தமிழ் ஆய்வுப் புலத்தில் முக்கியமானவரும் மார்க்சிய சிந்தனையாளருமான எஸ்.வி. ராஜதுரை அவர்கள் எழுதிய “தலித்தியமும் உலக முதலாளியமும்” என்கிற நூல் தலித்தியம் பற்றியும், முதலாளியம் பற்றியும், உலகமயமாக்கல் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.
இந்த மூன்று கோட்பாடுகளும் சந்திக்கும் இடங்களில் உருவாகும் சிக்கல்களையும் மார்க்சிய காணோட்டத்தில் எப்படி அணுகுவது என்பதை விளக்கியுள்ளார்.
இவரின் உலகமயமாக்கல் பற்றிய விமர்சனங்களில் தனிப்பட்ட முறையில் எனக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் இவர் சுட்டிக்காட்டும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு சரிசெய்ய முயல்வது அவசியமான ஒன்றாகும்.
உலகமயமாக்களாலும், நவ தாராளமய கொள்கைகளாலும் விளிம்புநிலை மக்களான தலித்துகள் எவ்வகை சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதை விளக்குவதும்,
இந்திய அரசின் பொருளாதார கொள்கை என்பது தலித்துகளை எந்த வகையில் எல்லாம் புறக்கணிக்கிறது என்பதையும், இதற்கு உலகயமாக்கள் எவ்வித வினையூக்கியாக செயல்பட்டுள்ளது என்பதையும் விரிவாக பேசுகிறது.
முகலாயர் படையெடுப்பின் சமயத்திலேயே தலித்துகள் பெரியளவில் அவர்களின் படையில் இடம்பெற்றிருந்தார்கள்.
ஆங்கிலேயர் வருகைக்கு பிறகு ஆங்கிலேயர் படைகளிலும் தலித்துகள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தார்கள்.
ஒரு காலகட்டத்திற்கு பிறகு பார்ப்பனர்களின் தலையீட்டால் ராணுவத்தில் தலித்துகளுக்கு அனுமதியில்லை என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
நிலவுடைமை அமைப்பில் இருந்ததை விட இஸ்லாமியர்களும் ஆங்கிலேயர்களும் தலித்துகளை சக மனிதர்களாக சுயமரியாதையோடு நடத்தியே வந்துள்ளார்கள்.
சாதி இந்துக்களிடமிருந்த மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறி மீதான வெறுப்பு தலித்துகளிடம் இல்லாத காரணத்தினால் ஆங்கிலேயர்கள் அவர்களை நெருக்கமானவர்களாக கருதினார்கள்.
தலித்துகளுக்கும் அரசு சட்டங்களுக்கும் இருக்கும் நெருக்கம் இதன் காரணமாக தொன்றுதொட்டு தொடர்கிறது.
எந்த ஒரு உரிமையும் அரசின் தலையீட்டோடு தான் அவர்களுக்கு கிடைத்து வந்துள்ளது.
அரசாங்கம் அவர்களின் உரிமையை பாதுகாக்கும் ஒரு அங்கமாக இருப்பதால் சாதாரணமாகவே தலித்துகள் அரசை சார்ந்திருக்கும் நிலையை அடைந்திருந்தார்கள்.
அரசியல் விழிப்புணர்வு அடைவதை மூலம் தலித் இயக்கங்களின் எழுச்சி ஏற்பட்டது. பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளோடு தொடக்கத்தில் இணைந்து பங்காற்றினாலும் பின்னாட்களில் தனியாக இயங்கினார்கள்.
தலித் இயக்கங்களின் கதாநாயனாக அம்பேத்கர் செயல்பட்டார். அரசியலமைப்பு சட்டத்திலும் விளிம்புநிலை மக்களுக்கான உரிமைகளுக்கு சட்ட பாதுகாப்பை வழங்கியதோடு அவர்களின் நலனில் அரசின் தலையீடு அவசியமான ஒன்றாகவே அவர் கருதி இருந்தார்.
மகாத்மா பூலே, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் முன்னெடுத்த அரசியல் இயக்கங்களின் பங்களிப்பையும் இந்நூல் பேசுகிறது.
நூலின் இறுதி பகுதியில் அம்பேத்கரின் சோசியலிச பார்வை பற்றி விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர்.
அம்பேத்கர் சோசியலிசத்தின் மீது விமர்சனம் கொண்டவராகவே இருந்தார். ஒரு ஜனநாயகவாதியான அம்பேத்கர் அரசு சார்வாதிகாரத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் இல்லாத சமத்துவம் என்பது பயனற்ற ஒன்று என்பதே அவரின் கொள்கையாக இருந்தது.
மார்க்ஸின் நோக்கமும் புத்தரின் நோக்கமும் ஒன்றே, அத்தகைய முடிவுகளை அடைய மார்க்ஸின் வழிமுறையை விட புத்தரின் வழிமுறை சிறந்த ஒன்றாக அம்பேத்கர் “Buddha or Karl Marx” என்கிற அவரது நூலில் வலியுறுத்தினார்.
தனது “States and Minorities” என்கிற புத்தகத்தில் அத்தியாவசிய துறைகள் எல்லாம் அரசு நிர்வகிப்பதே சிறந்தது என்றும், சந்தை பொருளாதாரத்தில் அரசின் தலையீடு குறிப்பிட்ட அளவில் இருக்கவேண்டும் என்பதை அவர் கூறி இருப்பார்.
நூலின் நடுப்பகுதி உலகமயமாக்கலின், நவ தாராள பொருளாதார கொள்கையின் மீதான விமர்சனங்களால் நிறைந்தது.
சந்தை பொருளாதாரத்தின் மீதான விமர்சனங்களில் நியாயம் இருந்தாலும் அனைத்து துறைகளையும் அரசு நிர்வகிக்க முடியுமா? பொருளாதாரத்தை அரசு கட்டுப்படுத்தும் போது சர்வாதிகார அரசே உருவாகும் என்பதை தான் சோசியலிசத்தின் நடைமுறை வெளிப்படுத்துகிறது.
அனைவருக்குமான திட்டமிடலை அரசு மேற்கொள்வது கடினம் / சாத்தியமற்றது.
மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் என்பது மக்களை அடிமைத்தனத்தை நோக்கி தான் இட்டுச்செல்லும், அதிகார பரவலாக்கத்தின் மூலமும் தனிநபர் திட்டமிடல் மூலமும் தான் அரசு அதிகாரம் ஒரு அளவில் கட்டுப்பாடுடன் இருக்க முடியும்.
அதே சமயம் மோனோபோலிகள்(Monopoly) ஏற்படாமல் பார்த்கொள்வதும் அரசின் கடமையாகும்.
90களுக்கு பிறகான சந்தை பொருளாதாரம் ஏற்படுத்தியுள்ள தீமைகள் ஒருபக்கம் இருந்தாலும் அதனால் விளைந்த நன்மைகள் அதிகம்.
சந்தை பொருளாதாரத்தில் அரசு எவ்வித தாக்கத்தை நிகழ்த்த முடியும் என்பதற்கு சமீபத்தில் வெளியான “The Dravidian Model” புத்தகம் ஒரு சிறந்த பார்வையை கொடுக்கும்.
ஆழமான கருத்துக்களை எளிய தமிழில் பொருள் புரியும்படி எழுதியுள்ளார். வாய்ப்பிருக்கும் அனைவரும் அவசியம் வாசித்து பயனடையவும்.
– நன்றி: முகநூல் பதிவு