டிடி ரிட்டர்ன்ஸ் – தில்லும் இருக்கு.. துட்டும் இருக்கு!

பேய்ப்படம் என்றால் பயமுறுத்தும்; காமெடி படம் என்றால் சிரிக்க வைக்கும். ஆனால், இரண்டையும் ஒன்றாக இணைத்தால் பயந்தவாறே சிரிப்பார்கள் என்ற பார்முலாவை ராகவேந்திரா லாரன்ஸுக்கு முன்பே யாரோ ஒரு புண்ணியவான் கண்டுபிடித்துவிட்டுச் சென்றுவிட்டார்.
அதனை ஒரு சத்தியவாக்கு போல நம்மூர் இயக்குனர்கள், கதாசிரியர்கள் பின்பற்றி வருகின்றனர். அதன் பலனாகத்தான் காஞ்சனா, அரண்மனை வகையறா படங்களைக் கடந்த பத்தாண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில், சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ படத்தையும் சேர்க்கலாம்.
கொஞ்சம் ‘லொள்ளு சபா’ பாணியில் பேய்களையும் பேய்ப்படங்களையும் கிண்டலடித்தாலும், விலாப்பகுதியில் பிடித்துக்கொள்ளும் அளவுக்குச் சிரிக்க வைக்கும் பழைய சந்தானத்தை அவற்றில் பார்க்க முடியும்.
இப்போது, பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ வெளியாகியிருக்கிறது. இதிலும் பேய்களின் அட்டகாசம் நமக்கு காமெடியாக தெரியும் என்று உத்தரவாதம் தந்தது படக்குழு.
உண்மையில், அந்த வார்த்தைகளைப் படம் உண்மையாக்கி இருக்கிறதா?

ஒரு கதை சொல்லட்டுமா?

பிரெஞ்ச் கேஸில் எனும் பங்களா. அங்கிருக்கும் ஒரு குடும்பத்தினர், ’தேடிக் கண்டுபிடி’ பாணியில் ஒரு விளையாட்டை நடத்தி வருகின்றனர். கேஸினோ போன்று பணம் கொட்டும் அந்த விளையாட்டில் இறங்கி வெற்றி பெற்றால், பல மடங்கு பணம் கிடைக்கும்; தோற்றால் உயிர் போகும்.

இது வெளியே தெரியவந்து, ஊர் மக்களும் போலீசாரும் அங்கு வருகின்றனர். அந்த குடும்பத்தினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்த, பதிலுக்கு அவர்களும் வன்முறையில் இறங்க, அந்த பங்களாவே தீக்கிரையாகிறது.

அதன்பின், வழி தவறி யாராவது அந்த பங்களாவுக்குள் சென்றால் ஆவிகளாகத் திரியும் அந்தக் குடும்பமே அவர்களோடு விளையாடி உயிரைப் பறிப்பது வாடிக்கையாகிறது. இந்த பங்களா, புதுச்சேரிக்கு அருகே இருக்கிறது.

புதுச்சேரியில் பெரிய கோடீஸ்வரராக இருப்பவர் அன்பரசு (பெப்ஸி விஜயன்). சாராய விற்பனை, கந்து வட்டி என்று பலவற்றில் முதல் ஆளாக அவரே இருந்து வருகிறார். அவரது ஒரே மகன் பென்னி (ரெடின் கிங்ஸ்லி) பிரான்ஸ் செல்லும் நோக்கோடு, பணம் கொடுத்து பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற ஒரு பெண்ணை அவருக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார் பிரான்சிஸ்.

திருமண விழா கொண்டாட்டங்களின்போது மணமகள் காணாமல்போக, அவரது தங்கை சோபியாவை (சுரபி) மணக்கத் தயாராகிறார் பென்னி. அதனை அறிந்ததும், பென்னியைக் கடத்திச் சென்றுவிடுகிறார் சோபியாவின் காதலர் சதீஷ் (சந்தானம்).

அந்த காரை, புரபொசரும் (ராஜேந்திரன்) அவரது ஆட்களும் திருடிச் செல்கின்றனர்.


அதேநேரத்தில், குழந்தையின் (பிபின்) ஆட்கள் அன்பரசுவின் வீட்டில் இருக்கும் பணம், நகைகளை லவட்டுகின்றனர்.

அதனைத் தங்கள் இடத்திற்கு அவர்கள் கொண்டுவர, அங்கு வரும் புரபொசர் கும்பல் பேக்கை பிடுங்கிக் கொண்டு செல்கிறது. மீண்டும் அவர்களிடம் இருந்து காரை பிடுங்கும் சதீஷ், அதிலிருக்கும் பணம் நகைகளைப் பார்த்து மிரள்கிறார்.

