இன்று நீங்கள் செய்ய இயலாததை நாளை உங்களால் நிச்சயம் செய்யமுடியும். விடா முயற்சியை மேற்கொள்ளுங்கள், வெற்றியை எய்துவீர்கள்!
உனக்கு மனஅமைதி வேண்டுமானால் உலகத்தவர்மீது குறை கூறாதீர்கள். உன்னிடத்திலுள்ள குறைகளைக் கிளறிப் பாருங்கள்!
மொத்த உலகையும் உங்கள் சொந்தமாக்கிக் கொள்ளப் பழகுங்கள். எவருமே அந்நியர் அல்ல. இந்த மொத்த உலகமும் உங்கள் சொந்தம்!
மனோ தைரியத்தை இழக்காமல் பிரார்த்தனை செய்துகொண்டே இருங்கள். யாவும் உரிய காலத்தில் நடைபெறும்.
சாதனைக்கேற்ற காலம் இளமைப் பருவம்.
ஜபம் மனத்தை ஸ்திரப்படுத்துவதுடன் அதைப் பகவானை நோக்கிச் செலுத்துகின்றது. தியானத்தில் நாம் வெற்றி பெறுவோமானால் நமக்கு யாவும் கிடைத்து விடுகின்றது.
சித்திகள் ஒரு மனிதனை மோட்ச மார்க்கத்தினின்றும் தவறி விடுமாறு செய்கின்றன. குறிப்பிட்ட இடமொன்றில் மனம் அமைதியுற்றிருக்குமானால், யாத்திரை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
சாது ஒருவரைக் காணும் பொழுதெல்லாம் நீர் அவருக்கு மரியாதை காட்ட வேண்டும். எதிருரைகள் கூறியோ அல்லது மரியாதைக் குறைவான சொற்களாலோ அவருக்கு நீர் அவமரியாதை காட்டலாகாது.
சோம்பலான சிந்தனைகளை ஒதுக்கி வைப்பதற்கு வேலையானது உதவுகின்றது. செய்வதற்கு வேலை ஏதும் இன்றி ஒருவன் இருப்பானாகில் தேவையற்ற சிந்தனைகள் அவனுடைய மனத்தில் வேகமாக எழுகின்றன.
மனம் தானாகவே அமைதியுறுமாகில், பின் பிராணாயாமம் எவ்வாறு அவசியமாகும்.
மனிதப் பிறவியில் சுகம் என்பது இல்லவேயில்லை. உலகம் உண்மையிலேயே துயர் நிறைந்துள்ளது. இங்கு சுகம் என்பது பெயரளவிலேயே உள்ளது.
குருதேவருடைய கிருபை யாருக்குக் கிடைத்துள்ளதோ அது ஒன்றே அவனுக்குச் சுகம் தரும் விஷயம்.
உமக்குத் தெரியுமே, தண்ணீரின் இயல்பு கீழ்நோக்கிப் பாய்வதாகும். ஆனால் சூரியனுடைய கிரணங்கள் அத்தண்ணீரை வானத்திற்கு உயர்த்தி விடுகின்றன.
அதேபோல தாழ்ந்த விஷயங்கள், போக வஸ்த்துக்கள் இவற்றை நோக்கிச் செல்லுவதே மனத்தினுடைய இயல்பாகும்.
ஆனால் பகவானுடைய கிருபையினால் அத்தகைய மனங்களை, உயர்ந்த விஷயங்களை நோக்கிச் செல்லுமாறு செய்ய முடியும்.
– அன்னை சாரதா தேவி