சின்னி ஜெயந்த் சென்னை ராமகிருஷ்ண மிஷன் மாணவர்கள் இல்லத்தின் முன்னாள் மாணவர். ராயப்பேட்டை புதிக் கல்லூரியில் படிப்பை தொடர்ந்தவர், தரமணியில் உள்ள தமிழ்நாடு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் படிப்பை முடித்தார்.
1984 ல் இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ’கை கொடுக்கும் கை’ படத்தில் துணை வேடத்தில் அறிமுகம் ஆனார்.
இதையடுத்து கிழக்கு வாசல், இதயம், கண்ணெதிரே தோன்றினாள், சின்னப்புள்ள என ஏராளமான படங்களில் நடித்தார்.
இதில் மன நலம் குன்றியவராக சின்னி ஜெயந்த் நடித்திருந்த சின்ன புள்ள படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படம் அவரது அஷ்டலட்சுமி கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் ஆகும்.
தொடர்ந்து சில படங்களை தயாரித்தார். அதோடு, உனக்காக மட்டும், கானல் நீர், நீயே என் காதலி போன்ற படங்களை இயக்கி உள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் வலம் வரும் சின்னி ஜெயந்த் 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். திரையில் சின்னி ஜெயந்த் வந்தாலோ ரசிகர்களை சிரிக்க வைத்து விடுவார்.
வசனத்திற்கு ஏற்ப உடல் அசைவால் தன் நகைச்சுவைக்கு மேலும் உயிரூட்டி விடுவார் சின்னி ஜெயந்த். திரையில் கில்ஃபான்ஸ், சில்ஃபான்ஸ் போன்ற புதிய வார்த்தை பிரயோகத்தால் இளைஞர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
இவர் தமிழக அரசின் கலை மாமணி விருதினை 2009ல் பெற்றார். மேலும் பல குரல் ஆராய்ச்சி செய்து வருவதற்காக டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
சின்னி ஜெயந்திற்கு ஜெய ஸ்ரீ என்ற மனைவியும், சித்தார்த் ஜெய், ஸ்ருதன் ஜெய் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
பொதுவாக திரைத்துறை பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துவர் என்ற சூழல் உள்ள நிலையில் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெயந்த் படிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
அதை சின்னி ஜெயந்த் ஊக்குவித்த நிலையில் 2019ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி இந்திய அளவில் 75 -வது ரேங்கில் தேர்ச்சி பெற்றார்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட பயிற்சி ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி தன் மகன்களின் ஆசையை ஊக்குவித்த சின்னி ஜெயந்த் நடிகராக மட்டும் அல்ல தந்தையாகவும் ஜெயித்துக் காட்டினார்.