அண்ணாமலையின் பாதயாத்திரை பாஜகவுக்கு வாக்குகளை அள்ளித் தருமா?

சுதந்தரப் போராட்டத்தின் போது காந்தி ஏராளமான பாதயாத்திரைகளை நடத்தியுள்ளார்.

விடுதலைக்கு பின்னர் 1980-களில் ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர் கன்னியாகுமரியில் ஆரம்பித்து டெல்லி வரை நடைப்பயணம் மேற்கொண்டார்.

அதற்கு பிறகு நாடு தழுவிய பாதயாத்திரை சென்ற பெரிய தலைவர் ராகுல்காந்தி.
மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் ‘இந்தியா‘ எனும் பெயரில் இப்போது எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது ராகுலின் யாத்திரை.
‘பாஜக ஆட்சியில் மக்களுக்கு நேர்ந்துள்ள துயரங்களை நேரில் கேட்கப் போகிறேன்’ என அறிவித்து அவர், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கினார்.

கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்களை கடந்து வந்த இந்த யாத்திரை ஸ்ரீநகரில் ஜனவரி 30 ஆம் தேதி நிறைவடைந்தது.
மொத்தம் 4,000 கி.மீ. ராகுல் நடந்தார்.

நடை பயணத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லுனர்கள், அறிவியல் அறிஞர்கள், திரைத்துறை, விளையாட்டுத்துறை சாதனையாளர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர்.

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி, ராகுல் யாத்திரைக்கு கிடைத்த வெற்றி என காங்கிரசார் கொண்டாடுகிறார்கள்.

இந்த வெற்றி மக்களவைத் தேர்தலில் ஒலிக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு உண்டு.

தமிழகத்திலும் பல தலைவர்கள் நடை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கருணாநிதி, மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நடை பயணம் சென்றுள்ளார்.

மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மாநிலம் தழுவிய பாதயாத்திரை நடத்தினார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு பிரதான கட்சியான பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

இந்த பாதை யாத்திரை இன்று மாலை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகிறது..
வரும் மக்களவைத் தேர்தலுக்குள் பாஜகவை பலப்படுத்தும் விதமாக இந்த பயணத்தை அண்ணாமலை மேற்கொள்கிறார்.

என் மண், என் மக்கள் என்ற பெயரில் அண்ணமாலை தொடங்க இருக்கும் இந்த பாதயாத்திரை 234 தொகுதிகளிலும் பயணிக்க உள்ளது.

5 கட்டங்களாக நடைபெறும் அண்ணாமலையின் பாதயாத்திரை ஜனவரி மாதம் சென்னையில் நிறைவு பெறுகிறது. மொத்தம் 168 நாட்கள் யாத்திரை நடக்கிறது. பயண தூரம் 1,700 கி.மீ.

இந்த பாதயாத்திரையின் போது புகார் பெட்டி ஒன்றும் கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் புகார்களை அந்த பெட்டியில் போடலாம்.

இன்று மாலை ராமேஸ்வரம் பேருந்துநிலையம் அருகேயுள்ள வாஜ்பாய் திடலில், அண்ணாமலையின் நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாமக ஆகிய கட்சிகளுக்குத் தொடக்க விழாவில் பங்கேற்க பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. அவரது சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.வி. உதயகுமார் கலந்து கொள்கிறார்.

பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நெய்வேலியில் இன்று முற்றுகை போராட்டம் நடக்கிறது. இதனால் அன்புமணியும் நடைபயண தொடக்கவிழாவில் கலந்து கொள்ள மாட்டார்.

டெல்லியில் அண்மையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு தேமுதிகவை, பாஜக அழைக்கவில்லை.

ஆனால் பாதயாத்திரை தொடக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை நேரில் சென்று அழைத்தார், பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன்.
விழாவில் தேமுதிக பங்கேற்குமா? என தெரியவில்லை.

ராகுல், தனது நடைபயணத்தின் மூலமாக கர்நாடகாவில், காங்கிரசை ஜெயிக்க வைத்தார்.

அண்ணாமலையின் பாதயாத்திரை மக்களவைத் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
 

பி.எம்.எம்.

Comments (0)
Add Comment