எனக்கு ஆங்கிலம் தெரியாது!

அரசுப் பள்ளி அனுபவங்கள்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் என்பதும் இன்றும்கூட எட்டாக் கனியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கணக்குப் பாட ஆசிரியரான உமாமகேஸ்வரி, தான் ஆங்கிலம் கற்பித்த அனுபவத்தை சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்.

எனக்கு ஆங்கிலம் எப்படிக் கற்றுக்கொடுப்பது என்பது தெரியாது. ஏதோ எனக்குத் தெரிந்த முறையில் சொல்லிக் கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் வகுப்பிற்குள் நுழைகிறேன்.

ஏழாம் வகுப்பு ஆங்கில வழி மாணவர்கள் 59 பேரை என்னை நம்பி ஆங்கில ஆசிரியராகப் பாடம் எடுக்கும் பொறுப்பைத் தந்துள்ளார்கள்.

முதல் நாளில் சுய அறிமுகம் செய்து கொண்டோம். அதன் பொருட்டு அவர்களிடம் இரண்டு வினாக்கள் முன்வைக்கப்பட்டன.

What is your name?
Where are you coming from?

உங்களால் நம்பவே முடியாது. 15 பேருக்கு மேல் இரண்டாவது வினாவிற்கு பதில் கூற முடியவில்லை. ஓரிருவரைத் தவிர யாராலும் இந்த இரண்டு வினாக்களுக்கு SPELLING எழுத முடியவில்லை. வீட்டுப் பாடமே இதுதான் கொடுத்தேன்.

My Name is _______
I am coming from ______

இரண்டையும் ஐந்து முறை எழுதிவாருங்கள் என்று. அதில் பத்து மாணவர்கள் கூட எழுதி வரவில்லை என்பது வேறு கதை.

இதுதான் இன்றைய சூழலில் தமிழகக் கல்வியின் ஆங்கில வழி வகுப்புகளின் சாதனை. கிராமங்களில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் இதுதான் நிலை. விதிவிலக்குகள் இருக்கலாம்…

மிக சொற்பமான எண்ணிக்கையில் மட்டும். இங்கே யாரையுமே குற்றம் சுமத்த முடியாது. ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். சிலபஸ் முடிக்கிறார்கள். ஆனால் அந்தப் புத்தகத்தில் உள்ள பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளின் பொருளை குழந்தைகள் அறிந்திருக்கவில்லைவில்லை.

என்னைப்போல் (அல்லது எனக்கு) ஆசிரியர்களுக்கே தெரியவில்லை. அல்லது எனக்குத் தெரியவில்லை. துறை ரீதியாக யோசித்தால் எனக்குத் தெரிந்து இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஏனெனில் நான் கணக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர். ஆகவே ஆங்கில மொழியறிவு அவசியம் என்பதைக் கடந்து ஆங்கில மொழியைக் கற்றுத்தரும் பாண்டித்தியம் அவசியம் என்பதில்லை.

பிரச்சனை அதுவல்ல. ஏழாம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் ஏன் அத்தனை புதிய புதிய சொற்கள் எனத் தெரியவில்லை.

குழந்தைகள் முதலில் வகுப்பில் அமர்ந்து கவனிக்கும் மனநிலையில் இல்லை. இதை நான் குரோம்பேட்டை பள்ளியிலும் கவனித்துள்ளேன்.

ஆனால் சதவிகிதம் குறைவு. அதே பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகள் கிராமங்களிலிருந்து வருபவர்களுக்கு ஆங்கிலம் ஒரு பிரச்சினையாகவே இருக்கும்.

தற்போது நான் பணியாற்றும் பள்ளியில் ஆங்கில வழியில் 6,7,8 வகுப்புகளில் அறுபது மாணவர்கள் எட்டாம் வகுப்பிலும், 59 மாணவர்கள் ஏழாம் வகுப்பிலும் இருக்கின்றனர்.

