இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த மனிதர் எம்.ஜி.ஆர்.!

1967ஆம் ஆண்டு அண்ணா முதலமைச்சர் ஆனபோது, தமிழர்கள் அனைவரும் பெரும் உற்சாகம் அடைந்தனர். ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனும் அரசன் தான் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கிடைத்ததாக உணர்ந்தனர்.

புத்திசாலித்தனமான வார்த்தை விளையாட்டும் சினிமா கவர்ச்சியும்தான் சாதாரண மனிதர்களைச் சென்றடையும் என்று அறிந்திருந்தார் அண்ணா.

அவரது வார்த்தைகளுக்கு மகிமை சேர்த்து சிகரம் தொட்டார் எம்ஜிஆர். அதனால்தான், “எம்ஜிஆர் உயர்ந்த ரத்தினம், திராவிட இயக்கத்துக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு” என்று அண்ணா கூறினார்.

பல ஆண்டுகளாகத் தனது திரைப்படங்கள், பாடல்கள், நாயக பிம்பம் மூலமாகத் தமிழ் மக்களை வசியப்படுத்திய எம்ஜிஆரால் அந்த தேர்தலில் திமுக பெருவெற்றி பெற்றது.

ஒருநாள் இரவில் இப்படியொரு பிரபல்யத்தை எம்ஜிஆர் சம்பாதிக்கவில்லை. நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கான அவரது பாதை கடினமானதாக இருந்தது. பல்வேறு சோதனைகளையும் இன்னல்களையும் கடக்க வேண்டியிருந்தது.

அதனால்தானோ என்னவோ, அவரது இதயத்தில் ஏழை மக்கள் நலன்கள் பற்றிய அக்கறை அதிகமாக இருந்தது. அவர்களது தேவைகள் அறிந்து அவர் செய்த பொருளாதார உதவிகள் காலத்தால் அழியாதது.

மனிதர்கள் துன்பமுறும்போது கண்டுகொள்ளாமல் இருப்பது மனிதத் தன்மையற்றது என்று நினைத்த எம்ஜிஆர் நேசத்தின் மறுவடிவமாக விளங்கினார்.

அறுபதுகளின் மத்தியில் தமிழ்நாடு பல்வேறு புயல் மற்றும் அதிக பருவமழையின் காரணமாகச் சேதங்களைச் சந்தித்தது.

குறிப்பாக, நகரங்களில் வீடில்லாத ஏழைகள் பெரும் அழிவைச் சந்தித்தனர்.

அந்த நேரத்தில் அவர்களுக்கு உறைவிடம், உணவு, உடை மற்றும் ரெயின்கோட் போன்றவற்றை அளித்தார் எம்ஜிஆர்.

கை ரிக்‌ஷா இழுத்தவர்களுக்கு சைக்கிள் ரிக்‌ஷா வாங்கித் தந்தார். இதை மையமாகக் கொண்டு அவர் நடித்த ‘ரிக்‌ஷாகாரன்’ திரைப்படம் பெருவெற்றி பெற்றது.

ஏழ்மையில் இருந்து விடுதலை அடைவதன் சின்னமாகிப்போனது சைக்கிள் ரிக்‌ஷா; அந்த மாற்றத்தை ஒரு சினிமா நட்சத்திரமாக இருந்துகொண்டு சாதித்தவர் எம்ஜிஆர்.

கம்யூனிஸ்ட் கட்சி பல ஆண்டுகளாக ஆண்ட மேற்குவங்கத்தில் கூட ரிக்‌ஷா இழுப்பவர்களின் வாழ்வு மாற்றமடையவில்லை.

இன்றும் கூட, உடலை வருத்தி கையால் ரிக்‌ஷா இழுக்கும் மனிதமற்ற கொடுமை அங்கு தொடர்ந்து வருகிறது.

1969இல் எதிர்பாராதவிதமாக அண்ணா உடல்நலம் குன்றி மரணமடைந்தார். அவர் காட்டிய பாதையில் இருந்து தலைமையும் விலகியது.

1937 முதல் பின்பற்றப்பட்டு வந்த மது விலக்கு மற்றும் மிதப்படுத்தும் கொள்கைகள் புதைக்கப்பட்டன. நூறு வயதை எட்டியிருந்த மூதறிஞர் ராஜாஜி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் தன்னடக்கமற்ற ஒரு சுழலுக்குள் சமூகம் சிக்கியது. சாராயம், கள்ளு ஆகியன சர்வசாதாரணமாகக் கடைகளில் விற்கப்பட்டன.

மாலை நேரங்களில் மதுக்கடைகளில் ஆடலரசிகளின் நடனமாடினர். ரவுடித்தனம் பரவலாகிப் போக, லஞ்சம் படுபாதாளம் வரை சென்றது.

இந்த நேரத்தில்தான், கட்சியின் நிதி விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டுமென்று எதிர்ப்புக்குரல் கொடுத்தார் எம்ஜிஆர்.

அதன்பிறகு அவர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதும், அண்ணாவின் கொள்கைகளையொட்டி கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்ததும் வரலாறு.

