வேண்டுதலை நிறைவேற்றும் வெயிலாச்சி அம்மன்!

பச்சை வெல்வெட் விரித்த மாதிரி வயல். அதன் நடுவில் கரட்டுமேடு.

மேட்டில் அடர்ந்திருக்கிற ஆலமரங்கள்; அத்திமரங்கள். கரட்டில் ஏறினால் சின்னதாக வெயிலாச்சி அம்மன் கோவில்.

பல தலைமுறைகளாக இங்கிருக்கிற வெயிலாச்சி அம்மன், ஆதி திராவிட மக்களின் குலதெய்வம். ஊரை விட்டு ஒதுங்கியிருக்கிற இந்தக் கோவிலுக்குப் போகப் பாதை எதுவும் கிடையாது.

வயல்வெளிக்கிடையில் இருக்கும் மிகக் குறுகலான வரப்பு மேட்டில்தான் நடந்து போக வேண்டியிருக்கிறது. வெயிலாச்சி அம்மனின் பெயரே பலவற்றைக் கிளறி நினைவுபடுத்துகிறது.

வெயில், வறட்சியை வெளிப்படுத்துகிற ஒரு விதமான உக்கிரம். இது அதிகரிக்கும்போது கிராமத்து வயல்களும் நீரில்லாமல் வறண்டு போகும். விவசாயமிருக்காது.

அதில்லாதபோது, அதை நம்பியிருக்கிற கூலி விவசாயிகளுக்கு வருமானமிருக்காது.

வேறு வழியில்லாமல் பிள்ளை குட்டிகளுடன் பிழைப்பு தேடி வேறு பகுதிகளுக்குப் பஞ்சம் பிழைக்கப் போக வேண்டியதிருக்கும்.

இந்த விதமான சங்கடங்களையெல்லாம் ஒரு விதத்தில் ஏற்படுத்தும் வெயிலையே அம்மனாக வழிபட்டால், அதன் சூடு தணியும் என்கிற கிராமப்புறத்து மக்களின் நம்பிக்கையின் திடவடிவம் – வெயிலாச்சி அம்மன்.

இது தவிர, சூடு அதிகரித்து வெப்பம் சம்பந்தமான நோய்கள் பரவியதும் வழிபாட்டுணர்வுக்கு ஒரு முக்கியமான காரணம்.

“அதிகமான மழை பெய்து வெள்ளம் வந்தால்கூட ஏதோ ஒரு விதத்தில் சமாளித்துவிட முடியும்.

ஆனால் வெயில் கடுமையாக, வறட்சி அதிகமானால், நிலம் வைத்திருப்பவர்கள் தங்களிடமிருக்கும் சேமிப்பை வைத்து வாழ்ந்துவிட முடியும். 

விவசாயத்தை நம்பி வாழும் கூலிகள் என்ன செய்ய முடியும்? அதனால்தான் எங்களைப் போன்ற கிராமத்து ஏழைகளின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட வெயிலை அம்மனாக்கி வழிபடுகிறோம்.

அதனால்தான் விவசாய நிலத்திற்குள்ளேயே வெயிலாச்சி அம்மனை உருவாக்கியிருக்கிறோம். 

முன்பு கரட்டுமேட்டில் திறந்த வெளியில்தான் ரொம்ப காலமாக இருந்தது வெயிலாச்சி அம்மன். இப்போது சின்னதாக மேற்கூரை அமைந்திருக்கிறோம்” என்கிறார்கள் நொச்சிகுளத்து ஆதிதிராவிட மக்கள்.

அம்மை போட்டால் மாரியம்மனுக்கு நேர்ந்துகொள்வது போல, கிராம வாழ்வைத் தீர்மானிக்கும் மழைக்கு எதிர்மறையான வெயிலையே தெய்வமாக்கிக் குடம்பிடுகிற மக்களின் நம்பிக்கையில் ஒரு விதமான ஈரமிருக்கிறது.

கரட்டுமேட்டின் ஒரு புறத்தில் முண்டன், சுடலைசாமிகள் பீடங்களாக நிற்கிறார்கள். இன்னொரு புறம் காளியம்மன்.

உள்ளே மஞ்சள், காவி வர்ணச் சுவர்களுக்கு இடையில் மஞ்சள் துணி சுற்றியபடி சிறு உருவமாக வெயிலாச்சி அம்மன்.

முழுக்க ஆதிதிராவிடர்கள் உருவாக்கிய குலதெய்வமாக இருந்தாலும், சிலை இருக்கும் கர்ப்பக் கிருகத்திற்குள் அவர்கள் நுழைவதில்லை. கிராமத்திலிருக்கும் பண்டாரம் சமூகத்தினர்தான் பூஜை செய்கிறார்கள்.

வெயிலாச்சி அம்மனுக்காக நேர்ந்துகொண்டு, ஊர் மக்கள் தீச்சட்டி எடுக்கிறார்கள். வயல்வெளியில் பொங்கல் வைக்கிறார்கள்.

ஆயிரம்கண் பாளையை மாவிளக்குடன் கொண்டுவருகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் அம்மனுக்காக விளக்கேற்றி கோவிலுக்கு எடுத்து வருகிறார்கள்.

வருஷத்துக்கொரு முறை கார்த்திகை மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை, அம்மனுக்கு கொடைத் திருவிழா. அன்று ஒரு நாள் வயல்வெளியில் பந்தல்கள் உருவாகி, அந்தப் பகுதியே அமர்க்களப்படுகிறது. பால்குடம் எடுத்து வருகிறார்கள்.

ஊர் மக்கள் சார்பில், ஒவ்வொரு வருஷமும் ஒரு கிடாவைத் தேர்ந்தெடுத்து கோவிலுக்கு நேர்ந்துவிட்டுவிடுகிறார்கள். கொடை அன்றைக்கு பைரவசாமிக்கு முன்னால் இருக்கும் பீடத்தில் நிறுத்தி, அதைப் பலிகொடுக்கிறார்கள்.

அன்று சாதி வேறுபாடுகளையெல்லாம் மீறி, எல்லா சமூகத்தினரும் வந்து வழிபடுகிறார்கள். சுற்றியுள்ள கிராமங்களிலிந்து ஆதிதிராவிட மக்கள் பலர் வண்டி கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

அந்த ஒரு நாள் திருவிழா பலரை ஒன்று படுத்துகிறது. அவர்களை இணைப்பது வெயிலாச்சி அம்மன் அதன் பேரில் அவர்கள் வைத்திருக்கிற நம்பிக்கை.

“இவ்வளவு தூரம் நாங்கள் வழிபடுகிற சாமி கோவிலுக்குப் போய்வர ஒரு பாதைகூட ஒழுங்காக இல்லையே…” இரங்கலான குரலில் கைகூப்பியபடி சொல்கிறார்கள் அந்தக் கிராமத்து மக்கள்.

நகரவாசிகள் ஏதோ ஒரு விதத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிவிட முடியும்; கிராமத்தவர்கள் அதே வெயிலை எதிர்கொள்ளும் விதம் வேறு.

சொந்தக் கிராமங்களிலிருந்தே அவர்களை அப்புறப்படுத்துகிற அளவுக்கு வலிமையான வெயிலையே சக்திமிக்க அம்மனாக்கி அவர்கள் வணங்குவதில் வியப்பில்லை.

உறுத்துகிற இயற்கையிலிருந்து நகரவாசிகள் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

கிராமவாசிகள் ஒதுங்காமல் அதையே வழிபடுகிறார்கள்.

– மணா.

‘தமிழ் மண்ணின் சாமிகள்’ என்ற நூலிலிருந்து ஒரு கட்டுரை.

Comments (0)
Add Comment