விந்தையான வாடகை வீட்டில் இருந்த ஓவியர் மாருதி!

பத்திரிகையாளர் மோகன ரூபனின் அனுபவப் பதிவு

சென்னையில், ஊடகத்துறையில், வார இதழ்களில் பணியாற்றிய யாருக்கும் ஓவியர் மாருதியைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

அந்த வகையில் ஓவியர் மாருதியை எனக்கும் தெரியும். இரண்டு அல்லது மூன்று முறை அவரைச் சந்தித்திருக்கிறேன்.

ஓவியர் மாருதியைப் பற்றி எனக்குத் தெரிந்த நான்கு விடயங்களை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

1. நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மீது அதிகப் பற்று கொண்டவர் ஓவியர் மாருதி. ஆண்குழந்தை பிறந்தால் சுபாஷ் என்றும், பெண்குழந்தை பிறந்தால் சுபாஷிணி என்றும் பெயர் சூட்ட அவர் திட்டமிட்டிருந்தாராம். தற்போது அவருக்கு 2 மகள்கள். ஒரு பெண்ணின் பெயர் சுபாஷிணி!

2. வார இதழ்களுக்காக மாருதி ஓவியம் வரைந்து வைத்திருப்பார். வாங்கிப்போக வந்தவர் பிடிக்காமல் ஏதாவது குறைகள் சொன்னால், புதிதாக ஓவியத்தை வரைந்து கொடுப்பார்.

3. மாருதி, சென்னைக்கு வந்த புதிதில், மயிலாப்பூரில் ஒரு வீட்டில் தனியாளாக வாடகைக்கு தங்கியிருந்திருக்கிறார். அது விசித்திரமான வாடகைமுறை. அந்த வீட்டில் ஏற்கெனவே குடியிருக்கும் ஒரு தம்பதி, பகல் முழுவதும் அந்த வீட்டில் இருப்பார்கள்.

இரவில் கணவனும், மனைவியும் எங்கோ போய்விடுவார்கள். அவர்களது உடைமைகள் அந்த வீட்டில் அப்படியே இருக்கும். இரவில் மட்டும் மாருதி அங்கே சென்று தூங்கிக் கொள்ளலாம்.

காலையில் குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே போய்விட வேண்டும் என்பது விதிமுறை. பகலில் வீட்டுப் பக்கம் போகவே முடியாது. இப்படி ஒரு விந்தையான வாடகை வீட்டுக்கதையை ஒருமுறை அவர் சொல்லியிருக்கிறார்.

4. மயிலாப்பூர் கோயில் குளம் ஒன்றில் இருள் விலகாத அதிகாலைப் பொழுதில் குளிப்பதற்காகச் சென்ற மாருதி, நீரில் ஒருமுறை முங்கி எழுந்திருக்கிறார்.

அப்போது அவர்மேலே யாரோ விழுந்து பிடிப்பதைப்போல உணர்ந்திருக்கிறார். ‘சென்னையில் அதற்குள்ளா நமக்கு எதிரி வந்துவிட்டார்?’ என்று அந்த மர்ம உருவத்தைப் பிடித்து விலக்கிவிட்டு, பதற்றத்துடன் அவர் படியேறியிருக்கிறார்.

அந்த உருவம் யாரென்று பார்த்தபோது அது ஓர் ஆணின் சடலம்! நள்ளிரவில் தற்கொலை செய்து கொண்ட ஒருவரது பிணம் மிதந்து வந்து, மூழ்கி எழுந்த ஓவியர் மாருதியை பயமுறுத்தி இருக்கிறது. இந்தக் கதையையும் ஒருமுறை அவர் சொல்லியிருக்கிறார்.

ஓவியர் மாருதி மறைந்தார் என்று கேட்டதும் பளிச்சென இந்த நான்கு விடயங்களும்தான் நினைக்கு வந்தன.

ஓவியர் மாருதி, ஒளிப்படத்தின் துல்லியத்துடன் உயிர்கொண்ட பலப்பல ஓவியங்களை வரைந்தவர். பழகுவதற்கு இனியவர், பண்பாளர்.

அவருக்கு நமது ஆழ்ந்து இரங்கல்!

நன்றி: மோகன ரூபன் 

Comments (0)
Add Comment