ற எண்ணமே ஆதாரம் என்பதே, மங்கலத்தின் அடையாளமாகக் கருதப்படும் மஞ்சளை இவ்விழாவின்போது பயன்படுத்தக் காரணமாகிறது.

வளத்தைப் பெருக்குவோம்!

நம்மிடம் இருப்பது மென்மேலும் பெருக வேண்டுமென்ற விருப்பம்தான் வாழ்க்கை முழுக்க உழைக்க வேண்டுமென்ற உந்துதலை அளிக்கும்.

உழைப்பே வாழ்க்கை என்றிருந்த நம் முன்னவர்கள், அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

அந்த வகையில், ஆடியில் விதைத்து தை பிறக்குமுன் அறுவடை செய்யும் வழக்கம் நமக்கான பாடம். அதனைச் சரியாகச் செய்தால், வளம் மேலும் சேரும்.

அந்த வளத்தின் அடையாளமாகப் பல பொருட்களைப் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு.

தஞ்சை வட்டாரத்தில் ஆடிப் பெருக்கு அன்று நெல்லை ஆலையில் கொடுத்து அவல் இடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது.

விளைச்சலில் கிடைத்த பணத்தைக் கொண்டு தங்கம் அல்லது வெள்ளி வாங்குவோரும் உண்டு.

குறைந்தபட்சமாக சர்க்கரை, மஞ்சள், உப்பு ஆகியவற்றைக் கூட வாங்கலாம்.

இம்மூன்றும் வற்றாமல் இருந்தால் அவ்வீட்டில் வறுமை இல்லை என்று பொருள்.

ஆடிப் பெருக்கு அன்று தேடிச் சென்று தானம் செய்தால் புண்ணியம் சேரும் என்ற நம்பிக்கையும் உண்டு.

’செய்யும் தொழிலே தெய்வம்’ என்றிருந்த நம் முன்னோர்களைப் பொறுத்தவரை, ஆடிப்பெருக்கு வெறும் மதச்சடங்கு மட்டுமல்ல; அது உழைப்புக்கான அச்சாரம்; பெறப்போகும் பேறுகளுக்கான வேண்டுதல்; தலைமுறை தலைமுறையாக இப்பூமியை வாழ்வித்துக் கொண்டிருக்கும் நீர்மைக்கான நன்றிக்கடன்.

இயற்கை அன்னையைப் பொறுத்தவரை, நல்லன வேண்டுவோர்க்கு எப்போதும் எந்தக் குறையும் இல்லை.

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ எனும் சொற்களை கைக்கொள்ள முடியாவிட்டாலும், அந்த நம்பிக்கையை கைக்கொள்வது நம் வாழ்வை இம்மியளவாவது முன்னே நகர்த்தும். அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment