என்எல்சி நிறுவன சுரங்க விரிவாக்கத் திட்டத்தை கைவிடுக!

– அகில இந்திய விவசாயிகள் மகாசபை கோரிக்கை

கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில், என்எல்சி நிலக்கரி நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலைமையில், விவசாயிகளின் எதிர்ப்புகளையும் மீறி அவர்களை வீடுகளில் சிறைவைத்து விட்டு இராட்சத எந்திரங்கள் வைத்து கால்வாய்கள் வெட்டுவது மற்றும் சமன்செய்யும் பணிகளில் என்எல்சி நிறுவனம் இறங்கியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் “வேளாண் சங்கமம்” நடத்தி, விவசாயிகள் காவலன் என விளம்பரமாகிக்கொண்டிருக்கும் போது, தமிழ்நாட்டில் விளைந்த நெற்கதிர்களை இராட்சத எந்திரங்களை வைத்து அழிக்கும் காட்சி கொடூரமானது.

விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு – கடலூர் மாவட்ட நிர்வாகம் ஒன்றிய பாஜக அரசின் முடிவான என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்காக, விளைந்த பயிர்களை அழித்து நிலங்கள் கையகப்படுத்துவதற்கு துணைபோவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும் என்று தெரிவித்துள்ளார் அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் மாநில பொதுசெயலாளர் சந்திரமோகன்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்எல்சி நிறுவன சுரங்க விரிவாக்கத் திட்டம் ஒரு அவசியமற்ற திட்டமாகும். சுற்றுச்சூழல் அழிக்கும் விவசாயிகள் விரோத பயனற்றத் திட்டம் ஆகும்.

எதிர்காலத்தில், தனக்கு நெருக்கமான கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்கத்துடன், சுரங்க விருவாக்கத் திட்டத்தில் ஒன்றிய அரசு முனைப்புக் காட்டிவருவது அம்பலமாகிறது.

ஒன்றிய, மாநில அரசுகளே! என்எல்சி நிறுவன 2வது சுரங்க விரிவாக்கத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!

கடலூர் மாவட்டத்தில், என்எல்சி நிறுவன சுரங்க விரிவாக்கத்திற்காக, மக்களின் விருப்பத்திற்கு மாறாக விவசாய நிலங்களை கையகப்படுத்தியதை உடனடியாக கைவிட வேண்டும்.

காவல்துறை மற்றும் என்எல்சி நிர்வாகம் வளையமாதேவி கிராமத்தில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.என்எல்சி நிறுவனத்தால் அழிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments (0)
Add Comment