இந்திய அரசின் சர்வதேச தர அமைப்புச் சான்றிதழ் மற்றும் பணியிட மதிப்பீட்டிற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சான்றிதழை (QCI-GOI) சென்னை பெருநகர காவல் துறையில் முதல் காவல் நிலையமாக பூக்கடை காவல் நிலையத்திற்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு.
சென்னை பெருநகர காவல்துறை, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், இராயபுரம், காசிமேடு, யானைக்கவுனி, ஏழுகிணறு, வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை, புளியந்தோப்பு, பேசின்பாலம், எம்.கே.பி நகர், கொடுங்கையூர் மற்றும் செம்பியம் ஆகிய 15 காவல் நிலையங்கள் ISO தரத் சான்றிதழை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டது.
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட காவல் நிலையங்களை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தரம் உயர்த்தப்பட்டு பழமை மாறாமல் வடக்கு கடற்கரை காவல் நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் ஆகிய இரண்டு காவல் நிலையங்கள் உட்பட 15 காவல் நிலையங்கள் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்றுள்ளன.
இதற்காக ஏராளமான காவலர்கள் உறுதுணையாக பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
பொதுமக்கள் தங்கள் மன கஷ்டத்தை புகாராக காவல் நிலையத்திற்கு கொண்டு வரும்போது அவர்களின் மன நிலையை மாற்றுவதற்கான இடம் காவல் நிலையமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்று காவல் நிலையத்தின் தரத்தை உயர்த்தி தற்போதைய சூழ்நிலைக்கேற்றவாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் முதன்முறையாக இந்தியாவில் 18 ஆம் நூற்றாண்டில் பொதுமக்களுக்காக கட்டிய காவல் நிலையங்கள் 135 ஆண்டுகள் கழித்து தற்போது அதே பழமை மாறாமல் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
– தேஜேஷ்