கல்யாணம் நின்றுபோன வருத்தத்தில், தன்னிடம் வாங்கிய பணத்தைத் தரச் சொல்லிக் கேட்கிறார் பிரான்ஸிஸ். அது தெரிந்து, 25 லட்சம் ரூபாயை சோபியாவிடம் கொடுக்கிறார் சதீஷ்.

திருப்பித் தந்த பணத்தைக் கையில் வாங்கிப் பார்க்கும் பிரான்சிஸ், அந்த பையில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளைப் பார்க்கிறார். அது, தனது வீட்டில் திருடுபோன பணம் என்பதை உணர்கிறார்.

ஆத்திரத்தின் உச்சத்திற்குச் செல்லும் பிரான்சிஸ், மொத்தப்பணமும் தன் கைக்கு வர வேண்டுமென்று சோபியா குடும்பத்தினரை மிரட்டுகிறார்.

அதற்குள், அந்தப் பணத்தை சதீஷின் நண்பர்கள் (மாறன், சேது) பிரெஞ்ச் கேஸில் பங்களா அருகே இருந்த காருக்கடியில் மறைத்து வைக்கின்றனர்.

சோபியாவுக்கு நேர்ந்த ஆபத்தை அறியும் சதீஷ், தன் நண்பர்களோடு சேர்ந்து அந்த பணத்தை எடுத்துவரச் செல்கிறார்.

ஆனால், அங்கு பணம் இல்லை. சரி, உள்ளே போய் பார்க்கலாம் என்று பங்களாவுக்குள் சென்றால், அங்கே அதே பேய் குடும்பம் ‘ஒரு கேம் ஆடலாமா’ என்று மிரட்டுகிறது.

அதற்குள் சோபியா முதல் குழந்தை, அன்பரசுவின் ஆட்கள் வரை அனைவரும் ஒவ்வொருவராக அந்த பங்களாவைத் தேடி வரத் தொடங்குகின்றனர்.

இறுதியில், சதீஷும் அவரைச் சார்ந்தவர்களும் அந்த பேய்களோடு விளையாடி வெற்றி பெற்றார்களா? அனைவரும் உயிர் பிழைத்தார்களா என்று சொல்கிறது ‘டிடி ரிட்டர்ன்ஸ்’.

’ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்ற ரேஞ்சில் முதல் பதினைந்து நிமிடங்கள் கழிந்தாலும், ஆங்காங்கே காமெடி ‘கவுண்டர்கள்’ அடித்து முன்பாதியில் தொடர்ந்து சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த்.

இடைவேளைக்குப் பிறகு, அந்த ‘ஹாரர் கேம்’ ஆட்டம் அந்த வேலையைக் கையில் எடுத்திருக்கிறது. ஒரு பேய் படத்திற்கான உரித்தான ‘சீரியஸ்னெஸ்’ உடன் அவ்வப்போது மறக்காமல் சிரிப்பூட்டுவதுதான் இப்படத்தின் சிறப்புகளில் தலையாயது.

கலக்கல் காமெடி!
சந்தானம் நாயகனாக நடிக்கும் கதைகள் வழக்கத்தில் இருந்து மாறுபட்டாலும், கமர்ஷியல் பாணியில் இருந்து விலகி நிற்கவில்லை. இந்த படமும் அப்படியே.

ஆனால், ’தில்லுக்கு துட்டு’ பாணியிலான பாத்திரம் என்றபோதும், ஸ்பெஷல் பில்டப் ஏதும் இல்லை. அவரும் அதனை உணர்ந்து, ஒரு சாதாரண நாயகன் போலவே முக்கால்வாசி கிணறைத் தாண்டியிருக்கிறார்.

பெரிய சைஸ் ‘டெடி பியர்’ போல இருக்கும் சுரபி, இதில் அழகுற வந்து போயிருக்கிறார். தேவையான இடங்களில் அளவாக நடித்திருக்கிறார்.

‘புஷ்பா’ பாடல் நடனத்தை ஆடும் இடமொன்றில் சந்தானத்துடன் இணைந்து ‘கிளாப்ஸ்’ பெறுகிறார்.
நாயகன் நாயகிக்கு அடுத்தபடியாக மொட்டை ராஜேந்திரனும் அவரது அடியாளாக வரும் தங்கதுரையும் நம்மைச் சிரிக்க வைக்கின்றனர்.

’அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்களா’ என்று பிபின் உடன் சேர்ந்து காமெடி கதகளி ஆடுகிறார் முனீஸ்காந்த். ‘இவங்கள்ல இருந்து நான் வித்தியாசமானவன்’ என்றவாறே சாய் தீனா, ரெடின் கிங்ஸ்லி, தீபாவின் அட்ராசிட்டியை மீறி ‘ஸ்கோர்’ செய்கிறார் பெப்ஸி விஜயன்.

