தியாகத்தின் மறு உருவமாகத் திகழ்ந்த ஜானகி அம்மா!

-நடிகை குட்டி பத்மினி

அன்னை ஜானகி – 100 : சிறப்புப் பதிவு 

ஜானகி அம்மாவை என்னுடைய ஐந்து வயதிலிருந்தே எனக்குத் தெரியும். ஜானகி அம்மாவும், எம்.வி.ராஜம்மாவும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர்.

எம்.வி. ராஜம்மாவின் கணவர் தான் இயக்குநர் பி.ஆர்.பந்துலு. அவருடைய முதல் தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைப்படங்களில் நான் நடித்திருக்கிறேன்.

ஜானகி அம்மா அடிக்கடி எம்.வி. ராஜம்மாவை வந்து சந்தித்துப் பேசுவார். ஜானகி அம்மா, ராஜம்மா அவர்களின் வீட்டிற்கு வந்துவிடுவார்.

அதனால் தான் சிறு வயதிலிருந்தே ஜானகி அம்மாவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் சிறுமியாக துறுதுறுவென்று இருப்பதால் ஜானகி அம்மாவிற்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.

நான் ஜானகி அம்மாவை என்னுடைய 12 வயதிற்குப் பிறகு நன்கு புரிந்து கொண்டேன். ஜானகி அம்மா எப்பொழுதும் தனது கையில் ஒரு வெள்ளைக் கைக்குட்டையை வைத்திருப்பார்.

ஜானகி அம்மாவின் தோற்றம் கண்ணியமிக்கதாக இருக்கும். வாழ்க்கையில் பல கஷ்டங்களைக் கடந்து வந்த போதும், எந்தச் சூழலிலும் எம்.ஜி.ஆர் மாமாவை அவர் விட்டுக் கொடுத்ததே இல்லை.

இராமவரம் தோட்டத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோருக்கு உணவு வழங்கிக் கொண்டே இருப்பார்.

எம்.ஜி.ஆர் மாமா படப்பிடிப்பில் இருக்கும் போதெல்லாம் படத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட குறைந்தது 75 பேருக்கு பெரிய பெரிய கேரேஜ்களில் உணவு கொண்டு வந்து தருவார்கள்.

அம்மாவுடன் நான் மிகவும் நெருங்கிப் பழகியது எம்.ஜி.ஆர் மாமாவின் மறைவிற்குப் பிறகுதான்.

யார் உதவியென்று கேட்டு வந்தாலும் சற்றும் யோசிக்காமல் உதவியவர்கள் எம்.ஜி.ஆர் மாமாவும் ஜானகி அம்மாவும்.

ஜானகி அம்மா எம்.ஜி.ஆர் மாமாவை ஒரு குழந்தையைப் போன்று பார்த்துக் கொண்டார். எம்.ஜி.ஆர் மாமாவும் ஜானகி அம்மாவின் மீது அலாதிப் பிரியம் கொண்டிருந்தார். இறுதிவரை இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தனர்.

இருவருமே எப்பொழுதுமே பணத்தை முக்கியமான ஒன்றாக நினைக்க மாட்டார்கள்.

பண்டிகை நாட்களில் அவர்களது இல்லத்திற்குச் சென்றாலே மகிழ்ச்சியாக இருக்கும்.

எம்.ஜி.ஆர் மாமா இருக்கும் வரை அந்த இல்லம் நாள்தோறும் விழாக்கோலமாக இருக்கும். அவர் மறைவிற்குப் பிறகு சிறகுகளை இழந்தத பறவை போலாகி விட்டது.

சூழ்நிலை காரணமாக ஜானகி அம்மா அரசியலில் நுழைந்தாரே தவிர அரசியல் மீது அம்மாவிற்கு ஈடுபாடு இருந்தது கிடையாது.

ஜானகி அம்மா தனது குடும்பத்தையும் தனது கணவரையும் மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்வதில் மட்டுமே தன்னுடைய முழு ஆர்வத்தையும் செலுத்தினார்.

தனது வாழ்க்கை முழுவதும் பல விஷயங்களை விட்டுக் கொடுத்துத் தான் வாழ்ந்தார். அவர் தியாகத்தின் மறு உருவமாகத் திகழ்ந்தவர்.

மிகுந்த பொறுமை உடைய ஜானகி அம்மா எப்பொழுதுமே எந்த ஒரு செயலையும் தீர விசாரித்து தான் செய்வார்.

சிறு வயதில் நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்ததைத் தொடர்ந்து சினிமா துறையில் 31 திரைப்படங்கள் வரை நடித்தார்.

அவர் அற்புதமாக பாடக்கூடிய திறன் கொண்டவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளைப் பேசக்கூடியவர்.

இத்தனை திறமைகள் கொண்ட ஜானகி அம்மா எம்.ஜி.ஆர் மாமா மீது கொண்ட அன்பின் காரணமாக, அவருக்காகத் தன்னுடைய அத்தனை விருப்பங்களையும் உதறிவிட்டு, கணவருக்காக வாழ்வதையே பெரும் பேறாகக் கருதியவர்.

அன்னை ஜானகி – 100

நூற்றாண்டுச் சிறப்பு மலர்

வெளியீடு: மெரினா புக்ஸ்

தரணி காம்ப்ளெக்ஸ்,
1A, திருநாத முதலி நகர்,
திருப்பத்தூர். – 635 601

அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலரைப் பெற கீழே உள்ள இணைப்பைத் தொடுக…

https://marinabooks.com/detailed?id=1499-0326-2509-9479

Comments (0)
Add Comment