இயற்கையை ரசிக்கப் பயணிப்போம்!

– கேரளா தென்மலை

இயற்கை ஆர்வலர்களுக்கும், சிறுவர்களுக்கும், சாகசங்களை விரும்புவர்களுக்கும் சொர்க்கமாக, திகழ்ந்து வருகிறது கேரள மாநிலத்தின் தென்மலா(லை). 

தேன் கூடுகள் நிறைந்த மலை என்பதால் தேன்மலை என்ற பெயர் தாங்கி நாளடைவில் தென்மலையாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது இந்த அழகிய மலைத் தொடர்ச்சி.

செங்கோட்டைக்கு 28 கி.மீ. தொலைவில் பரவசத்துக்கும், பசுமைக்கும் பஞ்சமில்லாத சுற்றுலாத் தலமாக மிளிர்ந்து வருகிறது தென்மலை.

அட்வென்சர் ஸோன்

கயிறுகளில் நடப்பது, ஆற்றின் குறுக்கே மேல்பகுதியில் கட்டப்பட்டுள்ள இரும்பு கம்பியில் ரோப் கார் போல் உடலில் பாதுகாப்பு வளையங்களைப் போட்டு செல்வது, பல மீட்டர் தூரம் மரங்களுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள தகடுகளால் உருவாக்கப்பட்ட பாலங்களில் நடப்பது.

சுழலும் நாற்காலிகளில் அமர்ந்து விளையாடுவது உள்ளிட்ட 13 வகையான விளையாட்டுகள் இதில் உள்ளன. மேலும், இங்குள்ள ஆற்றில் பெடல் செய்தும் பயணிக்கக் கூடிய சிறிய வகை படகுகளும் உள்ளன. 

மரங்களை இணைத்து அமைக்கப்பட்ட இரும்பு பாலத்தின் வழியாக நடந்து சென்றால் பழைய செங்கோட்டை – திருவனந்தபுரம் சாலைக்கு செல்ல முடியும். த்ரிலான பயணமாக இது இருக்கும். இந்த அட்வென்ஜர் ஸோனுக்கான கட்டணம் ரூ.260.

லீஸர் ஸோன்

இந்த பகுதியில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சுமார் 100 மீட்டர் நீளமுள்ள தொங்கு பாலத்திலிருந்து ஆற்றை ரசிக்கும் அழகே அலாதிதான். ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. (கட்டணம் பெரியவர்களுக்கு – ரூ.65. சிறுவர்களுக்கு – ரூ.55, பள்ளி மாணவர்களுக்கு (பள்ளி மூலம்) – ரூ. 45) 

கல்ச்சர் ஸோன்‘

இங்குள்ள சில்ரன் பார்க்கில் பலவிதமான விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. பட்டர்பிளை சவாரியும் இங்கு அமைந்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 160 வகைக்கும்  மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகளை இங்கு காண முடியும்.

டீப் உட் ஸோன்

இந்த ஸோனில் மான்கள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. காலை 9 முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

இங்கு புள்ளிமான்களும், சாம்பர் வகை மான்களும் காணப்படுகின்றன.

இங்கு படகு சவாரியும் உள்ளது. இந்த ஸோனுக்கு கட்டணமாக ரூ.270 வசூலிக்கப்படுகிறது. படகு சவாரி தேவையில்லை எனில் ரூ.80 கட்டணம் பெறப்படுகிறது.

பாலருவி பயணம்

செந்தூரணி எக்கோ டூரிசம் சார்பில் பாலருவி, 13 கண் பாலம், செந்தூரணி விலங்குகள் சரணாலயத்திற்குள் 600 மீட்டர் சாப்ட் ரைடு, சதுப்பு நிலக் காடுகளில் பயணிப்பது உள்ளிட்ட 6 இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல பேருந்து வசதி உண்டு. இதற்கான கட்டண விபரம்.

இந்தியர்கள் – ரூ. 400, 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ரூ.250, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது.

வெளிநாட்டினருக்கு ரூ. 500 கட்டணம் நிர்வயிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஸோன்களிலும் உள்ளவற்றை பார்வையிட்டு ரசிக்க பேக்கேஜ் கட்டணமாக ரூ. 770 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உணவு ஏற்பாடுகளையும் சுற்றுலர்த் துறையே செய்து கொடுக்கும்.

– சொக்கம்பட்டி வி. குமாரமுருகன்.

– நன்றி தினமணி தீபாவளி மலர் 2018.

Comments (0)
Add Comment