விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினர்களாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை ந.அருள், வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் நாஞ்சில் பீட்டர், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது விஜிபி தமிழ்ச் சங்கத் நிறுவனத் தலைவர் வி.ஜி.சந்தோஷம் அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி நினைவுப் பரிசுகளும் செங்கோலும் வழங்கப்பட்டன.
விழாவில் இலக்கியப் பணியாற்றியதற்காக பல்வேறு கலைஞர்களுக்கு இலக்கிய நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. அதில் சிறப்பான கல்விப் பணி ஆற்றி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் வழக்கறிஞர், முனைவர் குமார் ராஜேந்திரனுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதேபோல், வாழ்நாள் சாதனையாளருக்கான விருது சமூக செயற்பாட்டாளர் ‘பாலம்’ கல்யாண சுந்தரம் அவர்களுக்கும், கலைத்துறையில் சேவையாற்றியதற்காக நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன் உள்ளிட்டோருக்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட ஆளுமைகள், தற்போதைய கால கட்டத்தில் இன்றைய தலைமுறையினருக்குத் தேவையான கல்வி பற்றியும் கல்வியினால் அடையும் முன்னேற்றத்தைப் பற்றியும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் வி.ஜி.பி. சந்தோஷம் அவர்களின் பணியை போற்றும் வகையில், விஜிபி ஆண்டு மலர் உள்ளிட்ட பல்வேறு நூல்களும் வெளியிடப்பட்டன. ராஜா தாஸ் எழுதிய ‘என் தந்தையாரின் அறிவுச் சிந்தனைகள்’ என்ற நூலை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெளியிட வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார்.