ஆறாம் வகுப்பில் அறுபதைத் தாண்டி இருக்கின்றனர். அரசின் கொள்கை விதிப்படி 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது. ஆனால் அறுபது மாணவர்களை பட்டியில் அடைப்பது போன்று தான் கற்பிக்க வேண்டிய உள்ளது.

ஆனால் தமிழ் வழி வகுப்புகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாகவே இருக்கின்றனர். அரசு இது போன்ற பிரச்சனைகளை நுணுக்கமாக கவனித்தால் அனைவருக்கும் கல்வி என்பது சாத்தியப்படும்.

சரி இப்போது மையப் பிரச்சனைக்கு வருவோம். ஒவ்வொரு பள்ளியிலும் ஆங்கில வழிக் கல்வியை நாடும் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம் ஒரு மொழியாக அவசியம் ஆனால் ஆங்கில வழி அவசியம் இல்லை என்று உணர வேண்டும்.

அதை விடுத்து ஆங்கில வழிக் கல்வியை நாடியதாலும் குழந்தைகள் ஒன்றும் அறியாமல் அவர்களது தாய்மொழியையும் பயன்படுத்தாமல் மற்றவர் பார்வையில் முட்டாள்களாக சித்தரிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் அறிவார்களா என்று தெரியவில்லை.

கல்வித்துறையாவது இந்த உண்மையை ஒப்புக் கொள்ளுமா? அல்லது ஆசிரியர்களாவது நேர்மையாக ஏற்றுக்கொள்வார்களா?

ஆங்கிலத்தில் Dictionary usage என்பது மிக முக்கியமானது. எந்தக் குழந்தையும் அது பற்றி (ஓரிருவரைத் தவிர) அறிந்திருக்கவில்லை. இது மொத்தத் தமிழ்நாட்டுக்கும் பொருந்தும்.

இந்த சூழலில் குழந்தைகளைத் தீராத துன்பத்துக்கு ஆளாக்கும் பாடநூல்களைத் தடை செய்தாலும் தவறில்லை.

பொதுவாக நோட்ஸ் பார்த்து எழுதும் வழக்கமே பெரும்பாலான இடங்களில் நடக்கிறது. நாங்கள் அப்படியல்ல என்று கூறும் ஆசிரியர்களுக்கு அன்பு… ஆனால் நீங்கள் எண்ணிக்கையில் வெகு சொற்பமே.

முதல் பருவத்தில் ஒரு பாடத்தை முழுமையாகக் கற்பித்து மாணவர்கள் அறிந்து புரிந்து சிந்தித்து வெளிப்படுத்த இயலும் என்றால் அது இமாலய சாதனை தான்.

இப்படிப்பட்ட சூழலில் நான் மாணவர்களிடம் எதற்காக English medium சேர்ந்தீர்கள் என்று கேட்க, பலரின் பதில் இங்கிலீஷ் ல பேசணுங்க மிஸ்.

பாவம் குழந்தைகள்…. இரண்டு வரி ஆங்கில உரையாடலை எதிர்பார்த்து ஆங்கில வழிக் கல்வியைக் கற்க அமர்ந்துள்ளனர். சரி…அவ்வளவுதானே…இனிமேல் நமது வகுப்பில் இங்கிலீஷ்ல மட்டும் தான் பேச வேண்டும் என மனமொத்த முடிவு எடுத்தோம்.

சில அடிப்படை வாக்கியங்களைப் பேச வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறேன். அதற்கான பரிசாக சில நாட்களில் ….

மிஸ்… திஸ் பாய் லெட்டர் யூ…என்று ஒரு மாணவி கையில் திணிக்க பிரித்துப் படித்தால்….

குழந்தைகள் தான் எவ்வளவு அழகான தருணங்களைப் பரிசளித்துவிடுகின்றனர்.

My name is G.K.Rithish. I am studying 7th std.
My mam name is.:..My mam is very intelligent and smart.I like my English miss very much.
ஆனாலும் சொல்கிறேன்… எனக்கு ஆங்கிலம் தெரியாது.

Comments (0)
Add Comment