1977ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆனதும், முதலில் மது ஒழிப்புக்கான கோப்பில் கையெழுத்திட்டார் எம்ஜிஆர்.

காமராஜருக்குப் பிறகு எம்ஜிஆர் அரசுப்பள்ளிகளில் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டம் பள்ளிக் கல்வி ஊக்கம் பெற வழி வகுத்தது.

சிறுவயதில் வறுமையையும் பசியையும் சந்தித்த அனுபவம், அந்த கொடுமைகளை இளைய தலைமுறை பெறக்கூடாது என்ற திட்டத்தை முன்னெடுக்க வைத்தது.

இந்த ஒரு திட்டம்தான் ஏழைப்பெண்களின் மனதுக்குப் பிடித்த தலைவராக எம்ஜிஆரை மாற்றியது.

எம்ஜிஆர் கொண்டு வந்தவற்றில் மூன்று சீர்திருத்தங்கள் பெரும் மாற்றத்தை உண்டுபண்ணின. பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான உயர் கல்வியில் தனியாரின் பங்களிப்புக்கு அவர் அனுமதியளித்தார்.

1990களில் தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம் போன்றவை அமல்படுத்தப்பட்டபோது, இந்த ஒரு மாற்றம் என்னவொரு விளைவை ஏற்படுத்தப்போகிறது என்று அப்போது எவரும் அறியவில்லை.

இதனால் உயர் கல்வியில் தமிழகத்தின் மொத்தச் சேர்க்கை விகிதம் 47 சதவிகிதம் என்றானது. சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தேசிய சராசரியே 24 சதவிகிதம் என்ற அளவில்தான் இருந்து வருகிறது.

விஜயராகவன், முராரி, திரவியம், லட்சுமிநாராயணன், பரமகுரு, செந்தாமரை, மோகன்தாஸ் போன்ற உன்னதமான காவல் அதிகாரிகளைக் கொண்டு நிர்வாகத்தை இரும்புத்தனம் மிக்கதாக மாற்றினார் எம்ஜிஆர்.

தான் நடித்த முதல்படமான சதிலீலாவதியில் அவர் போலீஸ் வேடம் ஏற்றிருந்தார். பின்னாட்களில் ரகசிய போலீஸ் 115 உட்படப் பல்வேறு படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

திமுக ஆட்சியின்போது இருந்த நிலையை மாற்றி, காவல் துறையில் அரசியல் தலையீடு இல்லாமலிருக்கும் வகையில் அரண் அமைத்தார்.

காவல் துறையை நவீனமாக்குவதற்கான அடித்தளம் அமைத்ததுடன், சட்டம் ஒழுங்கை காக்க காவல் துறைக்குச் சுதந்திரம் அளித்தார்.

1983 காலகட்டத்தில் இலங்கையில் ஈழ விடுதலையை முன்னிறுத்திப் போராடிய எல்டிடிஇ, டெலோ, ஈபிஆர்எல்எஃப், பிளாட் உள்ளிட்ட பல்வேறு போராளிக் குழுக்கள் தமிழ்நாட்டுக்கு அறிமுகமானதில் எம்ஜிஆருக்கு முக்கியப் பங்குண்டு.

தமிழகப் போராளிக் குழுக்களை குறிப்பாக எல்டிடிஇ அமைப்பை எந்த அளவுக்கு எம்ஜிஆர் விரும்பினார் என்பது குறித்து, ’எம்ஜிஆர் தி மேன் அண்ட் மித்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் காவல் துறை அதிகாரி மோகன்தாஸ்.

“இந்த போராளிக் குழுக்கள் பற்றியும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி குறித்தும் நான் (மோகன்தாஸ்) எம்ஜிஆருக்கு தகவல் அளித்து வந்தேன்.

ஒருகட்டத்தில், இந்தக் குழுக்களை நேரில் சந்திக்க விரும்பினார் எம்ஜிஆர். குறிப்பாக எல்டிடிஇ அமைப்பினரைப் பார்க்க நினைத்தார்.

அவரது வீட்டிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்தது. பொதுவான விஷயங்கள் பற்றி அவர்களிடம் உரையாடினார் எம்ஜிஆர்.

ஒவ்வொரு குழுவில் இருந்தும் 3 முதல் 4 பேர் வந்திருந்தனர். வடக்கு, வடகிழக்கு இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் மேற்கொண்ட அத்துமீறல்கள் குறித்து அவர்கள் எடுத்துரைத்தனர்.

அனைவரது கருத்துகளையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார் எம்ஜிஆர். எல்டிடிஇ தலைவர் பிரபாகரனுடன் அவருக்கு உடனடியாக இணக்கம் உருவானது வெளிப்படையாகத் தெரிந்தது.

அவரிடமிருந்த வினோதமான நுண்ணறிவினால் மற்ற குழுவினருக்கும் எல்டிடிஇ அமைப்பினருக்குமான வித்தியாசத்தை எளிதாகக் கண்டுகொண்டார்.

இதன் விளைவு என்னவென்று எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியும்.

