’காலத்தே பயிர் செய்’ என்பது தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ள பழமொழி.
’கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்’ என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம்.
சினிமாவைப் பொறுத்த வரை, வாய்ப்புகள் எப்போதாவது தான் வரும். அதனை கச்சிதமாக பிடித்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் போச்சு. மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காது.
தமிழ்த்திரை உலகில் இப்போது நான்கு ஹீரோக்களுக்கு சந்தை மதிப்பு அதிகம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரே அவர்கள்.
இன்றைய தினத்தில் நால்வரும் 100 + கோடிகளில் சம்பளம் வாங்கும் டாப்-4 நாயகன்கள்.
அஜித் தவிர எஞ்சிய மூவரும், உடும்பு பிடியாய் இந்த வாய்ப்பை பிடித்துக் கொண்டு விட்டார்கள்.
ரஜினிகாந்த்
ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த நாட்களில் ரஜினிகாந்த் ஆண்டுக்கு பத்து பதினைந்து படங்கள் வரை நடித்தார்.
ஆண்டுக்கு ஒரு படம் நடித்தாலே போதும் என்ற மனநிலைக்கு வந்தார்.
அதுவும் பெரிய கம்பெனிகளாகவே பார்த்து பார்த்து கால்ஷீட் கொடுத்தார்.
ஒரு படத்துக்கு 100 கோடி ரூபாய் ஊதியம் வாங்கும் உச்சநிலையைத் தொட்ட பின்னர், அரசியல் ஆசையையே மூட்டைக்கட்டி வைத்த சூப்பர்ஸ்டார், முதுமையை பொருட்படுத்தாமல், தினமும் ஷுட்டிங் தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்து விட்டார்.
ஜெயிலர், அடுத்த மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிக்கான காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ளது.
அடுத்து லைகா தயாரிப்பில், ஞானவேலு இயக்கும் படத்துக்கு கால்ஷீட் அளித்துள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இமயமலைக்கு அவசர விசிட் அடித்து விட்டு, படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
ஆன்மிகவாதியான ரஜினிகாந்த், தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இமயமலைக்குச் செல்லவில்லை.
கொரோனா நோய் முற்றிலும் அகன்றுள்ள நிலையில், மீண்டும் அடுத்த மாதம் 6-ம் தேதி இமயமலைக்கு செல்கிறார், ரஜினி.
அங்கு ஒரு வாரம் தங்கி இருந்து, பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்கு பயணிக்கிறார்.
திரும்பி வந்ததும் ஞானவேலு படத்தில் நடிக்க உள்ளார்.
கமல்ஹாசன்
ரஜினிக்கு அடுத்த நிலையில் இருந்த போதுகூட பெறாத சம்பளத்தை இப்போது வாங்குகிறார் கமல்ஹாசன்.
நாக் அஸ்வின் இயக்க பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் கல்கி படத்தில் நடிக்க 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார், கமல்.
இந்தியன் -2 முடிந்ததும் கல்கி ஷுட்டிங் தொடங்கவுள்ளது.
அடுத்து எச்.வினோத் டைரக்ஷனில் நடிக்க உள்ளார்.
இது தவிர லோகேஷ் கனகராஜ், மணிரத்னம் ஆகியோர் டைரக்டு செய்யும் படங்களுக்கும் தேதி கொடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், தேர்தலில் அவரது மக்கள் நீதி மய்யத்தின் பங்கு எப்படி இருக்கும் என தெரியவில்லை.
விஜய்
விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் நடித்த துணிவு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி ஒரே நாளில் ரிலீஸ் ஆனது.
அதன்பிறகு விஜய் தனது 67 வது படமான லியோ படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய், போர்ஷன் முடிந்து விட்டது.
அடுத்து விஜயின் 68 வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகிறது.
அஜித்
அஜித் நடித்த துணிவு வெளியாகி 6 மாதங்களை கடந்து விட்டது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் விக்னேஷ் சிவன் விதித்த சில நிபந்தனைகள் அஜித்தை எரிச்சல் படுத்தியது.
படத்தில் இருந்தே விக்னேஷ் சிவனை தூக்கி விட்டார்கள்.
அவருக்கு பதிலாக அஜித்தின் அடுத்த படமான ’விடாமுயற்சி’யை மகிழ் திருமேனி இயக்குகிறார்.
கதை விவாதத்தில் திருமேனி, ஈடுபட்டதால் அஜித் ஜாலியாக வெளிநாடுகளுக்கு பறந்து போனார்.
மகிழ் திருமேனி ’ஸ்கிரிப்ட்’ வேலையை முடித்து விட்டதால் அஜித் சென்னை திரும்பியுள்ளார்.
அடுத்த மாதம் விடா முயற்சி ஷுட்டிங் ஆரம்பமாகிறது. இதில், திரிஷா, கதாநாயகியாக நடிப்பார் என தெரிகிறது.
அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டில்தான், அஜித்தை திரையில் பார்க்க முடியும்.
வாரிசு முடிந்து, அடுத்த படத்தையும் விஜய் முடித்து விட்டார்.
அஜித் , 6 மாதமாக சும்மா இருந்துள்ளார்.
இதனால் அவருக்கு 100 கோடி ரூபாய் நஷ்டம்.
அஜித் படத்தை விக்னேஷ் சிவன், உடனடியாக ஆரம்பித்திருந்தால் அந்தப்படம் இந்த நேரம் முடிந்திருக்கும். விக்னேஷ் சிவனுக்கு பேரும் காசும் கிடைத்திருக்கும்.
படம் ‘டேக் ஆஃப் ‘ ஆகாததால் அவருக்கும் இழப்பு. அஜித்துக்கும் இழப்பு.
– பி.எம்.எம்.