அருமை நிழல்:
வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் படங்களின் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவுக்கும், சிவாஜிக்கும் இடையேயான நட்பு வித்தியாசமானது.
பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பலே பாண்டியா படங்களுக்கு பிறகு – ஒரு ஸ்டுடியோவில் சிவாஜி ஒரு படப்பிடிப்பில் இருக்கிறார்.
அப்போது அங்கு வந்த பந்துலு, நேராக சிவாஜி அருகில் வந்து, மரக்கிளை ஒன்றை பார்த்து கொண்டே ஆரம்பித்திருக்கிறார் பேச்சை.
பந்துலு – ”புதுசா ஒரு படம் பண்ணப்போறேன்”
சிவாஜி – “என்ன கதை”
பந்துலு – “மகாபாரதத்திலே இருந்து”
சிவாஜி – ”படத்து பேர் என்னவோ”
பந்துலு – “கர்ணன்”
சிவாஜி கொஞ்சம் முகத்தை சுருக்கி கொஞ்சம் இடைவெளி விட்டு “யாரு ஹீரோ?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பந்துலு வானத்தை தற்செயலாக பார்த்தவாறு விட்டேத்தியாக “சிவாஜி கணேசன்” என்று பதில் அளித்திருக்கிறார்.
இதற்கு சிவாஜி பதில் சொல்லும் முன், எழுந்த பந்துலு “நாளைக்கு பூஜை” என்றபடியே கிளம்பிச் சென்றிருக்கிறார்.
தான் தான் ஹீரோ என்பதை தன்னிடமே ஒரு முன்னறிவிப்பு போல் சொல்லிவிட்டு செல்லும் பந்துலு மீது ஏக கோவத்தில் திட்டித் தீர்த்திருக்கிறார் சிவாஜி.
பந்துலுவை சிவாஜி திட்டிய சேதி சினிமாவுலகம் முழுக்க அரை மணி நேரத்தில் பரவி “அவ்வளவு தான். சிவாஜிக்கும் பந்துலுவுக்கும் முட்டிக்கிச்சி” என்கிற அளவுக்கு பேச்சு வளர்ந்திருக்கிறது.
ஆனால் மறுநாள் அதிகாலை, சூரியன் உதிப்பதற்கு முன்பே முழு மேக் அப்புடன் பந்துலு பட பூஜையில் ஆஜராகி, அனைவரையும் ஆச்சர்யபடுத்தி, தன்னுடைய நட்புக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி !
புகைப்படம்: ஷூட்டிங் இடைவெளியில் பந்துலுவுடன் நடிகர் திலகம்.
நன்றி: முகநூல் பதிவு