அதற்கடுத்த ஆண்டுகளில் பல்வேறு நிலைகளில் அரசின் சார்பாகவும் தன் சார்பாகவும் அவ்வமைப்புக்கு நிதியுதவிகள் செய்தார் எம்ஜிஆர்” என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் மோகன்தாஸ்.

கவர்ந்திருக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆளுமையின் கீழ் எல்டிடிஇ அமைப்பு சிறப்பான நோக்கங்களுடன் சரிவரத் திட்டமிட்டுச் செயல்பட்டதாகக் கருதினார் எம்ஜிஆர்.

அதே நேரத்தில், திமுகவின் மறைமுக ஆதரவைப் பெற்றது டெலோ.

“மத்திய அரசின் உளவு நிறுவனங்கள் டெலோவை தங்கள் கைப்பாவையாக ஆக்கிக்கொண்டது முதல் தவறு. ஏனென்றால், கொலைகாரர்களாகவும் குற்றவாளிகளாகவும் இருந்தவர்கள் அதில் இருந்தனர். அதற்கென்று அடிப்படையான கொள்கைகள் ஏதும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார் மோகன்தாஸ்.

இந்திய அரசின் சார்பாக பெங்களூரில் தமிழ் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

அதற்கு முன்னதாகவே, நுண்ணறிவுத் துறை அதிகாரி மோகன் தாஸ், அவருக்கு உதவியாக இருந்த காவல் துறை அதிகாரி அலெக்சாண்டர் இருவரையும் கொண்டு ஆயுதங்களைக் கைவிடும் முடிவை அக்குழுக்கள் மேற்கொள்ள வழி செய்தார்.

ஒருவேளை எம்ஜிஆர் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இலங்கையின் வரலாறு வேறுவிதமாக மாறியிருக்கும்.

இடதுசாரிக் கொள்கைகளால் கவரப்பட்டவர் எம்ஜிஆர். அதனால்தான் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜீவானந்தத்துக்குச் சிலை வைக்க விரும்பியபோது அதற்கு உடனடியாகச் சம்மதம் தெரிவித்தார்.

தன் படங்களில் அரசியல் சார்ந்த பாடல்கள் பல தந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு நன்றி தெரிவித்தார்.

“எனது முதலமைச்சர் நாற்காலியின் மூன்று கால்கள் என்னவென்று தெரியாது. ஆனால், கண்டிப்பாக நான்காவது கால் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்துக்குச் சொந்தமானது” என்று எம்ஜிஆர் சொன்னது அமரத்துவம் வாய்ந்தது.

கலைகளின் புரவலராக இருந்த எம்ஜிஆருக்கு அவற்றில் ஆழ்ந்த அறிவும் இருந்தது. குறிப்பாக கர்நாடக சங்கீதம் அவருக்கும் மிகவும் விருப்பமானது.

ஒருமுறை நடனப்பள்ளி தொடங்குவதற்காக குச்சிப்புடி குரு வேம்பட்டி சின்ன சத்யம் அவரை அணுகினார்.

அவரது பள்ளிக்கு நிலம் ஒதுக்கித் தந்த எம்ஜிஆர், அவரால் அரசுக்குப் பாக்கித்தொகை செலுத்த முடியாது என்றறிந்து அதனைத் தானே அளித்தார்.

இது போன்று பல்வேறு சம்பவங்கள் இருக்கின்றன.

பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்கும் அரசின் கீழ்மட்ட ஊழியர்களுக்கும் அவர் விருதுகள் அளித்தார்.

1984ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றபோது, எம்ஜிஆர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருப்பதால் எளிதாக வெற்றி பெறலாம் என்று திமுக நினைத்தது.

ஆனால் அந்த தேர்தலின்போது கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளராக இருந்த செல்வி ஜெயலலிதா சுற்றிச் சுழன்று புயலாகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

“உண்மையில் அது உன்னதமான வெற்றி. அமெரிக்காவில் இருந்தாலும், அவரது இருப்பு இல்லாத நிலையில் வெற்றியைச் சுவைத்தது இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஈடிணையில்லாதது” என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் மோகன்தாஸ்.

ஜூலியஸ் சீசருக்கு ஷேக்ஸ்பியர் அர்ப்பணித்த வார்த்தைகள் அப்படியே எம்ஜிஆருக்கும் பொருந்தும்.

“அவரது வாழ்க்கை கனிவானது; அவருக்குள் பல்வேறு விஷயங்கள் கலந்திருக்கின்றன. அதுவே, இவன் தான் மனிதன் என்று ஒட்டுமொத்த உலகத்துக்கும் சொல்லும்!”

உண்மையாகவே எம்ஜிஆர் இந்த நூற்றாண்டின் மனிதர், கண்டிப்பாக அவர் ஆயிரத்தில் ஒருவன் தான்.

****

– ஆர். நடராஜன், முன்னாள் டிஜிபி மற்றும் முன்னாள் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர்.

-2018ஆம் ஆண்டில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாக கட்டுரை. தமிழில் பா.உதய் பாடகலிங்கம்.

Comments (0)
Add Comment