சந்தானத்துடன் திரியும் ‘கேங்’கில் மாறனும் சேதுவும் நம்மை வயிற்று வலிக்கு ஆளாக்குகின்றனர். இவர்கள் போதாது என்று ‘லொள்ளுசபா’வின் பழைய தலைகளான மனோகர், உதயா, சுவாமிநாதன் உடன் கூல் சுரேஷும் ‘கௌரவமாக’ இதில் தலை நீட்டியிருக்கிறார்.

பேய் பங்களாவில் வசிப்பவர்களாக வரும் பிரதீப் ராவத், ரீட்டா, மாசூம் சங்கர், மானஸ்வி உட்பட அனைவருமே நம்மைப் பயத்தில் உறைந்தவாறே சிரிக்க வைக்கின்றனர்.

முன்பாதியில் திரைக்கதை பல இடங்களில் அலை பாய்ந்தாலும், இடைவேளைக்குப் பிறகு ஓரிடம் நோக்கி நகர்கிறது. அதனைத் திரையில் சொன்ன விதத்தில் பிரேம் ஆனந்த் அசத்தியிருக்கிறார்.


இயக்குனரின் பார்வையை உணர்ந்து ‘ஸ்டைலிஷான’ மேக்கிங்கை திரையில் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி.

ஏ.ஆர்.மோகனின் கலை வடிவமைப்பில், பங்களா செட் அசத்தலாக உள்ளது. ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு, சீராகத் திரையில் கதை பாய வழி வகுத்திருக்கிறது.

ஆப்ரோவின் இசையில் பாடல்கள் ‘ஓகே’ ரகம்; அதற்குச் சேர்த்தாற்போல, பின்னணி இசையைக் கலக்கலாக தந்திருக்கிறார்.இன்னும் காஸ்ட்யூம்ஸ், ஸ்டண்ட், டான்ஸ், ஒலிப்பதிவு என்று ஒவ்வொன்றின் சிறப்பையும் தனியே சொல்லும் அளவுக்குத் தனித்துவமான உழைப்பு இதில் கொட்டப்பட்டுள்ளது.
படம் முழுக்க கலக்கல் காமெடியாக இருப்பதே, இப்படம் சுமார் 2 மணி நேரம் ஓடுவதைக் குறையாக எண்ண வைக்கிறது; இன்னும் கொஞ்சம் நிமிடங்கள் தொடர்ந்திருக்கலாமே என்று அங்கலாய்க்க வைத்திருக்கிறது.
பழைய ஜோக் கிடையாது!
விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்ணே’, புருஷ லட்சணம் படத்தில் வரும் அம்மன் பாடல் போன்றவற்றைக் கிண்டலடித்து பயன்படுத்தியிருந்தாலும், திரைக்கதையின் முக்கிய இடங்களில் அவற்றைப் புகுத்தியிருப்பது அருமையான விஷயம்.
மிக முக்கியமான இடமொன்றில், யூடியூப் விளம்பரங்களைக் கிண்டலடித்திருப்பது இயக்குனரும் அவரைச் சார்ந்தவர்களும் எந்த அளவுக்கு ‘ட்ரெண்ட்’டோடு ஒன்றியிருக்கின்றனர் என்று காட்டுகிறது.
இப்படியொரு படத்தில் நிச்சயமாக லாஜிக் மீறல்களை பூதக் கண்ணாடி கொண்டு தேடக் கூடாது.
அதேநேரத்தில், ஏற்கனவே பயன்படுத்திய ஜோக்குகளை சேர்த்துவிடக் கூடாது என்று ‘கங்கணம்’ கட்டிக்கொண்டு வேலை பார்த்திருக்கிறது இயக்குனர் குழு.
அதுவே, இந்த படத்தைப் பார்த்து முடித்தபிறகு, ‘ஒரு காமெடி படம் பார்த்து சிரிச்சோம்’ என்று திருப்தியாக உணர வைக்கிறது.  அதனால், இதில் ‘தில்லும் இருக்கு, துட்டும் ரிட்டர்ன் வந்துடும்’ என்று தாராளமாகச் சொல்லலாம்.
’குளுகுளு’வில் விட்டதை இந்த படத்தில் மீண்டும் பிடித்திருக்கிறார் சந்தானம். மீண்டும் இதே போன்ற பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதை விட்டு, ‘மக்கள் சிரித்தால் போதும்’ என்ற எண்ணத்துடன் வேறு வேறு கதைகளை தேர்வு செய்தால் போதும்; மலையாள நடிகர் திலீப் போல, தனக்கென்று தனி ‘ரூட்’ பிடித்துவிடுவார்.
தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ் வரிசையில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அதற்கான கோட்டை வரைந்துள்ளது; ரோடு போல மாற்ற வேண்டியது சந்தானம் & டீம் பொறுப்பு..!
– பா. உதய்
Comments (0)
Add Comment