2002ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தனுஷ், இன்று சர்வதேச எல்லைகளைக் கடந்து உலகளாவிய கலைஞனாக உயர்ந்து நிற்கிறார்.
இன்று (ஜூலை 28) தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடும் தனுஷ், தனக்கான கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுக்கும் வெகுசில நடிகர்களில் ஒருவர்.
அப்படி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களில் தனது முழு உழைப்பையும் கொட்டி அதற்கான நியாயத்தை வழங்குபவர்.
‘துள்ளுவதோ இளமை’ படத்தில் 19 வயது இளைஞனாக தொடங்கிய தனுஷின் திரைப் பயணத்தை செதுக்கியதில் முக்கிய அங்கம் வகித்த சில கதாபாத்திரங்களை இங்கே பார்க்கலாம்.
சிறுவயதில் எதிர்கொண்ட துர்சம்பவங்களால் உளவியல் சிக்கலுக்கு ஆளான வினோத் என்ற கதாபாத்திரத்தை கண்முன்னே தத்ரூபமாக காட்டியிருப்பார் தனுஷ்.
தனுஷ் எனும் ஒரு நடிகனை தமிழ் சினிமா அடையாளம் கண்டது இங்கேதான்.
2) புதுப்பேட்டை: ‘திருடா திருடி’, ’சுள்ளான்’, ‘தேவதையைக் கண்டேன்’ என தொடர்ந்து கமர்ஷியல் படங்களைக் கொடுத்தாலும் தனுஷின் நடிப்பு ஆளுமையை முழுமையாக வெளிக் கொண்டு வந்த படம் ‘புதுப்பேட்டை’.
செல்வராகவன் இயக்கிய இப்படத்தில் தனுஷ் நடித்த ‘கொக்கி குமார்’ கதாபாத்திரம் அவரது திரைவாழ்க்கையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது.
3) பொல்லாதவன்: வெற்றிமாறனின் முதல் படமான இதில், மிடில் கிளாஸ் சென்னை இளைஞன் பிரபுவாக முத்திரை பதித்திருப்பார் தனுஷ். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் – ஹீரோ கூட்டணிக்கு அடித்தளமிட்ட படம் இது.
4) யாரடி நீ மோகினி: செல்வராகவன் கதை திரைக்கதையில், மித்ரன் ஜவஹர் இயக்கிய இப்படத்தில் வாசுதேவனாக ஆர்ப்பாட்டமில்லாத, உணர்வுப்பூர்வ நடிப்பை வழங்கியிருப்பார் தனுஷ்.
5) ஆடுகளம்: 2வது முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த இப்படத்தில் சேவல் சண்டையில் ஈடுபடும் மதுரை இளைஞனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இப்படம் அவருக்கு சிறந்த நடிக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது.
6) மயக்கம் என்ன: நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவனுடன் தனுஷ் கைகோத்த இப்படம் வசூல்ரீதியாக வெற்றிபெறவில்லை எனினும், தனுஷின் திரை வாழ்வில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது.
கனவை துரத்தி ஏமாற்றங்களை எதிர்கொள்ளும் இளைஞனை கண்முன் நிறுத்தியிருப்பார்.
7) மரியான்: பரத் பாலா எழுதி இயக்கிய இப்படத்தில் மீனவ இளைஞனாக நடித்திருப்பார் தனுஷ்.
வெளிநாட்டில் கொத்தடிமையாக சிக்கி சீரழிந்து மீண்டு வரும் கதாபாத்திரத்தில் குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்கியிருப்பார்.
8) வடசென்னை: தனுஷின் திரைவாழ்வில் மிக முக்கியமான மற்றொரு கதாபாத்திரம். வெற்றிமாறன் சிந்தனையில் உருவான இந்த அன்பு கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் சிறப்பாக எழுதப்பட்ட பாத்திரங்களில் ஒன்று.
துள்ளல் மிகுந்த பதின்பருவ சிறுவன், ஆக்ரோஷமான இளைஞன், பக்குவமான நடுத்தர வயது ஆள் என மூன்று பரிணாமங்களில் மிரட்டியிருப்பார்.
9) அசுரன்: இது தனுஷின் வாழ்நாள் கதாபாத்திரம். தன் வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தை தேர்வு செய்து வியக்க வைக்கும் நடிப்பை வழங்கி மற்ற நடிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார் தனுஷ்.
சாதிய ஒடுக்குமுறையை முகத்தில் அடித்தாற்போல பேசிய இப்படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான 2வது தேசிய விருதை பெற்றுத் தந்தது.
10) திருச்சிற்றம்பலம்: சிறுவயதில் தாயையும் தங்கையையும் இழந்து, அந்த ஆற்றாமையை தந்தை மீது காட்டும் கதாபாத்திரம்.
படத்தின் கிளைமாக்ஸில் தன் தந்தை அடிவாங்கும் இடத்தில் ஒரு சண்டைக் காட்சியை வைக்கக் கூடிய எல்லா சாத்தியங்களும் இருந்த ஒரு சூழலில், அதனை அந்த கதாபாத்திரத்துக்காக தவிர்த்த தனுஷ் பாராட்டுக்குரியவர்.
– நன்றி: இந்து தமிழ் திசை.