குழந்தைகளை வளர்க்கும்போது கை கொள்ள வேண்டிய வழிமுறைகளை எளிமையாகவும் சுவையாகவும் எடுத்துச் சொல்கிறார் கவியரசு கண்ணதாசன்.
“தாயின் பாலைத் தந்து வளர்த்தால்
தங்கம் போல் வளரும்
தழுவும் போதே தட்டி வளர்த்தால்
தன்னை உணர்ந்து விடும்!
நோயில்லாமல் காத்து வளர்த்தால்
நுறு வயது வரும்
நோக்கம் ஒன்றைச் சொல்லி வளர்ந்தால்
பாரில் உயர்ந்து விடும்.
பாலைப் போன்ற பிள்ளை மனதில்
எதுவும் பதிந்து விடும்
பயந்து பயந்து வீட்டுக்குள் வைத்தால்
பயனின்றி மாறிவிடும்
அன்பை அதிகம் வளர்த்தால்
அதுவும் அன்பாகும்
ஐந்து வயதில் கற்பனை எல்லாம்
ஆயுள் வரை வளரும்
பண்பாடுள்ள பிள்ளைகளைத்தான்
பாரதம் வேண்டுவது
பாரத நாட்டுத் தாய்மார்க்கெல்லாம்
வேறென்ன கூறுவது”
இதேபோல் குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு குறித்தும் சொல்கிறார் கவிஞர்.
“குழந்தை முன்னே தகப்பன் குடித்தால்
குடிக்கப் பழகிவிடும்
கோபத்தாலே வார்த்தைகள் சொன்னால்
குழந்தையும் கற்றுவிடும்
செல்லம் கொடுத்து வளர்ப்பதனாலே
தீமையும் வருவதுண்டு
தினமும் பிள்ளையை அடிப்பதனாலே
சொரணையும் போவதுண்டு:
தண்டவாளம் சரியாய் இருந்தால்
வண்டிக்கு ஆபத்தில்லை
தாயும் தந்தையும் சரியாய் வளர்த்தால்
சேய்க்கொரு குற்றமில்லை”
– இந்த வரிகள் ஒவ்வொன்றும் இல்லங்கள் தோறும் இடம்பெறவேண்டியவை என அவர் எடுத்துரைக்கிறார்